1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (17) அம்பரமே ! தண்ணீரே ! சோறே !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 1, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    17) ஆண்டாள் பாடல் ----- (மார்கழி நோன்பிருக்க நந்தகோபர் மாளிகையில் நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான், பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தல் )

    அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
    எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
    அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகு அளந்த
    உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
    செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
    உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.


    பாசுரப் பொருளுரை


    " இடையர் குலத்தோரான எமக்கு ஆடையும், நீரும், உணவும் தானமாக வாரி வழங்கும் எங்கள் தலைவரான நந்தகோபரே, தாங்கள் எழுந்திருக்கவேண்டும். வஞ்சிக் கொடி போன்ற மெல்லிய உறுதியான இடையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியானவளும், நந்த குலத்திற்கு தீபம் போன்றவளும், ஸ்ரீ கிருஷ்ணரை எங்களுக்களித்தவளுமான , யசோதை பிராட்டியே, எழுந்திருங்கள் ! த்ரிவிக்ரம அவதார காலத்தில், வானளாவி ஓங்கி வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த தேவர் தலைவனே! (கண்ணா) விழித்தெழுவாய்! செம்பொன்னால் செய்த வீரக்கழலை அணிந்த திருவடிகளையுடைய செல்வத் திருமகனே , (பலராமன்)பலதேவா! உன் தம்பியான கண்ணனும் நீயும் இனியும் உறங்காது எழுந்தருளவேண்டும்!"

    பாசுரக் குறிப்பு

    சென்ற பாசுரத்தில் காவலர்களிடம் மன்றாடி,அனுமதி பெற்று நந்தகோபனுடைய இல்லத்தில் நுழைந்துவிட்டார்கள். இப்பாசுரத்தில், வீட்டிலுள்ள அனைவரையும் எழச்சொல்லிப் பாடுவதாக வருகிறது. உள்ளே நுழையத்தான் கெடுபிடிகள், தகுதி சோதிக்கப்பட்டு,உள் நுழைந்து விட்டால் தடையின்றி எங்கும் செல்லலாம். அதுதான் இறைவன் உறையும் இடத்தின் சிறப்பு. அன்புடையார் அனைவருக்கும் அனுமதி உண்டு.நந்தகோபன்,யசோதை,கண்ணன்,பலதேவன் என்று எழுப்புவது முறையே ஆச்சார்யர், எட்டெழுத்துமந்திரம், அம்மந்திரத்தின் பொருள்,அம்மந்திரத்தின் சாரம் ஆகியவையின் உருவகங்களே !ஆயினும் புருஷகார தத்துவத்தின் அடிப்படையில், அவனது பிராட்டியாக இருக்கக் கூடிய நப்பின்னை தேவியை முன்னிட்டேக் கண்ணனை எழுப்ப வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த ஆண்டாள் ,நந்தகோபன் வீட்டில் நுழைந்துக் கண்ணனை அவன் தகப்பனார், தாயார், சகோதரனோடு சேர்த்து எழுப்பியதாகக் கனவு தான் கண்டாள் என்று வைணவ நெறிப் பெரியோர்கள் விளக்குகிறார்கள். அடுத்து வரக்கூடிய 18, 19,20 பாசுரங்களில், நப்பின்னைப் பிராட்டியைத் தனியாகவும், கண்ணனோடும் , மூன்று முறை துயிலெழுப்புகிறாள் ஆண்டாள்.

    இறைவனை அடைய விரும்புகிறவர்கள் நல்லாச்சார்யன் மூலமாக எட்டெழுத்து மந்திரமும், விளக்கமும் உபதேசம் பெற்று அவனது அடியார்களை முன்னிட்டுக் கொண்டே அடைய வேண்டும் என்பது வைணவ இறைநெறி. அதுவே இப்பாசுரத்தின் உட்பொருள்.எல்லோருக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி எளிதாகக் கிட்டக்கூடிய (சௌலப்யம் ) இறைவனின் கருணை குணமும் இப்பாசுரத்தின் உட்பொருள் (உம்பர்கோமான்). யாகங்களில் 3 முறை திரிவிக்கிரமனுக்கு அவிர்பாகம் கொடுப்பது போன்றே முதல் பத்து (3 ஆம் பாசுரம்), இரண்டாம் பத்து (17 ஆம் பாசுரம்), மூன்றாம் பத்து (24 ஆம் பாசுரம்) என்று திருப்பாவையில் மூன்று முறை திரிவிக்கிரம அவதாரத்தைப் போற்றுகிறாள் ஆண்டாள் ! எந்தவொரு மேன்மையான பொருளையும் மும்முறை பெருமை படுத்துவது வழமையன்றோ ? வேதத்திலும் ஓம் சாந்தி சாந்தி சாந்தி : என்றே வருகிறதல்லவா ? உலகங்கள் அனைத்தையும் கருணையால் அளந்து உயிர்களுக்கு உன்னதம் அளித்த அவதாரமல்லவா அதுதான் வாமனனின் பெருமை !

    -அர்த்த பஞ்சகத்தின் கீழ் இப்பாசுரம் ஜீவாத்மா நிலை , நித்யஸூரிகளை அணுகி , குருவைப் பணிந்து சரணடைதல் பற்றிச் சொல்கின்றது. மேலும் குறிப்பாக, அவதார பஞ்சகத்தின் வ்யூஹத்தின் கீழ் வரும் பாசுரம். இறைவனைத் தொழும் போது , அவனுடடைய பரிவாரங்களையும் சேர்த்துத் தொழுவது. கால பஞ்சகத்தில் பகவத் ஆராதனம் செய்ய வேண்டிய காலம் உபாதானம் (சங்கவ காலம்) - காலை 8.25 முதல் 10.48 வரை- செய்ய வேண்டிய இறைத்தொண்டுகள் - பூக்கள், பழங்கள் மற்றும் இறையடியார் உண்ணும் உணவு ஆகியவற்றைச் சேகரித்தல்.
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    ஆடையுடன் சோறும் நீரும் இல்லையென
    அடி பணிந்தார்க்கீந்து அறம் வளர்க்கும்
    கொடியுடைய கோவலன் நந்தனே எழுவீர் !
    கொடியிடை மகளிர்க் கெலாம் நாயகியாய்
    நடுவில் நின்றொளிரும் ஆயர்குடி விளக்கே
    துடியிடையீர் அரசி யசோதா விழித்திடுவீர் !
    நெடுவானம் துளைத் தெழுந்த உருவோடு
    அடியிரண்டால் அனைத் துலகும் அளந்த
    நெடுமாலே வானோர்கள் தலைவா எழுவீர் !
    அடியிலே வீரப் பொற்கழல் அணிந்துள்ள ,
    மிடுக்குடை வலிய பலராமா நீருமுந்தன்
    துடுக்குடைக் குறும்புத் தம்பிக் கண்ணனும்
    விடிந்தது உறக்கம் கலைத்து எழுந்திடுவீரே !

    அம்பரம்- ஆடை. அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா - இல்லையென வந்தவர்க்கு உடை, குடிநீர், உணவு இவையளித்து தர்மம் காக்கும் அரசன் நந்தன். நந்தகோபர் நிறைய தான தர்மங்கள் செய்பவர். கணக்கில் அடங்காத அளவு துணி மணிகள், சோறு தண்ணீர் என்று தானம் செய்கிறார். இம்மூன்றில் ஏதாவது ஒன்றைக் கேட்டால் கூட, மற்ற இரண்டையும் சேர்த்தே வழங்குவார் நந்தகோபர். ஆகவே அவர் எம்பெருமான். போவான் போகின்றவர்களைப் போன்று, நந்தகோபர் கொடுப்பதன் மேன்மையொன்றையே நாடி கொடையளிப்பவர், புகழை விரும்பியல்ல ! அதனால் தான் 'அறஞ்செய்யும் ' என்று அழுத்தம் கொடுத்தாள் ! இடக்கை கொடுப்பது வலக்கைக்குத் தெரியாத வண்ணம் கொடுப்பதே சிறப்பு. இன்றைக்குப் பலர் ஒரு சிறு தண்ணீர்ப்பந்தல் வைப்பதைக் கூட ஏதோ பெரிய காரியம் சாதித்தது போல விளம்பரத்துடன் செய்வதைக் காண்கிறோமல்லவா ?

    அம்பரமே! தண்ணீரே! சோறே!
    என்று ஏகாரம் போட்டு அவர் செய்யும் தான தர்மங்களை சொல்கிறாள் . இவ்வளவு செய்கிறீர்கள், நாள் படக் கெடக்கூடியவற்றை தானம் செய்வதை விட ,எங்களுக்கு உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் என்றும் மாறாத கண்ணனே அவனைத் தரக்கூடாதா என்று வினவுகிறாள் !

    கொம்பு அனார் - கொம்பினை (கொடி ) ஒத்த , இவ்விடம் கொடியிடையார் மகளிரைக் குறிக்கும், கொழுந்து- கொடியின் உச்சியிலிருக்கும் பகுதி. ஒரு செடியின் வளர்ச்சியும், வறட்சியும் அதன் கொழுந்தின் நிலையால் உணரலாம். கோவலர்க் குடி பெண்களின் உயர்ச்சியை விளக்கும் வகையால், வஞ்சிக்கொம்பு போன்றவள்,அவர்களுக்குத் தலைவியாக இருப்பவள், நந்தகோபனுடைய மனைவியானவள், கண்ணனின் அன்னை யசோதையே அல்லவா ? ஆதலால் உயர்ந்தவள் .

    குல விளக்கே
    ஆயர்குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே எம்பெருமாட்டி அசோதாய் அறிவுறாய்- எமக்குத் தலைவியானவளே யசோதைப் பிராட்டியே, இங்கே எழுந்திராய் என்று சொல்லாமல் அறிவுறாய் என்றது ,ஒரு பெண்ணினுடைய மனத்துயரம் இன்னொரு பெண்ணுக்கன்றோ தெரியும்! இங்கே ஆயர்குலப் பெண்களுக்குக் கண்ணனைத் தரவேண்டுமென பெண்ணான உனக்குத் தெரியாதா! எனவே உணர்வாய் (அறிவுறாய்)

    அம்பரம்- வானம், ஊடு அறுத்த-அதைக் கிழித்து வளர்ந்த உலகளந்த- வாமனனாக வந்த திரிவிக்கிரம அவதாரம் 3 ஆம் பாசுரத்தில் வந்த அதே குறிப்பு ! எப்படி ஒரு தாயானவள் உறங்குகிற தன் குழந்தையைத் தழுவிக்கிடப்பாளோ, அப்படி நல்லவன், தீயவன், பணிந்தவன், பணியாதவன் என்றெல்லாம் எந்த வேறுபாடும் கருதாமல் எல்லார் தலையிலும் தன் திருவடிகளை வைத்தானே என்று வாமன அவதாரத்தை ஆண்டாள் மிகவும் சிலாகிக்கிறாள் ! "அன்றைக்கு எல்லாவிடத்தும் நீயே சென்று அருள் செய்தாய், இன்றோ நாங்கள் உன் வீடு தேடி வந்து நிற்கிறோம், கண்விழித்து எங்களுக்கு அருளக்கூடாதா?",என்று வினவுகிறாள்.

    உம்பர் கோமானே- தேவாதி தேவா, செம்பொற் கழலடிச் செல்வா- பொற்கழல் அணிந்த பலராமன். உம்பியும் நீயும் உறங்கேல் - பலராமனாகிய நீயும், உன் தம்பியாகிய கண்ணனும் தூக்கத்தை விட்டு எழுங்கள்.
    இவர்கள் எழுப்பியும் கண்ணன் எழுந்திருக்கவில்லை. பிறகுதான் இவர்களுக்குத் தங்கள் தவறு புலப்படுகின்றது. வரிசைப்படி கண்ணனுடைய தமையனான பலராமனை அல்லவோ முதலில் எழுப்ப வேண்டும் – அவன் எழாத போது கண்ணன் எப்படி எழுந்திருப்பான் ? இறைவனைக் காட்டிலும் அவன் அடியவர் சிறந்தவரன்றோ ? சென்றால் குடையாய், அமர்ந்தால் சிங்காதனமாய்,நின்றால் மரவடியாய்,கடலில் தெப்பமாய், இருளில் விளக்காய், பள்ளிகொள்கையில் பூம்பட்டு அணையாய்- ஆதிசேஷனே அனைவரிலும் சிறந்த இறையடியான் அன்றோ ? எனவே பலராமனது அடியினைப் போற்றிப் பாடுகிறார்கள்.
    பலராமன் கண்ணனுக்கு இந்தப் பிறவியில் அண்ணனாகப் பிறந்து விட்டதால், கண்ணன் அவனிடம் பணிவோடு நடக்கிறான் . அதனால் பலராமனை கட்டி அணைத்து தூங்குகிறானாம்.இராமாவதாரத்தில் சீதையைப் பிரிந்து பல நாள் இருந்தவன், இலக்குவனாய் வந்த ஆதிசேஷன் போர்க்களத்தில் மூர்ச்சையுற்ற போதில்,"இப்போதே உயிர்துறப்பேன்!" என்று சொன்னதை அறிந்த பலராமனோ கண்ணனாகிய நாராயணனுக்கு எப்போதும் அடிபணிந்து பழக்கப்பட்டதில், கண்ணனை விட்டு விலக முடியாத ஆற்றாமையால் அவனை அணைத்தபடி உறங்குகிறான். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தூங்கும் அழகை அனுபவித்து ஆச்சர்யப்பட்டு சொல்கிறாள்,ஆண்டாள் !
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள்

    ஆகாயம் என்பதுவும் ஓங்கார வடிவம் !
    ஆகாரம் என்பதோ பரத்துவத்தின் வடிவம்!
    பக்தி, பிரபத்தியினைக் குறிக்கும் நீரோ,
    அகமுருகி செய்கின்ற சரணாகதி வடிவம் !
    ஆகாயம் என்கின்ற ஆன்மசுத்தி வாய்த்து,
    ஆகாரமாம் பரமன் திருவடியை அடைய,
    அகந்தைகள் நீக்குகின்ற இறைஞான நீரை,
    உகந்து உபதேசம் செய்வார் ஆசான்மார்!
    இகபரம் பிரிக்கும் விரஜையைக் கடந்து,
    ஆகாய வைகுண்டப் பரமபதம் நுழைய,
    அகப்பசி போக்கும் இறைஞானச் சோற்றை,
    இகவுலக சீவர்க்கு ஆசானும் அளிப்பார் !
    இகவுலக அடியார்க்குத் தாயென விளங்கி,
    பகவானை அறிவிக்கும் மூல மந்திரத்தை,
    அகத்தி லிறை உணர்வுள்ள அடியார்களுக்கு,
    மகிழ்ந்துமே ஆசான் உபதேசம் செய்வார்!
    தகுந்தோர் தகார் என்ற வேற்றுமைகளற்று,
    தகவோடு தன்னருள் எல்லோர்க்கும் ஈந்து,
    ஆகாய வைகுண்டம் உறைகின்ற இறையை,
    அகலாது எப்போதும் மனதிருத்தி வாழும்
    அகவன்பு குறையாத அடியார் குழாத்தில்,
    அகமொன்றித் தாமும் இணைந்திடும் சீவர்,
    பகவான் பணியென்னும் பேற்றினை அடைய,
    வெகுவின்ப வைகுண்ட நிலையில் சேர்வாரே !
    இகவுலகின் சீவர்கட்கு ஆசானே பெருமான் !
    உகந்து அவரளிக்கின்ற மந்திரமே தாயார் !
    அகமுறை இறையே மந்திரத்தின் பொருளும் !
    அகலாத அடியார்கள் மந்திரத்தின் சாரம் !
    சுகமளிக்கும் பரமபதம் சீவர்களும் அடைய,
    உகந்தவழி இவ்வுண்மைகள் அறிவது ஒன்றே !

    அம்பரம், தண்ணீர்,சோறு -இம்மூன்றும் மூன்று பொருள்களைக் குறிக்கும் வகையில் வருகின்றன. அம்பரம்= வானம்=மூல மந்திரத்தின் பிரணவத்தைக் குறிக்கும். தண்ணீர் என்பது சீவாத்மாவை உணர்த்தும் "எதுவும் எனதில்லை" என்ற நமோ எனும் பதத்தைக் குறிக்கும். சோறு =பரத்துவமாகிய நாராயண பதத்தைக் குறிக்கும் . இவை மூன்றும் குறிப்பது, மூல மந்திரமாகிய பிரணவம்+ நமோ+நாராயணாய என்பதே.

    நீரில்லாமல் உயிரேது ? எனவே தண்ணீர் வைணவத்தின் தாரக மந்திரத்தைக் குறிப்பதாகச் சொல்லலாம் .உணவின்றி உடலைப் பேணுதலெப்படி ? எனவே சோற்றைப் போஷக மந்திரமான த்வய மந்திரத்துக்குச் சொல்லலாம். நீரும் சோறுமிருந்தாலும்"ஆடையில்லா மனிதன் அரைமனிதனாயிற்றே?" எனவே அம்பரத்தை (ஆடையை) போக்ய மந்திரமான (பலன்) சர்மஸ்லோகத்திற்குச் சொல்லலாம்.

    மேலும் அம்பரம் என்பது ஆத்மசுத்தியைக் குறிக்கும். தண்ணீர் என்பது அதை அளிக்க வல்ல பக்தியுடன் கூடிய சரணாகதியையும், சோறு என்பது எல்லாவற்றுக்கும் சத்தாய், வித்தாய், இருக்கும் பரமாத்மாவையும், அவருக்குத் தொண்டு செய்வதான வீடுபேற்றையும் குறிக்கும்.

    இன்னொரு விதத்தில் அம்பரம் என்பது வைகுண்டமாகிய பரமபதத்தைக் குறிக்கும். தண்ணீர் அங்கே ஓடும் விரஜா நதியைக் குறிக்கும் . (இகவுலகையும், பரவுலகையும் பிரிப்பதாகச் சொல்லப்படும் நதி விரஜா ).சோறு என்பது உபநிடத ஞானத்தைக் குறிக்கும்.

    அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா - இப்படி எல்லா இறை ஞானத்தையும் சீவாத்மாவிற்கு அளிக்க வல்ல ஆச்சார்யன் , ஆசான், குரு, பெருமானையே நமக்குக் காட்டித்தரக்கூடியவர் . எனவே அவர் பெருமானுக்கும் பெருமான் எம்பெருமான். (இவ்விடம் நந்தகோபாலா என்பதன் உட்பொருள் ஆச்சார்யர் )

    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே யசோதாய்
    - இறைவனை தியானித்து இறையடி அடைய குருவானவர் உபதேசம் செய்யும் மந்திரமே அடியவர்களென்னும் கொடி செழித்து வளர்வதற்குப் படர்வதற்கான கொம்பாகும், பற்றுக்கோடாகும். அப்படிப்பட்ட மந்திரத்துலேல்லாம் தலையாய (யசஸ் )புகழ்மிக்க எட்டெழுத்து மந்திரமே, வைணவ இறைநெறியின் ஆதாரம், விளக்கொளி.

    எம்பெருமாட்டி- கண்ணனைத் தன் குழந்தையாக அடைந்த யசோதை எல்லோர்க்கும் கண்ண அமுதம் கிடைக்கச் செய்ததைப் போல், எம்பெருமானாகிய இறைவனை எல்லோரும் அடைய வழிகாட்டும் தாயாக விளங்கும் மூலமந்திரம் . அறிவுறாய்- அதை அடியார்களுக்கு அறிவுறுத்துபவர், ஆசான்

    உலகளந்த உம்பர்கோமானே - திரிவிக்கிரம அவதாரத்தில் அனைத்து உலகங்களையும் இறைவன் அளப்பதற்குத் திருவடி பதித்த போது நல்லவர்,தீயவர், அருளுக்குத் தக்கவர், தகாதவர் என்றெல்லாம் வேறுபாடு கருதாமல், எல்லோருக்கும் ஒன்று போலே, தனது திருவடியருள் பொழிந்தார். எனவே தான் அவர் கோமான். 3 ஆவது பாசுரத்தில் அவரை உத்தமன் என்று ஆண்டாள் சொல்லுவதை நினைவு படுத்திக்கொள்ளலாம்.

    செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா- கண்ணனாகிய திருமாலின் திருவடியில் என்றும் தங்கி பணி செய்யும் முதல் அடியானாகிய ஆதிசேஷன். - பலவாறு தன் ஆண்டானுக்கு அடிமையாய் இருந்து இறைப்பணி செய்யும் அணுக்க அடியவர் ஆதிசேஷனைக் குறித்து இறைவனின் பணியையேச் செய்யும் இறைவனின் அடியார்களுக்கு உரிய பெருமை விளக்கப்படுகிறது.இறைவனைப் போன்றே பெருமை உடையவர்கள் இறையடியவர்கள்.இறைவனையும் இறையடியாரையும் பிரிக்க முடியாது என்பதே உட்பொருள்.
     
    periamma likes this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பாகவதம், விஷ்ணு புராணம் எதிலும் நந்தகோபர் தானம் பண்ணியதாக வரலாறு இல்லை.ஆனால் பெரிய வள்ளல் என்கிறாள் ஆண்டாள்.நந்தகோபரின் பிள்ளையான கிருஷ்ணன் திரௌபதிக்கு வஸ்திரம் அளித்ததும், துர்வாசர்,சீடர்களின் பசியை நீக்கியதும் அனைவரும் அறிந்தது.கண்ணனின் பெருமையை நந்தகோபரிடம் ஏற்றிச் சொல்கிறாள் ஆண்டாள்.
    திருப்பாவையில் மூன்று முறை வாமனர் பேசப் படுகிறார்..உலகளந்த பெருமாளின் சிறப்பு தான் என்ன?
    எம்பெருமான் உலகளந்த பொது மேலுலகம் வரை அவன் திருவடி சென்றது.வளரும்போது நக்ஷத்திரங்களில் கூட்டம் முடிக்கு முத்துக்களான turban கட்டின மாதிரி இருந்ததாம்.அதற்கும் மேலே வளர்ந்த பொது நக்ஷத்திரங்கள் கழுத்துக்கு கேற்ற முது மாலையாய் பிரகாசித்தன.பின்னர் இடுப்புக்கு மேகலை போலும் ,கடைசியில் பகவானின் காலுக்கு சிலம்பு போலும் காட்சி அளித்ததாக வேதாந்த தேசிகன் வர்ணனை நினைவுக்கு வருகிறது.
    ' செம்பொற்கழலடிச் செல்வா ' என்று பலராமனை திருவடியைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?
    ஆறு குழந்தைகள் மாண்டபின் பலராமன் ஏழாவதாக தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசித்து,பலவந்தமாக வெளியே சங்கர்ஷணம் செய்யப்பட்டு( இழுக்கப்பட்டு) ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டார்.எனவே தான் பலராமனுக்கு சங்கர்ஷணன் என்று பெயர்.
    தேவகி கர்ப்பத்தில் பிரவேசித்து, அந்த கர்ப்பத்துக்கு ஒரு ரக்ஷை கட்டினான் பலராமன்.எனவே பலராமன் பிரவேசம் தான் கிருஷ்ணனை வாழ வைத்தது.அப்படி வாழ வைத்த திருவடியை 'செம்பொற்கழலடி செல்வா'என்று சிலாகித்துக் கூறுகிறாள் ஆண்டாள்.
    அம்பரமே தண்ணீரே' என்பது அறிஞர்களால் செவ்வனே விளக்கப்பட்டுள்ளது.
    பகவானே ஒரு தண்ணீர்ப் பந்தல் என்கிறது வேதம்.
    ஒரு யுவதி தண்ணீர் பந்தலில் எல்லோருக்கும் தீர்த்தம் கொடுத்துக்கொண்டிருந்தாள்.அவள் கொள்ளை அழகு.ஒருவன் அந்த பக்கம் போனான்.தீர்த்தம் கிடைக்கும்.ஆனால் அதன் பின் அதிக நேரம் நின்றால் சந்தேகம் வந்து விடும்.அவன் அஞ்சலி போல் கை வைத்துத் தீர்த்தம் கேட்கிறான்.அவளும் வேறு வழியில்லாமல் கொடுக்கிறாள்.இவனோ பருகவே இல்லை.அதிக .நேரம் அந்த பெண்ணைக் காண chance கிடைத்தது.
    யார் அந்த யுவதி?
    யுவதி என்பது பரமாத்மா.தாஹ் விடாய்க்கு வந்தவன் ஜீவாத்மா.அனுகிரஹமமாகிய தீர்த்தத்தைக் கொடுக்கிறான் பரமாத்மா.பரமாத்மாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் இருப்பதால் அனுகிரக மழை பொழிவதைப் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.பகவானே யுவதி. மோஹனாவதாரம் எடுத்தவன் அல்லவா?அவனே அன்னம், அவனே தீர்த்தம், அவனே உயர்ந்த ஆகாசம்.யசோதா திருமந்திர ரூபமாகக் காட்டப் படுகிறாள்.

    இந்த பாசுரம் சொல்லும்போது பாகவத பிரதிபத்தி பற்றிக் கூறுதல் முக்கியம்.பாகவதர்களை ஒரு போதும் நகையாடலாகாது.
    சாண்டுக்ய உபநிஷத்தில் ஒரு கதை உண்டு.உஷஸ்தி என்ற முனிவர் தன பத்தினியோடு எங்கோ சென்று கொண்டிருந்தார்.அவருக்குத் தாளமுடியாத பசி.அப்போது யானைப் பாகன் ஒருவன் கொள் சுண்டலை தோல் பையில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.வாய்க்குள் விரலைப் போட்டு அதே விரலால் மீண்டும் கொள் சுண்டலை எடுத்து சாப்பிட்டான்.அவனிடம் போய் மகரிஷி'தேஹி' என்று கை ஏந்தினார்.'எச்சில் பதார்த்தம்.தங்களுக்கு எப்படித் தருவது என்று தயங்கினான் பாகன்.பரவாயில்லை என்று அவனிடம் கொள் சுண்டலை வாங்கி கொஞ்சம் சாப்பிட்டுப் பசியாறி மீதியைப் பத்தினியிடம் கொடுத்தார்.
    உஷஸ்தி எச்சில் சாப்பிட்டார் என்று எள்ளி நகைப்பது மிக எளிது.உஷஸ்தி எப்படிப்பட்டவர் என்பதை உபநிஷத் ஸ்பஷ்டமாகச் சொல்கிறது.ஜனகர் யாகம் செய்யும்போது நிறைய பேர் பொருள் தெரியாமல் மந்திரம் சொன்னதைக் கண்டு,'மந்திரத்துக்குப் பொருள் தெரியாமல் செய்தால் பண்ணுபவர், உட்கார்ந்திருப்பவர் அனைவரின் தலையும் வெடித்து விடும் என்கிறார்.உடனே ஜனகர் உஷஸ்தியையே தலைமையாக வைத்து யாகத்தை முடித்தார் என வரலாறு.பிராணனை ரட் சிக்க ஒரு வேளை எச்சில் பதார்த்தம் சாப்பிட்டதன் பரிகாரமாக ஒரு வருஷ உப வாசம் இருந்து ஜெபங்கள் செய்து தோஷத்தைப் போக்கிக் கொண்டாராம் உஷஸ்தி .
    பலராமனை சேவித்து பாகவத பிரபத்தி செய்கிறாள் ஆண்டாள்.

    திருப்பாவையில் 18, 19 20 மூன்று பாசுரங்களும் லட்சுமி சம்பந்தப் பட்டவை.பவித்ராவின் பவித்ரமான வாயால் கேட்போம்.
    ஜெயசாலா 42.
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    புதுப்புது செய்திகள், கதைகள், உங்களது பதிவுகள் வாயிலாக அறிந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. எனது பதிவுகளைப் பொறுமையாகப் படித்துத் , தமிழிலேயே பின்னூட்டம் அளிக்க மெனக்கெடும் உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி !
    நாளை வெள்ளிக்கிழமை, திருமகளைப் பற்றிப் பேச சரியான நாளே ! ஆவலோடு இருக்கிறேன், உங்கள் பதிவைக் காண !
     
    periamma likes this.

Share This Page