1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (16) நாயகனாய் நின்ற !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 30, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    16) ஆண்டாள் பாடல்-- ( மார்கழி நோன்பிருக்க நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டி)

    நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
    கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
    வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
    ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
    மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
    நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

    பாசுரப் பொருளுரை


    "ஆயர்பாடியில் இடையர்குல மக்களுக்குத் தலைவனாய், அரணாய், அரசனாய் இருக்கும் நந்தகோபன் எழுந்தருளியுள்ள மாளிகைக்குக் காவலானாய் நிற்பவரே ! மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோரண வாயிலைக் காத்து நிற்பவரே ! ஆயர்பாடியில் வாழும் கோபியருக்கு வேண்டி, மாணிக்க மணிகள் பதிக்கப்பட்ட வாயிற்கதவைத் திறந்திடுக ! உணர்வதற்கரிய அதிசய குணங்களை உடையவனும், அதிசயமான காரியங்களை நிகழ்த்துகின்ற மாயனும், நீலத் திருமேனி கொண்ட மணிவண்ணனும் ஆன கண்ணன் , நாங்கள் நோற்கும் பாவை நோன்பிற்கான பறையை அருளுவதாக எங்களுக்கு நேற்றே வாக்களித்துள்ளான் ! அக்கண்ணபிரானை துயிலெழுப்ப நாங்கள் தூய உடலோடும் உள்ளத்தோடும் வந்திருக்கிறோம்.ஆகவே, மறுப்பு தெரிவிக்காமல், காவலனான நீங்கள் எமது அன்னையைப் போன்று கருணை வைத்து ,, பிரம்மாண்டமான வாயிற்கதவைத் திறந்து, நாங்கள் நோன்பிருந்து கண்ணனை வணங்கி வழிபட அனுமதி தர வேண்டும்."

    பாசுரக் குறிப்புரை


    5 X 5 + 5 இல் நான்காம் ஐந்தின் தொடக்கம். இதுவரை கீழுலகில் இருக்கின்ற இறைவன் அடியார்களை நோன்பிருக்க வருமாறு அழைத்துப் பாடுவதாக பாசுரங்கள் வந்தன. 16 - 20 வரையிலான ஐந்து பாசுரங்களால், மேலுலக நிலையில், நந்தகோபரின் வீட்டு நபர்களை எழுப்புவது முதல் கண்ணனையும் எழுப்புவது வரை அமைந்த வடிவில் வருகின்றன.இதில் கண்ணனின் தந்தையான அரசன் நந்தகோபனுடைய வீட்டுக் காவலர்களோடு உரையாடி, வாயில் கதவுகளைத் திறக்க வேண்டுகிறாள். வைணவ நெறியின் மிக உயர்ந்த தத்துவங்களாகிய இரஹஸ்யத் த்ரயம் (மூல மந்திரம், த்வய மந்திரம், சர்ம ஸ்லோகம்) குறிக்கின்ற பாசுரம்.

    இதுவரை பத்து கோபிகைகளாக உருவகப்படுத்தப்பட்டவை 10 இந்திரியங்கள், புலன்கள். (செய்புலன்-கர்மேந்திரியம் 5, உணர்புலன்-ஞானேந்திரியம் 5) இந்தப் பாசுரத்தில் குறிக்கப்படுவது இவை பத்தையும் பின்னிருந்து இயக்கும் மனம். மனம் தான் இறைக்கருணையை ஏற்கும் கலன் (பாத்திரம்) ஆயினும், அஞ்ஞானம் என்னும் அகந்தை மமதை அறிவீனத்தின் இருளால் போர்த்தப்பட்டிருப்பது நமது மனம். அதுவே இறைவனை அடையத் தடையாயிருக்கும் கதவு. குரு தொடர்பினால் அந்த இருளை நீக்கித் தாளைத் திறந்திட்டால், நமது இதய கமலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைக் காணலாம்.

    குரு மூன்று மந்திரங்களை இரகசிய உபதேசமாக உபதேசிப்பார். திருமந்திரம், மூலமந்திரம் என்று அழைக்கப்படும் எட்டெழுத்து மந்திரந்தை மந்த்ர இரஹஸ்யம் என்றும், சர்மஸ்லோகத்தை விதி இரஹஸ்யம் என்றும் த்வய மந்த்ரத்தை அநுஸந்தான அநுஷ்டான இரஹஸ்யம் என்றும் கூறுவார்கள்.

    'கோ' என்பவன் அரசன். அரசர்களெல்லாம் விஷ்ணுவாகிய நாராயணனின் அம்சம். இங்கே 'கோ' என்பதே அரசர்க்கரசனாம் ஆண்டவனைக் குறிக்கிறது எனவேதான் கோ உறையும் இல் 'கோயில்' ஆவது தாரக மந்திரமான திருமந்திரம்.

    கொடி என்று சொல்வது பெண்மையைக் குறிப்பது,கொடியிடையார் இல்லையா ? பெண்டிருள் மேன்மையான தாயார் திருமகளைக் குறிக்கும் 'ஸ்ரீ' ஸப்தம் த்வய மந்திரத்தில் தானே தோன்றுகின்றது ? ஆகவே தான் 'கொடி தோன்றும் வாயில்' தாயாய் இறை ஞான அமுதூட்டி சீவர்களைக் காத்து நிற்கும் போஷக மந்திரமாம் த்வயத்தைக் குறிக்கிறது.

    இறைவன் தன் வாய்மொழியாக அளித்த வாக்கு, சரணம் செய்தவர்களைக் காப்பேன் என்னும் உறுதிமொழி.ஆகவே 'வாய் நேர்நதது' சீவாத்மாக்களுக்குப் பலனைத் தருவதாக, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதான, அனுபவித்து சுகமடையச் செய்வதாக விளங்கும் போக்ய மந்திரமாம் சர்மஸ்லோகத்தைக் குறிக்கின்றது.

    அர்த்த பஞ்சகத்தின் கீழ் வரும் இப்பாசுரமும் (16), அடுத்தப் பாசுரமும்(17) ஜீவாத்ம நிலை , நித்யஸூரிகளை அணுகி , குருவைப் பணிந்து சரணடைதல் பற்றிச் சொல்கின்றன . மேலும் குறிப்பாக, அவதார பஞ்சகத்தின் வ்யூஹத்தின் கீழ் வரும் பாசுரம். இறைவனைத் தொழும் போது , அவனுடடைய பரிவாரங்களையும் சேர்த்துத் தொழுவது.

    கால பஞ்சகத்தின் கீழ் 'இஜ்யை' எனும் இறைவனைத் தொழுதலாகிய ஆராதனை காலத்தைக் குறிக்கும் பாசுரம். ஐந்து உணர் புலன் (ஞானேந்திரியம்) ஐந்து செய் புலன்களோடு (கர்மேந்திரியம்) பதினொன்றாம் புலன் மனம். அதுவே சீவாத்மாக்கள் இகவுலகின் பிடியில் கிடந்துழல கட்டுக்களை விதிக்கும் புலன். அந்தக் கட்டிலிருந்து விடைபெற, மனத்தைச் சூழ்ந்துள்ள இரஜோ,தமோகுணங்கள் நீங்கி இறையனுபவம் பெற, இதய கமலத்தில் உறைகின்ற இறைவனைத் துதித்தே (ஆராதனை செய்தே ) வீடுபேறடைய வேண்டும்.

    இப்பாசுரத்தின் உட்பொருளாவது : ரஹஸ்யத் த்ரயம் என்கிற நாராயண மூல மந்திரம், த்வய மந்திரம், சர்மஸ்லோகம் இந்த மூன்றையும் உபதேசித்து, விளக்கி, இறைவனின் திருவடிப் பேறினைப் பெறுவதற்கு உதவியருளுமாறு அடியார் ஆச்சார்யர்களை வேண்டுவது. இவ்விடம் வாசகர்களுக்கு மீண்டும் ஒன்றை நினைவுபடுத்த விழைகிறேன். நான் இங்கே பதிவது எழுத்துக்களால் ஆன சொல் வடிவம் மட்டுமே. இவைபோன்ற அரிய இறைவிளக்கங்களை, குருவின் மூலமே ஒருவர் பெற வேண்டும். இதனை வாசகர்களும் உணர்ந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
     
    periamma and jskls like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    ஆவினம் காக்கும் கோபர் கூட்டத்தின்
    கோவலனாம் கொடியுள்ள நந்தன் வீட்டுக்
    காவலரே, இரத்தினம் பதித்த உங்களின்
    இவ்வாயிற் கதவைத் திறந்து விடுங்கள் !
    கோவலன் மகனாம் நீலக்கல் வண்ணன்,
    ஆவினம் மேய்க்கும் சிறுமிகள் நாங்கள்
    ஆவலாய் நோற்கும் பாவை நோன்பிற்குத்
    தேவையான பறை அதனைத் தானும்
    ஈவதாய் நேற்றே உறுதி அளித்தான் !
    அவனது வாக்கினை நம்பியே நாங்கள்
    இவ்விடியல் காலத்தே நீராடி வந்தோம் !
    நாவால் திருப்பள்ளி எழுச்சியும் பாடி,
    அவனையும் உறக்கம் நீக்கிட வந்தோம் !
    செவியுற்று எம்மன்னை போன் றன்புள்ள
    காவலரே- எதுவும் மறுப்பு சொல்லாது,
    கோவலன் வீட்டு நெடுங்கதவு இதனை
    பாவையர் எமக்குத் திறந்து உதவுங்கள் !

    நாயகனாய் நின்ற நந்தகோபன் - ஆயர்குலத்தாருக்கு அரசன் நந்தகோபன். கண்ணனுடைய பிறப்பிடம் மதுராவானாலும்,அவனுக்கு அடைக்கலம் தந்தாற்போல் இதுகாறும் காத்து வந்தவன் கோகுலத்து நந்தனேயல்லவா ? ஆகவே தான் நந்தகோபனுக்கு ஏற்றம் தந்து அவனை நாயகன் என்று சொல்லுகிறாள். இங்கே காவலராய் இருக்கும் துவார பாலகர்களைக் குறித்தாளென்றும் சொல்லலாம். இடையர்களுக்கெல்லாம் பெரும் இரத்தினமாயிருக்கும் கண்ணனைக் காவல் செய்யும் பெரும் பொறுப்பிலிருக்கிறார்கள் அல்லவா ?

    கோயில் காப்பானே, கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே
    - அரசன் வீட்டுக் காவலர்களே.நந்தகோபன் ஆயர்பாடிக்கு அரசன், 'கோ' ஆகவே அவன் மாளிகை அரண்மனை,அதாவது 'கோ-இல்' அரச வீடு !காவல் கட்டு அதிகமிருப்பது இயல்புதானே ? கோபுர வாசல் போன்ற வெளிப்புறத்து வாயிலைக் காப்பவன்-கோயில் காப்பானென்றும், கொடிக்கம்பத்தினருகிலுள்ள வாசல்போன்ற உட்புற வாயிலைக் காப்பவன் - வாயில்காப்பானென்றும் இங்குக் கூறப்படுகின்றன. (ஆயர்பாடிக்குப் புதிதாக வருபவர்களுக்கு தங்களுக்கு உதவி செய்யக்கூடிய நந்தனுடைய வீடு எதுவென்று எளிதில் அறிந்து கொள்வதற்கு கொடியொன்று கட்டப்பட்டிருக்குமாம் ! தெய்வமுறையும் கோயிலிலும் கொடிமரமுண்டு, அரசனாகிய 'கோ'வின் 'இல்'லிலும் கொடிமரமுண்டு. தெய்வத்தைப் போலவே தன்னுடைய குடிமக்களைக் காப்பதில் கருத்துடையவர் அரசனென்று குறிப்பது இது. ) காப்பானே என்ற சொல்லாடலால் என்னவோ அவர்களை இழித்துச் சொல்லுவதாகக் கருதக்கூடாது ! கண்ணனைக் காவல் செய்து , நாடோறும் தரிசிக்கும் பேறுற்றவர்களென்ற மதிப்போடு தான் இப்படி விளிக்கிறாள்!

    மணிக் கதவம்- உயர்ந்த நவரத்தினங்கள் பதித்தக் கதவு. தர்மம் ஓங்கியிருந்த திரேதாயுகத்தில் அச்சப்பட வேண்டாம், கதவைப் பூட்டவேண்டிய அவசியமில்லை. ஆனால் துவாபர யுகத்தில் கண்ணனுக்கு கம்ஸனுடைய தீயெண்ணத்தால் ஆபத்து வந்தவண்ணமிருப்பதால், கதவு பூட்டித்தானிருக்கும் !

    ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணி வண்ணன்- கம்சனுடைய அரக்கப் படையினரல்லர்,நாங்கள் ! ஆயர்குலச் சிறுமிகள் ! அவன் எங்களுக்கு நோன்புப்பொருளான பறைக்கருவி தருவதாகச் சொல்லியுள்ளான். நென்னல்- நெருநல் நேற்று , வாய் நேரந்தான்- உறுதி சொன்னான், என்னைச் சரணம் செய், கவலை வேண்டாம், நான் காப்பாற்றுவேன்- கீதை.

    தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் - நீராடித் தூய்மையாய் வந்து திருப்பள்ளியெழுச்சி பாடுதல். நாங்கள் நல்லவர்கள் தான், காவலரே ! எம்மைப் பற்றிக் கவலைப் படாதீர்கள் ! புறவுடல் சுத்தத்தோடு, அகவழகாகிய மனம்,வாக்கு,செயலால் தூயவர்களாய் வந்துள்ள நாங்கள் கண்ணனுக்குத் திருப்பள்ளியெழுச்சியும் பாடுவோம் !

    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே - நாங்கள் நல்லவர்களே என்பதை உங்கள் மனம் அறிந்தாலும்,மீண்டும் மீண்டும் எங்களை சோதனை செய்யாமல்,வாயினால் எம்மோடு வாக்குவாதம் செய்யாமல், மேலும் மேலும் தோண்டித் துருவாமல் , உள்ளே செல்ல அனுமதியுங்கள்.

    அம்மா நேய நிலைக் கதவம் நீக்கேலோர் - ஒரு அன்னையைப் போல் கருணை வைத்துக் கதவு திறவுங்கள். இன்னொரு கருத்து, கண்ணனைக் காவல் செய்வதில் காவலரைக் காட்டிலும் அந்த மாளிகையின் பெரிய கதவுகளுக்கு இன்னும் ஈடுபாடும் அக்கறையும் அதிகமிருப்பதால், ஆயர் சிறுமிகளால் தாமே அதைத் தாழ் நீக்க முடியாது எனவே காவலரையே அக்கதவின் தாழைத் திறந்து ,தள்ளி உட்செல்ல அனுமதி கேட்கிறாள்,ஆண்டாள் ! இந்தக் கோபிகைகளால் எப்படி இந்தக் கதவுகளைத் தாமே திறக்கவியலாதோ, அது போன்றே,விதிவிலக்கான சிலரைத் தவிர, எல்லோராலும் தானே ஞானம் பெறுவது இயலாது. குரு மூலமே அது சாத்தியம். ஆகவே அவரின் தயவை நாடிப் பெற வேண்டும்.
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள்

    முன்னை வினைப்பயனால் பிறவி பலவுற்று
    ஒன்றும் அறியாமல் உழலும் உயிர்களுக்கு,
    என்னடியில் பணிந்து சரணம் செய்திட்டால்
    என்றன் கருணையினைக் காட்டிக் காப்பாற்றி
    நன்றாம் வீடுபேறும் தந்தருள்வேன் என்றுமே,
    முன்னமே இறைவன் உறுதியினைத் தந்தானே !
    எண்ணத் தூய்மையும், சொல்லில் வாய்மையும்,
    பண்ணும் செயலிலே நேர்மையும் என்னுமிவை ,
    மூன்றும் கொண்டு நல்லாசானைப் பணிந்தோம் !
    இன்னும் எங்களின் தகுதியை சோதிக்காமல்,
    ஒன்றாம் இறைவனின் மூல மகாமந்திரமும்,
    நன்மகிழ்ச்சி தரும் த்வயமெனும் மந்திரமும்,
    அன்றே அவனளித்த உறுதி மொழியையும்,
    மூன்றாம் மாபெரும் தத்துவகள் இவற்றின் .
    நன்றான விளக்கங்களை எமக்குச் சொல்வீரே !
    ஒன்றும் பேருண்மைகள் அறியாமல் -பசுவின் .
    கன்றுகள் போன்று இருக்கும் உயிர்க்கெலாம்,
    மன்னனாய்த், தலைவனாய் நின்று காக்கின்ற,
    கண்ணனாம் நாராயணன் அவன் திருவடியைச் ,
    சென்றடைந்து பெறுகின்ற வீடெனும் பேற்றினை,
    நன்றாய் நாங்களும் பெற்றிடவே வேண்டினோம் !
    என்றைக்கும் இறைப்புகழ் பாடிப் பணிகின்றோம் !
    அன்னையர் பிள்ளைக்குக் காட்டும் கருணையைக்
    கொண்டுள்ள ஆசான்மார்,தாங்களும் மனமிரங்கி
    ஒன்றுமறியாத அடியார்களும் இறைப் பேற்றினை
    நன்றாயடைந்திட அருள் செய்திட வேண்டுகிறோம்!

    நாயகன்-எல்லாவற்றிற்கும் தலைவன், இறைவன் , நந்தகோபன்- ஒன்றும் அறியாத உயிர்களையும் காத்தருள்பவன், நிலையான ஆனந்தத்தின் உருவானவன்
    அறை பறை வாய் நேரந்தான்- என்னைச் சரணம் புகுந்தவரைக் காத்து, வீடுபேறு அருள்வேன், என்று நாராயணன் கூறிய சர்ம (உறுதிமொழி ) ஸ்லோகம்.

    ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ I
    அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசII


    நீ செய்யும் தர்மங்களே மோக்ஷ உபாயம் என்பதைக் கைவிட்டு, என் ஒருவனையே சித்தோபாயமாகப் பற்றிக்கொள், நான் உன்னை அனைத்து பாபங்களில் இருந்து விடுவிக்கிறேன்.

    நென்னலே - இராமாவதாரத்தில் விபீஷண சரணாகதியின் போதும் , கிருஷ்ணாவதாரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் வழங்கிய தருணத்திலும் வராஹ அவதாரத்தில் பூமி பிராட்டியிடமும் இறைவன் உறுதி கூறிய செய்தி.

    கோயில்- மூல மந்திரம் (பிரணவம் + நமோ + நாராயணாய) ,தோரண வாயில்- த்வய மந்திரம் (ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே + ஸ்ரீமதே நாராயணாய நமஹ )

    காப்போன்- இரஹஸ்யத் த்ரயத்தை உபதேஸம் செய்யும் நல்லாச்சார்யன்,
    கோயில் காப்போனே ,வாயில் காப்போனே மணிக்கதவம் நேய நிலைக்கதவம் என்று இருமுறை சொல்வது
    இரஹஸ்யத் தராயத்தின் மந்திரங்களின் முதல் அடியையும் (பூர்வபாகம்)இரண்டாம் அடியையும்(உத்ராகம்) குறிப்பில் உணர்த்துவதாம்.
    ப்ரணவம் + நமோ= முதல் பாகம், நாராயணாய = இரண்டாம் பாகம்
    ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் பிரப்த்யே= முதல் பாகம், ஸ்ரீமதே நாராயணாய நம = இரண்டாம் பாகம்
    ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ= முதல் பாகம்
    அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச= இரண்டாம் பாகம்
    இவையாவும் சீவர்களின் மீதில் பரமனுக்கு இருக்கும் கருணையைப் பற்றியே சொல்கின்றன. தன்னை அடையும் வழியும் தானே என்று இந்த மந்திரங்களால் இறைவன் உறுதி செய்கிறான்.
    "பற்றுக பற்றற்றான் தாளினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு " என்று வள்ளுவமும் சொல்கிறதல்லவா ?

    ப்ரமேயத்தை (பரமாத்மா, இறைவன்) அடைவதற்கு இந்த மந்திரங்கள் பிரமாணம் (வழிமுறை) . அவற்றை நமக்கு (சீவாத்மாக்களுக்கு) உபதேசம் செய்து சரணாகதி அடைய வழி செய்பவரே ப்ரமாதா (இறைவனை அறிந்து கொண்டவர்) ஆகின்ற ஆச்சார்யர்.இந்த மந்திரக்கதவுகளைத் திறந்தால்தான், இவற்றின் மெய்ப்பொருள் கண்டால் தான், அதிலுறையும் இறையைக் காண்பது இயலும். ஆகவே இறைநெறியையும் அதன் மூலம் இறைவனையும் காக்கும் பணியில் என்றும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆச்சார்யர்களை வணங்கி அவரது கருணையால் இரஹஸ்ய ஞானம் கைவரப்பெற்றால் தான் வீடுபேறு அடைய வழி பிறக்கும்.

    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா- அடியார்களுக்கு அன்னையைப் போல விளங்கும் ஆச்சார்யரே, இறைவனைச் சரணமடைய நாங்கள் தகுதியானவரா என்று மேலும் மேலும் கடினமாக சோதிக்காமல், கருணையுடன் உதவுங்கள்.

    ஆயர் சிறுமியரோம் - ஒன்றும் அறியாதவர்களாய் இருக்கும் சீவாத்மாக்களுக்கு
    மணிக்கதவம் தாழ் திறவாய்- ரஹஸ்யத் த்ரயம் - மூல, த்வய மந்திரங்களோடு, சர்மஸ்லோகமும் ஆகிய இம்மூன்றின் விளக்கங்களை அருளி, நல்லாசானாகிய நீங்கள் எங்களுக்கு இறைவன் திருவடியைக் காட்டி, சரணாகதம் செய்வதன் மூலம் வீடுபேறு கிடைக்கச் செய்யுங்கள். மூல, த்வய மந்திரங்களின் பொருளை விளக்கி. இறைவனைக் காணவிழையும் அடியவர்களுக்குக் கதவுகளாயிருக்கும் இம்மாபெரும் மந்திரங்களைவிளக்கித் தாழ் நீக்கி இறை ஞான இரகசியங்களைக் காட்டித் தருபவர் ஆச்சார்யர் !
    நேய நிலைக் கதவம் நீக்கு -இறைவனை வணங்கும் பக்தி எனும் அன்பு எந்தவித குறுக்கீடுமில்லாமல், நிலைத்து நிற்க வேண்டும். அதற்குத் தடையாக இருப்பவற்றை நீக்க வேண்டும்.

    தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்- மனோ,வாக்,காயமென்னும் திரிகரண சுத்தியுடன் வந்து இறைவன் பெருமைகளைப் பாடுகின்றோம், ஸம்ஸாரமென்னும் இருளிலிருந்து, பேருறக்கத்திலிருந்து விடுபட விழைகிறோம்.

    இறைநிலையில் ஒருவர் எவ்விடமுள்ளார் என்பதை சோதித்து அதற்கேற்றாற்போல் அறிவூட்டுவது ஆச்சார்யர்கள் கடமை. சீவர்களும் இறைவன், குரு, மந்திரம் இந்த மூன்றின் மேலும் திட நம்பிக்கையோடு, மாறாத உறுதியோடு, பரிபூர்ண விஸ்வாஸத்தோடு மனோ வாக் காயமாகிய திரிகரண சுத்தியோடு- அதாவது எண்ணும் எண்ணத்தாலும், சொல்லும் சொல்லாலும், செய்யும் செயலாலும் தூய்மை, நேர்மை, நன்மையோடு அடி பணிந்தால் தான் செய்யும் சரணாகதிக்குப் பலனுண்டு.
     
    periamma likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆங்கிலத்தில் கொடுத்துள்ளவை, சர்மஸ்லோகம் (The Ultimatum) எனப்படும் இறைவனின் உறுதி மொழி . சர்ம என்றால் கடைசி என்று பொருள் அதாவது இறுதியாகவும் உறுதியாக இறைவன் சொன்ன செய்தி, சர்மஸ்லோகம்

    Charama Sloka- The Ultimate declaration of the Lord Narayana in HIS various Avatharas, stressing importance of Prapaththi, Saranaagatham, for Salvation .

    Shree Krishna said: To Arjuna, Gita

    Sarva dharmaan parityajya maam ekam sharaNam vraja l
    Aham tvaam sarva paapebhyo mokshayishyaami maa shucahaa ll


    Give up all (the other) dharmas and seek Me alone and My refuge. I will absolve you of all sins and liberate you. Do not despair.

    Shree Rama said: Vibeeshana Charanaagathi

    Sakrud eva prapannaaya tavaasmeeti ca yaacate l
    Abhayam sarva bhootebhyo dadaamyetad vratam ma-ma ll


    To all those beings that fully seek My shelter and plead for My mercy, and say I am yours I shall certainly offer My protection to all of them. This is My vow.

    SrI BhUvarAha PerumAL Lord Varaha addresses Mother Earth or Bhoodevi (who expresses concern for the well being of all Her children):

    Sthite manasi susvasthe shareere sati yo narahaa l
    Dhaatu-saamye sthite smartaa Vishwaroopam ca Maamajam ll

    Tatas-tam mriyamaaNam tu kaashtta paashaaNa sannibham l
    Aham smaraami madbhaktam nayaami paramaam gatim l
    l

    If anyone thinks of Me, when the mind is sound (sthite manasi), with the body in good health (suswasthe shareere) and with all mental and physical faculties working perfectly and intact (dhaatu saamye sthite) - thinks that I am indeed the very cause of this universe (or the form of this universe, vishwaroopam), that I am without birth (ajam)then I assure (You, Devi) that I will remember this devotee of Mine when he/she is on his/her death bed, lying helplessly like a stone or a log of wood, and personally take him/her to the Supreme Abode.
     
    periamma and jskls like this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இந்த பாசுரத்துக்கு வேடிக்கையான பல விளக்கங்கள் உண்டு.
    1.ஆயர் சிறுமியரோம் - நாங்கள் சிறுமிகள்.பெண்கள், அபலைகள்.
    பெண் என்றால் விட்டுவிட முடியுமா?
    மங்கை கைகேயி சொல் கேட்டு மன்னர் புகழ்
    தசரதனும் மரணமானான் ;நங்கை அவள் சீதை
    சொற்கேட்டு ஸ்ரீராமன் சென்றான் மான்பின் ;
    தங்கை அவள் சூர்ப்பனகை சொல் கேட்டு
    ராவணனும் கிளையோடு தான் மாண்டான்;
    நங்கை சொல் கேட்டல் என்றால்
    கேடு வரும் நானிலத்து மக்களே
    2.தடைக்கல்லே படிக்கற்கள்-தடையாக இருக்கும் காவலாளிகளைக் கொண்டே கதவை நீக்கச் செய்கிறார்கள்.
    3.தூயோமாய் வந்து :-இது தான் உபகோஸல பிரம்ம வித் யை எனப்படுவது.12 வருட காலம் வெளியில் எங்கும் போகாமல் அக்னியை உபாசித்தான் உபகோஸலன்.அவன் பெயரிலேயே இந்த உபாசனை அழைக்கப் படுகிறது.
    இதற்கும் ஒரு கதை உண்டு.தொட்டாச்சாரியார் சோளிங்கபுரத்திலிருந்து காஞ்சிபுரம் கருட உத்சவத்துக்கு வருடாவருடம் செல்வார்.நோய்வாய்ப் பட்டதால் ஒரு வருடம் செல்ல இயலவில்லை.தேவராஜ பெருமாள் இரண்டு நிமிடம் காஞ்சியிலிருந்து மறைந்து சோளிங்கபுரத்தில் கருடாரூடராய்க் காட்சி அளித்தான்.இப்போதும் காஞ்சிபுரத்தில் கருட சேவை அன்று இரண்டு நிமிடம் பெருமாளைக் குடையால் மறைப்பர்.இதற்கு தொட்டாச்சாரியார் சேவை என்றே பெயர். தூயோமாய் வந்து துயிலெழப் பாடுவதன் சிறப்பு இது.
    4.மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்:-
    இந்த கதை உபகதையாகக் கூறப் படுவது.கண்ணன் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.அதற்கேற்றபடி வாயில் காப்பவர்களும் கருடாதி தேவதைகளும் துணை புரிவர்.
    ஒரு ஆந்திர இளவரசிக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர்.மிக மிக அழகி.ஆகாச மார்கமாக கருடாரூடனாய் லட்சுமி நாராயண தம்பதி அந்த ஊர் மேல் உலா வருகிறார்கள்.
    லட்சுமி " இந்த பெண் என்னைப் போன்றே அழகாக இருக்கிறாள்.அவளுக்கு வரக் கூடிய கணவன் எப்படி இருப்பான் என்று காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நாராயணனிடம் கேட்க ,நாராயணன் ஊரக கோடியில் எச்சில் பொருக்கும் பரம தரித்திரன் ஒருவனைக் காட்டி" இவன் தான் அந்த பெண்ணின் கணவன்" என்றான்.
    லக்ஷ்மிக்கு ஒரே கோபம்.இது மாதிரி கல்யாணம் நடக்கலாமா? அப்பறம் ஜனங்களுக்கு தெய்வ நம்பிக்கை இல்லாமல் போய் விடும் என்றாள் லட்சுமி.
    " இவள் பண்ணின பாவத்துக்கு இப்படிப்பட்ட புருஷன். அவன் பண்ணின புண்ணியத்துக்கு அழகிய மனைவி' என்றான் பரந்தாமன்.
    நான் இதை மாற்றிக் காட்டுகிறேன்"லட்சுமி சூளுரைத்தாள்
    கருடனை அழைத்து "இவனை குண்டு கட்டாகக் கட்டி ஏழு சமுத்திரம் தாண்டி மனித சஞ்சாரமே இல்லாத இடத்தில் விட்டு விடு" என்றாள் .
    கருடனும் அவ்வாறே . செய்தான்.கருடனுக்குத் தோண்றியது" ஐயோ பாவம்;எச்சில் இலை யாவது பொருக்கி சாப்பிட்டான்.இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது.கல்யாணத்தில் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வர்.பட்டினியால் இவன் இறந்து விட்டால் அந்த பாவம் நமக்கு சேரும்.இவனை ஊரில் கொண்டு விட்டால் லக்ஷ்மியின் கட்டளையை மீறினதாகும்.

    ஆந்திராவில் கல்யாணப் பெண்ணை அலங்கரித்து புதிய கூடையில் வைத்து கூடையோடு மணவறையில் உட்கார்த்தி வைப்பர்.அதே மாதிரி ராஜகுமாரியை அலங்கரித்து கூடையில் அமர்த்திப் பட்டுத் துணியால் மூடி இருந்தார்கள்.
    அதை பலகாரக் கூடை என்று நினைத்து கருடன் தூக்கிக் கொண்டு வேகமாகப் பறக்க ஆரம்பித்து விட்டார் கருடன். பரந்தாமன் வைகுண்டத்தில் சிரித்தார்.
    கூடையைக் கொண்டு போய் பரம தரித்திரன் எதிரில் வைத்து" பலகாரம் கொண்டு வந்தேன். சாப்பிடு" என்கிறார் கருடன்.கூடையைத் திறந்தால் அழகிய மணப் பெண்.எதிரே குரூபி.
    " இந்த வேளை எனக்கு வர போகும் கணவனைப் பார்க்க வேண்டிய முஹூர்த்தம்.இவரை இந்த க்ஷணத்தில் பார்ப்பதால் இவரே என் கணவர்'என்று குரூபிக்கு மாலை அணிவித்தாள் .வைகுண்டத்திலிருந்து அகஷத்தை போட்டார் பகவான். " நாளைக்குத் தானே கல்யாணம்" என்றாள் லட்சுமி.

    " நீ அனுப்பி வைத்தாய்,அந்த கருடன் தான் திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் 'என்கிறார் விஷ்ணு..
    " நென்னலே வாய் நேர்ந்தான் ' அல்லவா?அதன் பின் குரூபி சுந்தர புருஷனாக மாறியது வேறு கதை.
    வாயில் காப்பானோ, கருடனோ ஈஸ்வர சித்தத்துக்கு துணை போவார்.
    கோவிலொழுகு,சாளக்ராம ஆராதனை ,உபகோஸல ப்ரம்ம வித்யா,பிதாவின் மஹத்வம் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய பாசுரம். இருந்தும் இந்த கதையைக் கேட்பதற்காகவே முக்கூர் லட்சுமி நரசிம்மச்சாரியார் உபன்யாசத்துக்கு அவ்வளவு கும்பல்.கல்யாணத்துக்கு வரன் தேடும் விதம் , ஜான வாசம் எல்லாவற்றையும் பங்காக வர்ணிப்பார்.அந்த பரதேசி பையன் சுந்தரனாக மாறும் வரை நெஞ்சு பக் பக் என்று அடித்துக் கொள்ளும்.
    அவரது தோரண வர்ணனையே அலாதி.விடியற்காலையில் பறவைகள் உல்லாசமாக வரிசையாகத் தோரணம்போல் பறந்து செல்லுமாம்." அஸ்தம்பாம் தோரணஸ்ரஜம் "கம்பமில்லாத தோரணம் ' என்ற காளிதாசன் வர்ணனை வேறு நினைவுக்கு வருகிறது.
    பவித்ரா, sorry for the long response .பரந்தாமன் வாக்கு பலிக்கும் எனறதும் பழமை நினைவுகள் மலர்ந்தன.

    ஜெய்சாலா 42
     
    periamma and PavithraS like this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அருமையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ! முக்கூர் ஸ்வாமிகள் தொடர் 'குறையொன்றுமில்லை', கல்கியில் படித்திருக்கிறேன், ப்ரவசனம் கேட்கக் கூடவில்லை. எப்படி இருந்திருக்குமென்று உங்கள் வார்த்தைகளால் உணரமுடிகின்றது. கதை கேட்கும் குழந்தையாக மாறி விட்டேன். ஆனந்தமாயிருந்தது. அவசியம் உங்களுக்குத் தோன்றுவதை இப்பதிவுகளில் பகிர்ந்து கொள்ளுங்கள், பயனுறுகிறோம் !
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மனம் வாக்கு காயம் இம்மூன்றும் தூய்மையாக இருந்தாலே பரிபூரணமாக சரணாகதி அடைய முடியும் .அதற்கு குருவின்அருளும் வேண்டும் என்பதை உணர்ந்தேன்
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சரியான புரிதல்,பெரியம்மா !
     

Share This Page