1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (15) எல்லே ! இளங்கிளியே !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 29, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    15) ஆண்டாள் பாடல் (இறையடியார் பெருமைகள் /இயல்புகள் பற்றிப் பேசும் பாசுரம்)

    எல்லே! இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ ?
    சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
    வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
    வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
    ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
    எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
    வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

    பாசுரப் பொருளுரை

    ஆண்டாளாகிய கோபிகைக்கும் ,அப்போதுதான் துயிலெழுந்துள்ள ,அவளது தோழியாகிய கோபிகைக்கும் இடையேயான சுவாரசியமான உரையாடல் வடிவில் அமைந்துள்ள பாசுரமிது.
    இதுவரை வந்த பாசுரங்களில், ஒவ்வொரு கோபிகையை எழுப்பும்போதும், வெளியிலே இருந்து எழுப்புகிறவர்கள் சொல்வது மட்டும் பாசுரத்தில் இருக்க, உள்ளே இருக்கும் பெண் பேசுவதை யூகிக்குமாறு விட்டு விடுகிறாள் . ஆனால் இந்த பாசுரத்தில் உள்ளே இருப்பவள் பேசுவதும், வெளியே இருப்பவர்கள் பேசுவதும் விளங்கும்படியாக, உரையாடல் வடிவில் அமைந்திருக்கிறது.

    ஆண்டாள்: எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ! - இளங்கிளி போல பேச்சுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?"

    தோழி : சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்! - அறிவார்ந்த என் தோழிமாரே! 'சில்' என்று மிக்க கூச்சலிட்டு என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ வந்து கொண்டே இருக்கிறேன்"

    ஆண்டாள் : வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் - உன் வாய்ப்பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் வரவில்லை.திறம்பட நீ உதிர்க்கும் உறுதிமொழிகளையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் வெகு காலமாகவே அறிவோமே

    தோழி :வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக! - "நீங்கள் தான் பேச்சுத் திறனுடையவர்கள்! சரி விடுங்கள், நீங்கள் கூறியபடி நானே வாயாடியாக இருந்து விட்டுப் போகிறேன்

    ஆண்டாள் : ஒல்லை நீ போதாய் - விரைவாகத் தயாராகி எங்களுடன் சேர்ந்து கொள்

    தோழி
    : உனக்கென்ன வேறுடையை - உங்களுக்கு வேறு வேலையில்லையா ?
    எல்லாரும் போந்தாரோ?- எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா ?

    ஆண்டாள் :போந்தார் போந்தெண்ணிக் கொள் - வந்துவிட்டார்கள், நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்வாய்
    வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய் -
    கம்சனின் மாளிகையின் வாசலில் தன்னை மிதித்தழிக்கக் காத்திருந்த) குவலயாபீடம் எனும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகிய பகைவர்களின் அகந்தையை அழித்தவனும், மாயச்செயல்கள் புரிந்து நம்மை ஆட்கொள்ளுபவனுமான கண்ணனின் புகழைப் பாட விரைவில் எழுந்து வருவாயாக !

    பாசுரக் குறிப்புரை

    5 X 5 + 5 இல் 3 ஆம் ஐந்தின் இறுதிப் பாடல். 10 அடியவர்களை எழுப்பும் வகையால் அமைந்த 6- 15 வரையிலான பாசுரங்களில் இதுவே இறுதியான பாசுரம்.முந்தைய பாசுரங்களில் இருந்து சற்றே மாறுபட்டு, இறையடியாரோடு உரையாடும் வகையில் அமைந்த பாசுரம் இது. இறையனுபவத்தை விட, இறையடியாரோடான அனுபவமே பெரிது என்று சொல்லும் பாசுரம். திருப்பாவையின் சாரம் என்று அமைந்த பாசுரம். இப்பாசுரம் மிகவும் ஆழமான உட்பொருள் கொண்டது. "திருப்பாவையில் திருப்பாவை இப்பாசுரம்" என்று இறையாளர்கள் கொண்டாடும் இதன் உட்பொருளை முற்றும் முழுதுமாய், என் போன்றவளால் என்றைக்கும் உணரவும்,உணர்விக்கவும் முடியாது. பேரறிஞர்கள் பலர் உரைத்த விளக்கங்களை என்னால் இயன்ற வரையில் வார்த்தைப் படுத்த முயன்றுள்ளேன். அதையும் இரண்டு கவிதைகளாக (?)முயற்சித்துள்ளேன். அறிஞர்கள் பலர் சொற்பொழிவாகவும் கட்டுரைகளாகவும் இப்பாசுரத்தின் பொருளழகை விளக்கியுள்ளதை வாசகர்கள் இணையத்திலும் , ஒளி/ஒலிப் பதிவுகளிலும்,புத்தகங்களிலும் கண்டும்/கேட்டும்/படித்தும் அனுபவிக்க வேண்டுகிறேன்.

    திருப்பாவையில் இந்த பதினைந்தாம் பாசுரத்தையும், இருபத்தொன்பதாம் பாசுரமான ‘சிற்றம் சிறுகாலே’ என்ற பாசுரத்தையும் "இதல்லவோ திருப்பாவை!" என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள் வைணவப் பெரியோர்கள் . இந்தப் பாசுரம் பாகவத தாஸ்யம் (ஆண்டவனின் அடியார்க்கு அடியார் ) சொல்வதாகவும் , இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத் தாஸ்யம் (ஆண்டவனின் அடியார்) சொல்வதாகவும் அமைந்திருக்கின்றன. இறைநெறியில் சேர்ந்தும், சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் அடியவர்களுக்கு, இறைவனை அடைந்து பேரின்பம் பெறுவதற்கு ஏற்ற எளிய வழி இறையடியார்களுடன், ஒன்றாய்க் கூடி, இறையடியார் சரிதங்களைக் கேட்டு,இறை நாமங்களைச் சொல்லி, இறைவனின் இயல்புகளைப் போற்றிப் பாடி ,சரணம் புகுதலே என்பதை ஆசிரியர் வாய் மொழியாகக் கூறும் விதத்தில், ஒரு விளக்கம் சொல்கிறார்கள். வைணவ அடியார்களின் அடையாளமாகவும் அதைச் சொல்லுகிறார்கள்.

    ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி வரிசையில் இப்பாசுரத்தால் குறிக்கப்படுபவர்,கலியப் பெருமானாகிய , 12 ஆவது ஆழ்வாரான, திருமங்கையாழ்வார்.

    மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா,
    கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ
    கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,
    வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே.


    என்று தொடங்கும் இவரது 5 ஆம் திருமொழிப் பாசுரங்களில், உரையாடல் பாணியைக் கையாண்டவர் இவரே !

    திருமங்கையாழ்வாரை "இளங்கிளியே" என்பது மிகப் பொருத்தமே, இவர் தான் ஆழ்வார்களில் இளையவர், அத்துடன்,“கிளிபோல் மிழற்றி நடந்து”,"மென்கிளிபோல் மிக மிழற்று மென்பேதையே" என்று பல பாசுரங்களில் இவர் தம்மைக் கிளியாக வருணித்துக் கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும். அதை விட முக்கியமாக ஒரு கிளி செய்வதைப் போல, நம்மாழ்வாரின் உபதேசத்தை இவ்வுலகுக்கு திரும்ப உரைக்க அவதாரம் கொண்ட ('மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற’ ) திருமங்கையாரை இளங்கிளியே எனச் சொல்வதும் பொருத்தமே !
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    ஆண்டாள் :ஒளி பாய்ச்சும் காலை விடிந்ததடி!
    கிளிப் பேச்சுத் தோழியே, உறக்கமென்ன ?
    தோழி : சுள்ளென்று சுடு சொல் பேசியென்னைப்
    பள்ளி நீங்கச் செய்யாதீர்- இப்போதே
    உள்நீங்கி வெளி வருகிறேன், காணீர் !
    ஆண்டாள் :கள்ளியே உனை முன்பே அறிவோம் !
    கள்ளப்பேச்சுக் கேட்க வரலை- உடனே
    உள்ளிருந்து எழுந்து வெளிப்புறம் வா!
    தோழி : சுள்ளெனப் பேசுவார் தாமோ? அன்றிக்
    கள்ளமென் பேச்சோ? சரி ,வேண்டுவதென்ன ?
    ஆண்டாள் :உள்ளிருந்து வந்து எங்களுடன் சேர்ந்து
    உள்ளமது ஒன்றி நோன்பிருக்க வேண்டும் !
    தோழி: தள்ளுங்கள் வேறு வேலையும் இல்லையோ ?
    பிள்ளைகள் அனைவரும் வந்து சேர்ந்தாரா ?
    ஆண்டாள் :பிள்ளைகள் அனைவரும் வந்தனர் காண் !
    துள்ளியெதிர் நின்ற குவலயா பீடத்தை
    அள்ளிக் கைககளால் அடித்து அழித்தவனை,
    உள்ளத்தில் அழுக்குடன் தீமை புரிபவரைக்,
    கிள்ளிக் களைகின்ற வீரம் உடையவனை,
    கள்ளக் குறும்பனாம் கண்ணனவன் புகழை
    உள்ளமுருகி நாம் பாடிப் பணியலாம் !

    எல்லே- எங்கள் தோழியே ! உரிமையால் ஏற்பட்ட வார்த்தைக் கடுமை. எல்லே- ஏலே (அ ) ஏலேய் என்பதாகத் திரிந்து நெல்லைச் சீமையில் இன்றும் புழங்கும் சொல்லாக இருப்பதை அறிந்திருக்கிறோமென்றோ ? மிகவும் உரிமையோடு பழகும் ஒருவரைக் குறிப்பிட்டு விளிப்பதற்கு இச்சொல்லாடல். தோழியருளுள் இருக்கும் நட்பினாழத்தால் வெளிப்பட்ட வார்த்தை. அதுமட்டுமின்றி உள்ளிருக்கும் கோபிகை வெளியே இருக்கும் ஆண்டாள் குழுவினரைக் காட்டிலும் வயதில் குறைந்த சிறுமி. எனவே அன்பும் உரிமையும் கலந்து பயன்படுத்திய விளியாகும் இது.

    இளங்கிளியே - கடுமையை மாற்றிக் கொண்டு சமாதானப் படுத்தும் விததத்தில் நயமாக அழைத்தல். கண்ணன் இந்தக் கோபிகையை முத்தமிட்டு இதழ்ரசம் பருகியதால் சிவந்த வாயுடையவளென்றும் காதல் ரசமிகுந்த பொருளுண்டு !
    அதுமட்டுமில்லை, இதுவரை 14 கோபிகைகளை உறக்கத்திலிருந்து எழுப்பியாகிவிட்டது. இந்த வீட்டுக் கோபிகை தான் கடைசி. இனி கண்ணனுடைய மாளிகைக்குச் செல்ல வேண்டுமென்று பரபரப்பாக இருப்பதால், " இன்னும் என்ன நீயும் தாமதிக்கிறாய், வந்து சேர்ந்து கொள்ளம்மா!"என்று முதலில் கடுமையாகவும், பின்னர் இவள் ஒரு சிறுமியாயிற்றே, கடுஞ்சொல் தகாது என்று கொஞ்சலாகவும் அழைக்கிறாள் ஆண்டாள். உள்ளிருக்கும் கோபிகையும் தன்னுடைய இனிமையான குரலால் கண்ணன் நாமாத்தைப் பாடிக்கொண்டிருப்பது அவளைக் கிளி என்று சொல்ல வைக்கிறது.

    சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்- உள்ளே இருக்கும் கோபிகை உறங்கவில்லை, முந்தைய கோபிகியின் வீட்டில் "பங்கயக் கண்ணானைப் பாடு" என்றதைக் கேட்ட இந்த கோபிகை ஒரு கிளியைப் போலவே கண்ணனுடைய நாமங்களைப் பாடிக்கொண்டிருக்கிறாள். அதற்கு இடையூறாக இவர்கள் பேசுவது உள்ளதால் "பெரியோர்களாகிய நீங்கள் இப்படிக் கடுமையாகப் பேசி அழையாதீர்கள், வருகிறேன் !" என்கிறாள்.

    வல்லை உன் கட்டுரைகள்- உன் சாமர்த்தியமான பேச்சைக் கேட்க வரவில்லை என்பது மேலோட்டமான பொருள். ஆண்டாளின் காலத்திற்குப் பின் வந்த கடையாழ்வாரின் வாக்குவன்மையைப் பற்றி ஞான திருஷ்டியால் அவள் அறிந்திருந்ததைக் குறிப்பால் உணர்த்துகிறது "பண்டே உம் வாயறிதும்" சொல்லாடல் !

    வல்லீர்கள் நீங்களே, (நீங்கள் தவறு இழைத்தப் போதிலும் ) நானே தான் ஆயிடுக
    - கடுஞ்சொல் பேசிக் குற்றம் புரிபவள் நானே என்று ஒப்புக் கொள்கிறேன். "மானிடர்க்கென்று பேச்சுப்படின் உயிர் வாழகில்லேன்" " கொள்ளும் பயனென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும், அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்னழலைத் தீர்வேனே" என்பது போன்று கடுமையாக ஆண்டவனையே எச்சரித்தவள் ஆண்டாள் ! ஆனால் அவளோ, திருமங்கையாழ்வாரை 'வல்லை உன் கட்டுரைகள்' எனக்கூறி பேச்சில் வல்லவர் நீங்கள் என்று சொன்னதை மறுக்கப் புகுந்த திருமங்கையார், நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் மிக அதிகமாக 1361 பாசுரங்களை இயற்றியவர் இவரே என்பதனால்,நானே தானாயிடுக என்று ஒப்புக்கொள்கிறாராம் ! சரியென்று தன்னையே அப்படி ஏற்றுக் கொள்வதாக ஓர் கற்பனை !

    "நானே தான் ஆயிடுக" என்ற வரியினைப் பெரியோர்கள் மிகவும் கொண்டாடுகிறார்கள். தன்னைத் தாழ்த்திப் பிறரை உயர்த்துவது என்கிற குணம் உயர்ந்த இறையடியாளரின் அடையாளம். இராமன் நாடு துறந்து காடேகக் காரணம் தான் வந்து கைகேயியின் வயிற்றில் தசரத மைந்தனாகப் பிறந்ததே என்று பரதாழ்வான் தன்னையே தாழ்த்திச் சொல்லும் இராமாயணத்தின் உருக்கமான காட்சியை இங்கு ஒப்பு நோக்கலாம் ! இராமனுக்கு ஏற்பட்டத் துன்பங்களுக்கு எவ்வாறு பரதன் தன்னையேப் பொறுப்பாகச் சொல்லுகிறானோ அப்படிப்பட்ட எளிமையோடும், பணிவோடும், இறை பக்தியோடும் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகின்றவரே, இறைவனின் பார்வையில் மிகவும் உயர்வானவர், என்பதே கருத்து.

    ஒல்லை நீ போதாய்-உனக்கென்ன வேறுடையை ?- இந்த ஆயர்பாடியிலுள்ள பெண்களில் நீ மட்டுமென்ன விதிவிலக்கா ? எங்களோடுக் கூடி நோன்பிருக்க வா ! இறையடியார்கள் மற்றவரையும் இறை அனுபவம் பெறத் தூண்டுவதே பணியாக இருப்பார்கள். தானிழந்த காதலைத் திரும்பப்பெற, தலைவன் தலைவிக்கு எழுதும் கடித வடிவிலான இலக்கியமே 'மடல்' இலக்கியம். மடல் இலக்கியம் பெண்டிருக்குரியதல்ல என்ற தமிழின் இலக்கணத்தை மீறி, வடமொழியின் இலக்கணத்தையொட்டி,தம்மைப் பெண்ணாகப் பாவனை செய்து கொள்ளும் ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கையார் , தனது தலைவனாம் பெருமாளைக் குறித்து,சிறிய திருமடல் (155 வரிகள்) பெரிய திருமடல் (297 வரிகள்) போன்றவற்றை எழுதினார். அதையே ஆண்டாள் இங்கு குறிக்கிறாள் போலும் !

    எல்லோரும் போந்தாரா ?- உள்ளிருப்பவள் மிகச் சிலர் மட்டும் கண்ணனை அனுபவிக்கலாமென்ற தீய எண்ணமற்றவள். எல்லோரும் ஒன்றாகச் சென்று கண்ணனைக் காண வேண்டுமென எண்ணுபவள். ஆகவே தான் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கனிவுடன் கேட்கிறாள். இறையடியார் , வகுப்பு பேதங்களின்றி எல்லோரும் வர வேண்டும் என்று அன்போடு எதிர்பார்ப்பவர்கள்.

    போந்தனர் போந்து எண்ணிக்கொள்- . திருமங்கையாழ்வாருக்கு முன்னமே மற்றுமுள்ளவர்கள் அவதரித்து, ஆழ்வார்கள் பன்னிருவர் என்கிற கணக்கைப் பூர்த்தி செய்வதால் இச்சொல்லாடல் பொருத்தமே !

    வல் ஆனை = வலிமை பொருந்திய யானை, கம்சனின் படையிலிருந்த குவலயாபீடத்தைக் குறிக்கும். இப்பாசுரத்தோடு கோபிகைகளான அடியார்களைத் துயிலெழுப்புவது நிறைவடைகின்றது. ஆகையால் மதுராவிற்கு வந்து கம்சனின் படையானையைக் கொன்று, மல்லர்கள் சாணுர முஷ்டிகர்களை வதைத்து,இறுதியில் கம்சனையும் கண்ணன் அழித்தான் என்பதைக் குறிக்கிறாள். அடுத்த பாசுரம் முதல், கண்ணனுடைய வீட்டைச் சேர்ந்தவர்களை எழுப்ப வேண்டுமே !
    “ஆவரிவை செய்தறிவார் அஞ்சன மாமலை போலே" என்று பெரிய திருமொழிப் பாசுரம் போல், தமது பல பாசுரங்களில், யானையைக் கொன்ற லீலையை, திருமங்கையாழ்வார் கொண்டாடுவதால், இக்குறிப்பு அவரை உணர்த்தும்.

    மாற்றார்- எதிரிகள், மாற்றழிக்க வல்லானை = கண்ணபிரான், பகைவரைக் கண்டால் இன்று போய் நாளைவா’ என்ற இராமபிரானைப் போல் ஒரு பேச்சுப் பேசான்; வெட்டொன்று துண்டிரண்டாக்கி முடித்திடுவன்.
    உள்ளத்தில் தீய எண்ணங்களைக் களைந்து எதிரிகளை அழிக்கும் வல்லமை பொருந்தியவன் என்பது உட்பொருள். பரந்தாமனின் குணங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதான மாறு செய்பவர்களது செருக்கை வெகு அழகாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற லீலைகளுள் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த கதை மிகச் சிறந்தது. மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு தீங்குமிழைக்காமலே கண்ணன் அவனது கர்வத்தை அடக்கினான். இங்கே இறைவனது பொறுமையின் குணம் வெளிப்படுகின்றது.

    திருமங்கையாழ்வாரும் இக்கதை மிகவும் பிடித்தமானது. தமது பெரிய திருமொழியை முடிக்கும் போதும் “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” என்றார்; திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றெடுத்த தோளினானை” என்றே முடிக்கிறார். எனவே இந்த லீலையைக் குறித்தாள் போலும் !

    மாயனை- 5 ஆம் பாசுரக் குறிப்பு.பெரும் எதிரிகளை அழிக்கும் வல்லமை பொருந்தியவனாயினும், ஒரு பிள்ளையைப் போன்று குறும்பு செய்து, அவன் அன்பர்களை மயக்குபவன்.
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள் (1) பாகவதோத்தமர்கள் எனப்படும் இறையடியார்களுக்கும், இறைநெறியில் சேர எண்ணும் இளம் அடியாருக்கும் நடப்பதான உரையாடல் வடிவின் கருத்து.

    நல்லாசானாகிய பெரும் இறையடியார் (பாகவதர்கள்) :

    பிறவிக் கூண்டிலே அடைபட்டுக் கிடந்து,
    இறைத் தொண்டு எதிலுமே ஈடுபடாமல்
    பிறவிகள் பற்பல எடுத்தபடி இருந்தும்
    இறைஞானம் ஆசானை அணுகிப் பெறாமல்
    சிறகற்றக் கிளியாக சிறையிலே வாடும்
    திறமற்ற சிறியாரே இன்னுமேன் மயக்கம் ?
    இறைஞானம் உள்ள அடியார் குழாத்தில்
    நிறைவான மனதுடன் நீங்களும் சேர்ந்து
    குறைவற்ற இன்பத்தை அடைவீரே நன்றாய் !

    இறைநெறியில் ஆழ்ந்து மூழ்காத இளம் அடியார்:


    அறிவுரை சொல்லும் இறைஞானப் பெரியீர்!
    திறமற்ற எம்மீது சினங்கொள்ள வேண்டாம் !
    மறைஞானப் பெரியோரை இப்போதே அணுகி
    இறையடியார் அனுபவம் யாமும் அடைவோம் !
    சிறியவர்கள் யாமுமே தாம் பண்டுரைத்த
    இறையாளர் சரிதங்கள் பற்பலவும் கேட்டோம்!
    இறைநெறியில் செல்லவே எண்ணிடும் போதும்
    குறையொன்று எங்களை மிகவுமே வாட்டும் !
    பிறவியெனும் கட்டில் அகப்பட்டதால் -மன
    உறுதி இல்லாது சிற்றின்பங்கள் பலதில்
    சிறைபட்டுத் துடிக்கிறோம் மீள வழியென்ன ?

    பாகவதர்கள் :

    உறுதியைக் கைவிடாது இருத்தலே நன்று !
    இறைப்பணி அதனிலே மனதைச் செலுத்தி
    பெறலாம் வீடெனும் பேற்றினை நீங்களே !

    இளம் அடியார்:

    சிறையில் அகப்பட்ட எங்களைப் போன்ற
    பிறரும் இப்படிச் செயப் புகுந்தனரோ ?

    பாகவதர்கள் :

    பிறவியைக் கட்டென உணர்ந்ததின் பின்னே
    சிறையதை வெளியேற எண்ணிடும் அடியார்
    இறைவனின் திருவடி சரண் அடைவாரே !
    இறைநெறி சேர்ந்திட்ட அவரோடு நீங்களும்
    சிறையினை வெளிவந்துச் சேர வாருங்கள் !
    திறமற்றுப் புலன்களின் பிடியிலே சிக்கிக்
    குறையோடு இருக்கின்ற நம்மீது கருணை
    நிறைவாகப் பொழிந்து துன்பங்கள் அழித்துத்
    திறத்தோடு காத்துமே மனத்தினை ஆளும்
    இறைவனின் மாயங்கள் எண்ணவும் அரிதே !
    இறைநெறி ஆழ்ந்திட்ட அடியார் தம்மோடு
    இறைவனின் ஈடற்ற குணங்களைப் பாடி,
    பெறற்கரிய வீடென்னும் பேற்றினை நாமும்
    நிறைவாகப் பெறுதற்கு எளிதான வழியாம்
    இறைவனின் திருவடிச் சரணம் அடைவோமே !
     
    periamma likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    எல்லே இளங்கிளியே- பிறவிக்கூண்டில் இருக்கும் சீவன்கள். இன்னம் உறங்குதியோ- எத்தனை பிறவியெடுத்தாலும், இறைவனைச் சரணமடையாமல் இருப்பவர்கள்

    சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன் - ஆச்சார்யரே , கடியாதீர்கள், இப்போதே சரண் புகுகிறோம். போதருகின்றேன் - இப்போதே,இறைத்தொண்டு, இறையடியார் தொண்டு, ஆச்சார்ய தொண்டு என்ற நல்ல செயல்களில் ஈடுபடுகின்றோம்.

    கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் -இறையடியார் பலரின் கதைகளை நீங்கள் கூறக் கேட்டிருக்கின்றோம்.

    வல்லீர்கள் நீங்களே- வீடுபேறு அடைவதற்கு வழி நீங்களே எங்களுக்குச் சொல்லித் தாருங்கள். ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை - மன உறுதியோடு உலகப் பற்றைத் துறந்து இறைத்தொண்டு செய்ய வேண்டும்.இறைத்தொண்டு புரிகின்ற வீடுபேற்றை அடைவதையே வேண்டி ,இறைவனைச் சரணடைதலே கடைத்தேற்ற வழி

    எல்லாரும் போந்தாரோ - மற்ற அடியவர் அனைவரும் சரணாகத வழியில் தான் செல்கின்றனரா ?
    போந்தார் போந்தெண்ணிக் கொள் - ஆம். எல்லோரும் செல்வது சரணாகத மார்க்கமே ! நீங்களும் சேருங்கள், வீடுபேற்றைப் பெறுங்கள்.

    வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர்- கர்மவினைகளைக் களைந்து , உலக வாழ்வென்ற மாயையிலிருந்து விடுவித்து, தறிகெட்டு அலையும் புலன்களை நெறிப்படுத்தி, பகவத்-பாகவத சேவையில் ஈடுபடுத்தித், தன்னிடம் சேர்த்துக் கொள்ளும் வீடுபேற்றை அளிக்கவல்ல இறைவனின் திருவடியைப் போற்றிப் பாடிப் பணியுங்கள்.
     
    periamma likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள் 2 இறைநெறியாளர்களுக்கு இருக்க வேண்டிய அடையாளமான இயல்புகளைக் கூறுதல் .

    1) நற்குணம் கொண்ட இறைவன் அடியார்கள்
    சொற்களைக் கேட்டு மகிழ்வது வேண்டும் !
    2) நற்குண அடியாரோ டுரையாடும் போது
    சொற்களில் கடுமையை நீக்குதல் வேண்டும் !
    3) நற்றவ அடியாரை மதித்திடல் வேண்டுமவர்
    4) கூறிடும் அறிவுரை ஏற்றிடல் வேண்டும் !
    5) பிறரது தவறுக்கும் தாம் பொறுப்பேற்று
    இறைவனை சிந்தித்துத் தேறிட வேண்டும் !
    6) நற்றவ அடியாரின் அடியினைப் பணிந்து
    எற்றைக்குமவர் பணி செய்திடல் வேண்டும் !
    7) பேற்றுக்கு நம்மையே இட்டுச் செல்கின்ற
    வெற்றிப்பாதை காட்டியப் பெரியோரை என்றும்
    ஏற்றம் கொடுத்துப் பணிந்திடல் வேண்டும் !
    பற்றினையழித்துக் கட்டுகள் நீக்கி- வீடு
    8) பேற்றினை அளிக்கின்ற இறைவனின் பெருமை
    போற்றிப் பணிகின்ற அடியார் குழாத்தில்,
    9) வேற்றுமை எதுவுமே பார்த்திட வேண்டாம் !
    குற்றங்கள் கூறியும் தாழ்த்திட வேண்டாம் !
    10) ஒற்றுமை உணர்வோடு நாமும் கலந்து,
    நற்றவம் புரிந்து கடைத்தேற்றம் பெறலாம் !

    எல்லே இளங்கிளியே
    - எப்போதும் இனிமையான சொற்களையே பேச வேண்டும்.இறையடியார்கள் இறைவனைப் பற்றிச் சொல்வதை மிகுந்த கவனமுடன் கேட்டுக்கொண்டு, மற்றவருக்குத் திரும்ப உரைக்க வேண்டும்.

    இன்னும் உறங்குதியோ - அடியவர் அருகில் இருக்கையில், அவர் சேவையை விடுத்து வேறு எந்த செயலிலும் ஈடுபடலாகாது

    சில்லென்றழையேன் மின்
    - அடியவருடன் உரையாடும்போது, கடுமையான சொற்பிரயோகங்கள் செய்யக்கூடாது.

    நங்கைமீர்! போதருகின்றேன் - வயதில் இளையாராயிருந்தாலும், இறை அடியவரை மரியாதையுடனும், அடக்கத்துடனும் அணுக வேண்டும்

    வல்லை உன் கட்டுரைகள் - அடியவர், நம்மீது சொல்லும் குறைகளை பிணக்கின்றி மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
    - இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் ஏற்க வேண்டும். அதுவே இறைவனுடைய பிரியத்திற்கு நம்மை ஆளாக்கும்.

    ஒல்லை நீ போதாய்
    - அடியவரை எப்போதும் பிரியாமல் சேவை செய்ய வேண்டும்.நம்முடைய சௌகரியத்திற் கேற்றாற்போல் அவர்களைக் காக்க வைக்கக்கூடாது.

    உனக்கென்ன வேறுடையை
    - சாத்திரங்கள் சொல்லும் வழிமுறைகளிலிருந்து மாறாமல் நடத்தல் வேண்டும், நம் மனம் போனபடி அல்ல.

    எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்
    - அடியவர் கூட்டத்தைக் காண்பதும், அதில் சேர்வதுமே இறைவனை அடைய ஒரே வழி என்பதை உணரவேண்டும் .இதிலே வகுப்பு பேதங்களைப் பார்த்தல் தவறானது. இறையடியார் எல்லோரும் ஓர் குலமே !

    வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட
    -இறைவனுடைய பெருமைகளைப் போற்றிப் பாடுவது, அடியவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதால், இதுவே, அடியவர் சேவையின் முக்கிய அம்சமாகும்.
     
    periamma likes this.
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    திருப்பாவையில் 30 வது பாசுரம் பலச்ருதி.29 பாசுரங்களில் நடுநாயகமாக விளங்குவது 15 வது பாசுரம். அதிலும் 8வது வரியான 'எம்பாவாய் ' தவிர்த்து 7வரிகளில் நடு மையமாக விளங்குவது'நானேதான் ஆயிடுக' எனும் சொற்கள்.திருப்பாவை எனும் அணிகலத்தின் பதக்கம்( pendent ) தான் இந்த சொற்கள்.வைர வரிகள்.
    திருப்பாவையில் திருப்பாவை எனப்படும் இந்த பாசுரம் கீதைக்குச் சமமாகக் கருதப் படுகிறது.இந்த பாசுரத்தில் 8 வரிகளும் உண்மையான பத்து வைணவ இலக்கணங்களைக் குறிப்பவை.
    குற்றமே செய்யாத போதும், குற்றம் சாட்டப் பெற்றால் அதை பொறு த்தருள்வது முக்கியமான வைணவ தர்மம்.இதற்கு சான்றாக பல வைணவ அடியார்களின் வாழ்க்கை வரலாறு சான்றாகக் காட்டப்படுகிறது.

    Perhaps in these days this particular trait may be deemed as lack
    of self confidence. I attended a vaishnavait conference regarding relevance of திருப்பாவை in modern context .This நானேதான் ஆயிடுக was taken as the main contesting term .Volens nolens (whether one agrees or not )the judge gave his decision favouring the 'irrelevant 'side. Notwithstanding the judgement ,it was a literary feast given by eminent Vaishnavite scholars .The rich experience is ever green after 49 years

    இந்த பாசுரம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. 25 பக்கங்களுக்கு மேல் வ்யாக்யானம் எழுதப்பட்ட பாசுரம்.
    இளம் கிளி என்பது வ்யாஸ பகவானின் புத்திரனான
    கிளி முகம் கொண்ட சுக மஹரிஷியைக் குறிப்பதாகவும், அவர் பரவச செய்த ஸ்ரீமத் பாகவதத்தில் சாரம் முழுதும் இந்த ஒரு பாசுரத்தில் அடங்கியதாகவும் உபன்யாசகர் கூறுவர் இந்த ஒரு பாசுரம் முழு வைணவ தர்மம் முழுதும் அடங்கியதால் அநேக வைணவ அடியார்களின் வாழ்க்கை வரலாறு இந்த பாசுரத்தில் எடுத்துக் காட்டாக விளக்கப்படும்.இந்த ஒரு பாசுர விளக்கம் 4 நாட்கள் நடை பெரும்.
    பவித்ரா ,எனது இளமை நினைவுகளுக்குக் கொண்டு சென்றமைக்கு மிக்க நன்றி .இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பவித்ராவின் பாசுர விளக்கத்துக்காக மனம் ஏங்குகிறது.well done பவித்ரா !தங்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.தொடரட்டும் ..வாயில் காப்போன் கதவைத் திறக்கக் காத்திருக்கிறான்.
    ஜெய்சாலா 42
     
    periamma likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வயதிலும், அனுபவத்திலும், அறிவிலும் பெரியவரான தங்களது வார்த்தைகளைப் பெரும் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். உங்களது இளமைக்கால நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ! அடுத்தடுத்தப் பாசுரங்களைத் தொடர்ச்சியாக தினம் ஒன்றாய்ப் பதிவதெனத் திட்டம்.மார்கழி துவங்கும் முன்பு பூர்த்தி செய்யவே இந்த எண்ணம். இதுவரைப் பின்னூட்டங்கள் வாயிலாகத் தாங்கள் அளித்து வரும் ஊக்கத்தை இனியும் தொடர்ந்து வழங்கி என்னை வழி நடத்துவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்களது நேரத்திற்கும், கவனத்திற்கும் நன்றி !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்த பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் பற்றிய தகவல் கண்டேன் .பவித்ரா திருமங்கை ஆழ்வார் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் உதித்துள்ளார் .
     
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இறைவன் ஒளி வடிவானவன் என்பதைக் குறிக்கும் வகையில் கார்த்திகை தீபத்தன்று இவ்வடியார் உதித்ததுள்ளாரோ ? தகவலுக்கு மிக்க நன்றி பெரியம்மா !
     

Share This Page