1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (14) உங்கள் புழக்கடை !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 28, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    14) ஆண்டாள் பாடல்

    உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
    செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
    செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
    சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை

    " உங்கள் வீட்டுப் புழக்கடைத் தோட்டத்தில் உள்ள செயற்கைக் குளத்தில் செங்கழுநீர் மலர்கள் (குமுதமலர்கள்) இதழ் விரிந்து, ஆம்பல் மலர்கள் (அல்லி) இதழ் குவிந்து இருப்பதை காண்பாயாக! செங்கல் நிறத்தில் காவியுடை தரித்த, வெண்மையான பற்களையுடைய தவசிகள், சங்கை முழங்கி, தங்கள் திருக்கோயில்களைத் திறக்கச் செல்லுகின்றனர்.அழகிய பெண்ணே! எங்களை முன்னரே எழுப்புவதாக வாக்களித்து விட்டு, எழுப்பாமல் உறங்கிக்கிடக்கிறாய், அப்படியும் உன் வாக்கு தவறியதைப் பற்றி வெட்கம் இல்லாமல் இருக்கிறாயே ? பேச்சுத்திறமுடையவளே ! துயிலெழுவாயாக! சங்கு, சக்கரம் தரித்து, விசாலமான திருக்கைகளையுடையவனும் தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடையவனுமான கண்ணபிரானின் பெருமைகளைப் பாடி எங்களுடன் சேர்ந்துபாவை நோன்பிருக்க வருவாயாக! "

    பாசுரக் குறிப்பு

    இப்பாசுரத்தால் எழுப்பப்படும் அடியார் மிகவும் சாமர்த்தியமாகப் பேசுபவர். கண்ணனிடம் தங்கள் ஆசையை எடுத்துச் சொல்லி எப்படியேனும் நிறைவேற்றித் தருவார் என்று அவரையும் எழுப்பிக் கூட்டிச் செல்லுமாறு அமைந்துள்ளது. வெட்கத்துக்குரிய தவறுகளை இழைத்தவர் கூட, கண்ணனைச் சரணடைந்து அவனிடம் முறையிட்டு, அவன் அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்பது இப்பாசுரத்தின் ஒரு செய்தி. நாக்கு என்பது உண்பதற்கும், வீண் பேச்சு பேசுவதற்கும் அல்ல,இறைவனுடைய பெயர்களை சொல்லிப் பெருமை பாடுதலும், தாமறிந்த உயர்ந்த கருத்துகளைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுதலுமே நாக்கு பெற்றதன் (வாய்ப்பேசும் திறமை ) காரணம் ,என்பது இப்பாசுரக் கருத்து.

    அவதார பஞ்சகத்தின் கீழ் வரும் இப்பாசுரத்தில் , சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்- பரவாசுதேவ நிலை குறிக்கப்பட்டுள்ளது. இறைநெறியில் ஈடுபட்டு சரணம் புக என்னும் ஜீவாத்மாக்களுக்கு, நல்லாசான் ஆனவர், இறைஞானத்தை அனுமானம், ப்ரத்யக்ஷம், சப்தமாகிய வேதம் (மறைகளனைத்தும் ஒலியின் வடிவிலேயே அருளப்பட்டவை) இவற்றின் வழியில், ஊட்டுகிறார். ஆசானைப் பணிந்தணுகினால், இறைவனை அடைகின்ற சரணாகத மார்கத்தை நமக்கு அவர் போதிப்பார் என்பது கருத்து.

    ப்ரமாதா ஆகிய ஜீவாத்மா, (அறிவைப் பெறுவது) இந்தப் ப்ரமாணங்களால், (அறிவைப் பெறும் வழிமுறைகளால்), அடையும் ப்ரமேயமே (அறிந்துகொள்ளும் பொருள் ),இறைவன். அவனே வீடு பேறை வழங்கவல்ல நாராயணன் என்பது இங்கு கருத்து.
    ஆசிரியர், மாணவருக்கு அறிவூட்டும் மூவகை அறிவுப் பாதைகள்,வழிமுறைகளே, ப்ரமாணங்கள். அவை-

    அநுமானம் (அ),உபமானம் - ஒன்றை வைத்து ஒன்றை அறிவது.

    ப்ரத்யக்ஷம்,- நேரிடையாக அனுபவித்து அறிவது,

    ஸப்தம் - வேத ,சாத்திரங்கள் முன்னர் சொன்னவற்றை வைத்துக் காதால் கேட்டு அறிவது.

    உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியில்- அநுமானப் ப்ரமாணம். இன்னும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு அவள் வீட்டின் பின் தோட்டத்தைப் பற்றிச் சொன்னது , எல்லா இடத்திலும், (செங்கழுநீர்)குமுதம் மலர்ந்தது, (ஆம்பல்)அல்லி மடல் மூடியது என்பதைக் கண்டதால், இந்த அடியவரின் வீட்டிலும் அப்படித்தான் இருக்கும் என்று ஒரு, அநுமானமான,(inference) அறிவைக் கொண்டு சொல்கிறாள்.

    செங்கல் பொடிக் கூறை - ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் .செங்கல்லின் காவி நிறத்தில் ஆடை தரித்த வெண் பல் தவத்தவர் - வெண்மையான மனத்தை உடைய பல தவ அடியவர்கள். தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்- கோயில் வாயில் கதவுகளைத் திறக்கும் போது மங்கல ஒலியாக சங்கினை ஊதுவார்கள். அவர்கள் போவதைக் கண்ணால் கண்டதினால், இது ப்ரத்யக்ஷமான ,(perception)நேரிடை அறிவு.

    வாய் பேசும் நங்காய்- ஸப்தம், ஸாஸ்த்ரப் ப்ரமாணம். நல்ல சாத்திர அறிவு பெற்றவளே, நாணாதாய்- நான் என்கிற அகங்காரம் அற்றவளே, நாவுடையாய்- உன் வாக்கு வலிமையால், அறிவை வெளிப்படுத்தி இறைவனிடம் வேண்டும் வரன்கள் பெறக் கூடிய தகுதி உடையவளே . இது அடியவர் சொன்னதை அடிப்படையாக வைத்துக் கொண்டு சொல்லுவதால், இது ஸப்தப்பிரமானம், ஒலிக்குறிப்பின் (வேத, சாத்திரங்கள்) (as per previous testimony, heard words of past and present reliable experts) மூலம் உணரும் அறிவு.

    ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி வரிசையில் இதில் எழுப்பப்படுபவர் திருப்பாண் ஆழ்வார்.
    "நங்காய், நாணாதாய் நாவுடையாய்" என்பது திருப்பாணருக்கு மிகவும் பொருந்தும். , முழுமையான நற்குணங்களும், ஞானமும் கொண்ட திருப்பாணரை "நங்காய்" என்று ஆண்டாள் விளிக்கிறார்! "செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்" என்று குறிக்கப்படும் லோகசாரங்க முனி, அரங்கனின் ஆணைக்குட்பட்டு அவனுடைய பக்தரான திருப்பாணாழ்வாரை தன் தோளில் சுமந்தபடி அரங்கனை தரிசிக்க கூட்டிச் சென்றார், அப்போதும் அவர் கர்வம் கொள்ளாமல் "அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்" என்று பாசுரம் பாடியமையால், அவர் நாணாதார் (நான் என்னும் அகந்தை இல்லாதார்) ஆகிறார்.

    திருப்பாணாழ்வார் தனது அமலனாதிபிரான் தொடக்கமாக,

    அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த
    விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
    நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்
    கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே
    .

    வெறும் பத்து பாசுரங்கள் வாயிலாக வேத சாரத்தையே சொன்ன பெருந்திறன் வாய்த்தவர், மிக அருமையாக இறைவனைப் பாடியவர் திருப்பாணாழ்வார். எனவே இவர் நாவுடையார். ஆண்டாளைப் போன்றே திருப்பாணாழ்வாரும் அரங்கனோடு கலந்த பெருமையுடையவர்.
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    இன்றைக்குப் பொழுது நன்று புலர்ந்ததை,
    நன்றாய் நமக்கு உணர்த்தும் சாட்சியாய்,
    பின்கட்டில் உள்ளச் செயற்கைக் குளத்தில்,
    தன் மொட்டவிழ்ந்து குமுதம் மலர்ந்தது !
    இன்புற்று இரவு நிலவில் அலர்ந்திட்டப்
    புன்னகை அல்லியும் மூடிக் கொண்டது !
    மின்னுங் காவிநிறத்துத் தவ ஆடையை,
    நன்மேனி தரித்த முனிவராம் அடியவர்,
    வெண்ணிறப் பல்லுளார் ,பூணுல் தரித்துமே,
    தண்டத்தில் மேலொரு வெண் துணியுடன்,
    விண்ணகரக் கோயில் கதவம் திறக்கையில்,
    நன்மங்கலச் சங்கொலி எழுப்பச் செல்கிறார் !
    நென்னல் எங்களைச் சந்தித்த வேளையில்,
    ஒன்றுமே கவலைப் படாதிருங்கள் என்றும்,
    முன்னமே நானுமென் துயிலது கலைந்துமே,
    கண் விழித்துங்களை எழுப்புவேன் என்றும்,
    நன்றாய் வார்த்தை சொன்னதை மறந்தின்று,
    என்ன நீயிப்படி உறங்கியேக் கிடக்கிறாய்?
    நுண்ணறிவும் நற்குணமும் நிறைந்துள்ள நீ,
    சொன்ன சொல்லைக் காக்காமல் தவறியும்,
    நாண் ஒன்றுமில்லாமல் உறங்கிக் கிடத்தல்,
    உன் நாநயப் பெருமைக்கழகு சேர்க்காது!
    பெண்ணே, ஆதலால் உன்னுறக்கம் நீக்கிடு !
    தன் கையிலாழியும் வெண்சங்கும் ஏந்திடும்,
    கண்ணில் தாமரை கொண்ட இறைவனை,
    பண்ணிசைத்துப் பெயர் சொல்லிப் பாடியே,
    நோன்பிதனை நாம் நோற்று மகிழலாம் !

    செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின- இன்னுமிரண்டு கோபியரை எழுப்ப வேணும். ஆனால் இப்பாசுரத்தால் குறிக்கப்படும் கோபிகையோ, பொழுது விடிந்து விட்டதென நீங்கள் கூறுவதற்கு என்ன சாட்சி என்று திருப்பிக் கேட்கிறாள். அவளுக்கு அறிவூட்டும் விதத்தில், பற்பல காலைக் காட்சிகளை ஆண்டாள் எடுத்தியம்புகிறாள்.
    புழக்கடைத் தோட்டத்து வாவியில்-வீட்டின் பின் தோட்டக் குளம் (செங்கழுநீர்) குமுதம் மலர்ந்தது, (ஆம்பல்)அல்லி மடல் மூடியது. மிகுந்த நேரம் காத்திருந்ததைக் குறிக்க பாமர மக்கள் எடுத்தாலும் சொல்லாடல்'அலமலந்து போச்சு ! அலர் (பூ) மலர்ந்து போனதாம் ! தானும் ஒரு இடையர்குலப் பெண்ணாகவே மாறிவிட்ட ஆண்டாள் ஆதலால் தான் மலர் மலர்ந்ததைக் குறித்து இப்பெண்ணை எழுப்புகிறாள் !

    உள்ளிருப்பவள் "என்னை எழுப்புவதற்காக நீங்கள் தான் அப்படி மலர்ந்த ஆம்பல்களை வாய் மூடப் பண்ணியும், மலராத செங்கழுநீரை மலர்ச்சியுறச் செய்தும் வைத்தீர்கள். உண்மையில் பொழுது விடியவில்லை!" என்று பதிலுரைக்க, "இது ஏதோ எங்கள் வீட்டுப் புழக்கடையில் நடக்கும் காட்சியில்லை, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நடக்கின்றது. ஆகவே நாங்கள் பொய் கூறவில்லை,பொழுது உண்மையிலேயே விடிந்துவிட்டது, எழுந்து வா !" என்று கூறுகிறாள் ஆண்டாள்.

    திண்ணை, ரேழி, தாழ்வாரம், முற்றம்,கூடம்,படுக்கையறை, அடுப்பங்கரை,உக்கிரான அறை, கொல்லைப்புறம் ,கேணி, தோட்டம் என்று விரியும் நம் பழந்தமிழர் குடியிருப்பில், தோட்டத்திற்குச் செல்லும் குறுகலான வழிப்பாதையைப் புழக்கடை என்று சொல்வர். ஒரு செயற்கை நீர்க்குளத்தோடு , செடிகொடிகளோடு இருக்கக்கூடிய அழகான அமைப்பாகவும் இருக்கும். பெண்டிர் வீட்டின் துணிகளைத் துவைப்பதற்கு, பாத்திரங்களைத் தேய்த்து சுத்தப்படுத்துவதற்கும் இந்த இடத்தில் கூடுவர். இந்தப் புழக்கடை என்னும் சொல் இன்று புழக்கத்தில் குறைந்து விட்டது. புறங்கடை,புழைக்கடை என்றும் வழங்குவதுண்டு. புறம் என்றால் வீட்டின் வெளியே என்று பொருள் படும்,புழங்குதல் என்றால் உபயோகப் படுத்துதல்."கடை" என்றால், கடைசியில் என்று பொருளல்லவா ? வீட்டின் கடைசியிலிருக்கும், அல்லது வெளிப்புறத்தில் புழங்கும் பகுதியாதலால் "புழக்கடை (அ) புறக்கடை " என்று குறிப்பார்கள். இச்சொல் நவநாகரிக தளத்தில் மறைந்துவிட்டாலும், இன்றும் ஊர்ப்புறங்களில் பயன்படுத்தப்பட்டுக் காப்பாற்றப்பட்டு வருவது ஒரு ஆறுதல் .

    செங்கல் பொடிக் கூறை - செங்கல்லின் காவி நிறத்தில் ஆடை தரித்த முனிவர்கள். வெண்பல் தவத்தவர் - இல்லற வாழ்வில் இருப்பவர்கள் வெற்றிலைத் தாம்பூலம் தரிப்பதினால், அவர்கள் பல் காவியேறியிருக்கும். ஆனால் தவ வாழ்வில் இருப்பவர்கள், தாம்பூலம் தரிப்பதில்லை ஆதலால் அவர்கள் பற்கள் கரையின்றி வெண்மையாக இருக்கும்.வைணவத் துறவியர் வெண்ணிறப் பூணூல் அணிந்திருப்பர் தங்கள் கையில் வைத்திருக்கும் துறவுக் கோலின் (த்ரிதண்டம்) மேல் ,ஆற்றில் இருக்கக் கூடிய சிறு பூச்சிகள் போன்ற உயிரினங்களை ஒதுக்கி நீராட உதவியாக வெண்மை நிறத் துணி கட்டியிருப்பர் . அசுத்தங்களை எரிக்கும் அக்கினியை ஒத்துக் காவி நிறத்தில் ஆடை இருக்கும் . இவை துறவிகளின் அடையாளம்.

    செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்- இதற்கு சற்றே சமயச் சாயம் பூசப்பட்ட விளக்கமும் கூறுகிறார்கள்.(மூவாயிரப்படி, /ஆறாயிரப்படி, ஈராயிரப்படி/நாலாயிரப்படி - வியாக்கியானங்கள்) .காவி ஆடை தரித்த, பாஷாண்டிகள் எனப்படும் சைவப் பண்டாரங்கள் கையில் சங்கோடு இருப்பார்கள். சைவக் கோயில்களையும் திரு என்ற அடைமொழியுடன் வழங்குவதனால், (திருமறைக்காடு, திருநெல்வேலி திருவண்ணாமலை , திருவானைக்காவல், திருச்சிற்றம்பலம் !) தங்கள் திருக்கோயில் என வந்தது என்கிறார்கள்.
    நாராயணனே சிவனைப் படைத்தார் என்று வேதம் கூறுவதாகவும் அவர் பரமன் இல்லை, தேவரே என்று அவர்கள் வாதம்.இத்தகு கோயில்களில் உறையும் தாங்கள் இறைவன் எனக் கருதும் சிவபெருமானை வணங்க சிவனடியார்கள் சங்கூதிச் செல்கின்றனர் என்று இழித்துரைத்தாள் ஆண்டாள் என்று வைணவ நெறியாளர் சிலர் விளக்கமளிக்கிறார். ஆண்டாளை போன்ற ஒரு அறிவுடைய அடியவர் , மொழி அறிஞர், எழுதிய வரிகளுக்கு இம்மாதிரியான விளக்கம் மிகவும் இரசனைக் குறைவாகவே படுகிறது.

    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்- கோயில் வாயில் கதவுகளைத் திறக்கும் போது மங்கல ஒலியாக சங்கினை ஊதுவார்கள்

    ‘எங்களை முன்ன மெழுப்புவான் வாய் பேசும் நங்காய்’
    - எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு நீயே இப்படி உறங்குகிறாயே ?கண்ணன் மிகுந்த வாய்ச்சொல் வீரன், அவனைப் போலவே நீயும் போலும் ! பேச்சுத்தான் பெரிது செயலிலொன்றுமில்லை என்று குத்திக் காட்டுகிறாள் !-

    எங்களை எழுப்புவதாக உறுதி சொன்னாயே என்பதில் ஒரு அழகிய பொருள் தொனிக்கும். எழுப்புவதாவது – தூக்கிக் கொள்வது. எங்களை என்றது இறையடியார்களை . திருப்பாணாழ்வாருடைய முதற் பாசுரத்தில் ‘அடியார்க் கென்னையாட்படுத்த விமலன்’ என்று சொல்லி பாகவதர்களை தோளில் தூக்கிக் கொண்டாடுபவர் போலத் தெரிவிக்கின்றார் . ஆனால் உண்மையில் மஹாபாகவதரான லோகஸாரங்க மஹா முனியின் தோளின் மீதில் ஏறிச் சென்றிருக்கிறார், இவ்வாழ்வார் என்பது சுவையான முரண் !

    நங்காய்- நல்ல சாத்திர அறிவு பெற்றவளே,நற்குணங்கள் உடையவளே நாணாதாய்- சொன்ன வாக்கைக் காப்பாற்றாமல் போனதற்கு வெட்கமுறாதவளே. கண்ணனோடு மிகவும் பழகி இந்தக் கோபிகைக்கும் பொய் சொல்வது சுலபமாக வருகின்றதாம், வெட்கமேயில்லாமல் போனதாம் !
    நாவுடையாய்- உன் வாக்கு வலிமையால், அறிவை வெளிப்படுத்தி இறைவனிடம் வேண்டும் வரங்கள் பெறக் கூடிய தகுதி உடையவளே

    சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -கையில் ஸுதர்சன சக்கரமும், பாஞ்சஜன்ய சங்கும் ஏந்துபவன், நாராயணன். ஆயுதங்களையேந்தும் போது கடுமை தெரிய வேண்டுமல்லவா ? ஆனால் அந்த நாராயணன் தனது கையில் சங்கையும் சக்கரத்தையும் மலர்களைப் போல இலாவகமாக 'ஏந்தி' இருக்கிறானாம் !

    பங்கயக் கண்ணானை
    - தாமரை போன்ற அழகான கண்களை உடையவன். இறைவனின் கண்ணழகு இறையடியாருக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் பொருளாகவே இலக்கியங்களில் காட்டப்படுகின்றது. அருளைப் பொழியும் கருணையைக் காட்டுவது விழியே அல்லவா ?
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள்

    இகவுலக வாழ்விலுள்ள அறியாத உயிர்க்கு,
    வெகுவான கருணையுடன் ஆசானும் அருள, ,
    அகத்தில் இறைஞானத் தாமரைத் துளிர்க்கும் !
    அகுணமாம் காமம், வெகுளியுடன்,பிறவாய்ப்,
    புகுந்திருக்கும் அறியாமை இல்லாமல் போகும் !
    சிகப்பிலுடை தரித்தபடி தவசிக் கோலத்தில்,
    அகங்காரம் இல்லாமல் தவவலிமை அடைந்து,
    முகத்திலிறைச் சின்னங்கள் உள்ள நல்லாசான்,
    அகத்திலிறை கோவிலுறும் இதய கமலத்தில் ,
    பகவானை ஓங்காரவொலி மூலம் துதிப்பார் !
    சகல சாத்திரங்களுடன் யோகநெறி உணர்ந்து,
    அகங்காரம் நீங்கிவிட்ட நல்லாசான் அவர்க்கு ,
    அகத்திலும் வாக்கிலும் தூய்மையே நிலவும் !
    மிகவாம் நற்குணங்கள் நிறைந்துள்ள ஆசான் ,
    இகவாழ்வில் உழல்கின்ற அஞ்ஞான உயிர்கள்,
    அகத்திலே பணிவோடு விளக்கங்கள் கேட்டால்
    அகன்றதாம் இறைஞானம் அன்போடே அருளி,
    பகவானின் பேர்சொல்லித் துதித்திடச் செய்வார் !
    மிகவுயர்ந்த ஆசானையடி பணிந்துத் தொழுதால்,
    சகடமுடன்,வெண்சங்கைக் கை கொண்டிருக்கும்,
    முகிழ்ந்த செந்தாமரையை விழிகளாய் உடைய ,
    சகமனைத்தின் மூலமென நிறைகின்ற இறையை,
    உகந்த சரணாகதத்தைச் செய்தடையும் வழியைப் ,
    பகர்ந்துமே நிலையான இறைத்தொண்டு புரியும்
    சுகமிகுந்த வீடென்னும் பேற்றையுற அருள்வார் !

    புழக்கடைத் தோட்டத்து வாவியில்-சம்சாரக் கடலில் சிக்கிய ஜீவாத்மாக்கள் இதயத்தில், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து - ஆச்சார்யர் உபதேசத்தால் இறைஞானம் உதித்து
    ஆம்பல்வாய் கூம்பின காண் - விருப்பு, வெறுப்பு ,அகந்தை, மமதையென்கிற அறியாமை விலகும்

    செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்-மேனியில் இறையடையாளங்களை(திருமண் போன்றவை ) இட்டுக்கொண்டு, தவசியருக்குரிய சிவப்பு நிற ஆடை தரித்த ஆச்சார்யர்.

    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் - ஆச்சார்யனானவர் தங்களது மனத்தில் ஓங்காரத்தை நிலை நிறுத்திஇதயகமலத்தில் உறையும் பரமனைக் குறித்துக் கடுந்தவம் இயற்றுபவர். ஓங்கார மந்த்ரோபாஸனையால் தத்தமது இதயத்தில் உறையும் இறைவனைத் துதித்தல்.

    நங்காய்- பெண்ணைக் குறித்தது, ஆண்பாலருக்கு நம்பி- வேத,சாத்திர அறிவு பெற்றவர்கள்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் - உலகப்பற்றுகளில் சிக்கியுள்ள அடியவர்களுக்கு, இறை விளக்கங்களை எடுத்துச் சொல்லி, வேத,சாத்திர அறிவு பெற்ற ஆச்சார்யரானவர், அறியாமையென்னும் உறக்கத்திலிருந்து எழுப்புவார்.

    நாணாதாய்- நான் என்கிற நாணிலாதவர்கள் -ஆச்சார்யர்கள் அகங்கார மமகார இருள் நீங்கியவர்கள். நான், எனது,என்கிற அகந்தை மமதை இல்லாததனால் இறைவனை அடைய வெட்கப்படாதவர்கள் .
    நாவுடையாய்- இறைவனைப் பற்றியே, நல்ல மேலான பொருட்களைப் பற்றியே பேசுவதால் வாக்கு வன்மை பெற்றவர்கள் நல்லாச்சார்யன்.

    சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட
    -சங்கும் சக்கரமும் இறைவனின் பர வாசுதேவ நிலையின் குறியீடு. அனைத்தின் மூலமாய் விளங்கும் பரமன், வீடு பேற்றை நமக்கு வழங்குபவன், அவனே நாராயணன்,அவனைப் பாடிப் பணிந்து சரண் புகும் வழியை நல்லாச்சர்யன் காட்டித் தருவார்.
     
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear pavitra,
    If you give this much of elaborative commentary on literay, worldly and philosophical significance of each verse of Thiruppavai, where can we,the ordinary mortals go for response?You have exhausted all the points and leave no scope for further remarks.This is a complaint against you.

    Therefore I am forced to move out of syllabus to convey a few things which I have purposely connected to this paasuram.

    இந்த 14 எனும் எண் தனிச் சிறப்பு வாய்ந்தது.
    1).14 எனும் எண் மறதியைக் குறிக்கிறது.இந்த லோகாயதமான இச்சைகளை மறந்து, 'தான் ' எனும் அகந்தையை மறந்து 'பரப்ரஹ்மத்துடன் ஐக்கியமடைதல்.

    2.)14 திதிகளைக் கடந்து தான் அமாவாசையும் பவுர்ணமியும் வருகிறது.
    3)ஏழு கடல், ஏழு லோகம், ஏழு பிறவி- எத்தனை sevens!கிறித்தவ மதத்திலும் 14 என்ற எண்ணுக்குத் தனி சிறப்பு உண்டு.
    4)ராமன் காட்டுக்கு அனுப்பப்பட்டதும் 14 ஆண்டுகள் தான்.
    5)ஒருவர் 14 ஆண்டுகள் பிரிந்து போனால் இறந்தவராகக் கருதப் பட்டு சொத்து உரிமையை இழக்கிறார். இப்போது சட்டத்தில் அது ஏழு ஆண்டாக உள்ளது.
    எங்கள் அலுவலகத்தில் ஒருவர் மருத்துவ மனையிலிருந்து தப்பிச் சென்று 7 ஆண்டுகள் திரும்பியே வரவில்லை.அவர் இறந்ததாக கருதப்பட்டு அவர் மனைவியிடம் ப்ரொவிடென்ட் ,gratuity பணம் எல்லாம் கொடுக்கப்பட்டன.அடுத்த வருடம் அவர் சாவகாசமாகத் திரும்பி வந்தார்.தன வீட்டில் தனக்கே கொடுக்கப் படும் திதியில் கலந்து கொண்டார்.விசித்திர அனுபவம்.அவரை திதியன்று 'விஷ்ணு இலையில் சாப்பிடச் சொல்வார்கள்.
    6)shakespeare ன் sonnet கூட 14 வரிகள் தான்.
    எனவே 14 என்ற எண் 'இறப்பு' அல்லது 'பர நிலை'யுடன் தொடர்பு உடைய எண்
    திருப்பாவை 14 என்றவுடன் என் எண்ணம் எங்கெல்லாமோ சென்று விட்டது.
    சாதாரணமாக 'புழக்கடை '( புயக்கடை, பேக்கடை என்றெல்லாம் திரியும்) என்ற சொல் வைஷ்ணவ வீடுகளில் சகஜமாக உபயோகிக்கப் படும். மற்ற வீடுகளில் கொல்லைப்புறம் அல்லது 'வெளி' என்ற சொல் தான் பயன்படுத்தப்படும்..பவித்ரா குறிப்பிட்டுள்ள அனைத்து சொற்களும் தான் வழக்கத்தில் உள்ளன.
    எனக்கு எங்கள் பழங்கால வீடு நினைவுக்கு வருகிறது.

    அடுக்கு மாடி நாகரீகம் தொடங்கும் முன் எல்லா வீடுகளின் அமைப்பும்
    ஒன்றுதான்.கூரை வீடானாலும் மாடி வீடு ஆனாலும் இலக்கணம் ஒன்றுதான்.
    படி,நடை,கூடம், தாழ்வாரம், முற்றம்,வெளி
    பெயர்களே வாழ்வு நெறிகளைக் குறிப்பதுதான்.
    1.படி
    ___
    நல்ல நூல்களைப் படித்தோ கேட்டோ அறிந்துகொள்
    2. நடை
    _______

    இதை வழி நடை(rezhi) என்றும் சொல்வதுண்டு.
    கற்றபின் நிற்க அதற்குத் தக எனும் வள்ளுவத்தை உணர்த்தும் பெயர்

    3. கூடம்
    ---------------
    படித்தாலும், அதன்படி நடந்தாலும் தொடர்ந்து கடைப் பிடிக்க சத்சங்கம்
    தேவை.நல்லாரோடு இணங்கி இருப்பதே கூடம்.
    கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்கிறாள் ஆண்டாள்

    4.தாழ்வாரம்
    ----------------------
    பணிவும் , அடக்கமும்தான் கல்வியை மேன்மையுறச் செய்யும் .சிரம் தாழ்ந்து
    ,அகந்தையை ஒடுக்கும் நிலையை உணர்த்துவது தாழ்வாரம்.

    5. முற்றம்
    -------------------
    மேற்கூறிய நெறியில் நடப்பவன் அடையும் பக்குவ நிலை அல்லது முற்றிய
    விவேகத்தைக் காட்டுவது முற்றம்.

    6.வெளி
    -------------
    எல்லாம் கடந்து மனிதன் அடையும் முழுமை நிலை பரவெளி அல்லது மோட்சம் .
    அந்த காலத்தில் இவ்வளவு விஷயங்களை மனதில் கொண்டு வீடுகள் அமைக்கப் பட்டன.
    See how I have connected my comments with puzhakkadai of Thiruppaavai!I have to pat myself for finding out a small thread to connect to Pavithra,the great.Really you make me struggle Pavithra!Having been born in Srirangam almost all women are endowed with the skill of 'kodu pottaal road podum saamarthyam.
    'oruvar thadukkil nuzhainthaal matrvar kolaththinul nuzhaiyum thiramai)Many thanks to my birth place-booloka vaikuntam,Srirangam.
    Flat Life தான் யதார்த்தம் என்று ஆனபிறகு,வீடு முழுதுமே low ceiling
    அல்லது தாழ்வாரம் தான்.மாடிப்படி , landing முதலியன படி, நடைக்கு
    சமம்.கூடியிருப்போர்க்குக் குறைவே இல்லை.car parking space எல்லாம்
    முற்றம் தான் .
    எங்கு இருந்தாலும் பொருள் உணர்ந்தால் சரி. All is well that ends well .
    If Andal with same charateristics is born in 21st century in Flat culture,she has to climb or use lift to tap at the door of each house.Most probably many girls would have gone just at that time for sleep.There will be no'puzhakkadai' or 'aambal poo'.In the same community living she may find ,not only 15 girls, but hundreds of girls with different tastes.
    Today also there is 'koodiyiruththal, share and eat but without a divine tinge.
    Andal may be considered even a 'misfit' in today's society.Perhaps she might use whatsapp or cell phone tunes to wake up her friends.
    Thiruppaavai has to be recast suited to modern living.Many of the Thirukkurals find a parallel suited to modernism.
    Pavithra, why can't you try your hand?
    Jayasala 42
     
    periamma, PavithraS and jskls like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    You can connect anything to anything, Madam! Such is your abundance of knowledge , no doubt. And am grateful for you sharing the same with us. Thattiyil nuzhaindhaal kolaththil nuzhaiyum Aazhvaarkadiyaan and Vandhiyathevan duo's Characterization comes to mind. You are from Booloka Vaikuntam, me from Booloka Kailaayam :)

    She is not a misfit, She is Miss.Fit to accomplish the feat of attaining HIS FEET. Apart from writing here in IL, I do not participate in any virtual world activities, WhatsApp Face book, Twitter are all still Greek and Latin to me. May be I am misfit :smiley:

    Yes, true.

    OMG ! I am too small a person and that is so great an idea that you speak about, Madam ! I am eager to learn if you could share your wisdom, just like so many here.

    வல்லீர்கள் நீங்களே ! நானே தான் ஆயிடுக ! I take this as your heartfelt blessings. Thank you !
     
    periamma likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா ஜெயசாலா அவர்கள் சொன்னது போல் தாங்கள் தரும் திருப்பாவை பதிவுகளுக்கு விளக்கம் சொல்ல வார்த்தைகள் இல்லை .அதனால் இனி நான் லைக் மட்டும் தான் போடுவேன் .பாசுரங்களை இது வரை படித்து அறிந்த பொருளுக்கும் தங்களின் தத்வார்த்தம்-உட்பொருளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் .நான் உணர்ந்தது யதார்த்தம் நீங்கள் தருவதோ ஞானானந்தம் .மிக்க நன்றி
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா, நான் இங்கு எழுதத் துவங்கியதிலிருந்து என்னை ஊக்குவித்து ஆதரவு அளித்தவர்களுள் நீங்கள் மிகவும் முக்கியமானவர். அந்த உரிமையில் தான் சொல்கிறேன், இனியும் அவசியம் உங்கள் மனதில் படுவதை, அந்தந்தப் பதிவுகளில் எங்களோடு பகிர்ந்து கொண்டால் மிகவும் மகிழ்வுறுவேன். ஆன்றோர் பெருமக்கள் அளித்துள்ள உட்பொருளை நாமெல்லோரும் அனுபவிக்கும் இந்த சமயத்தில், இயன்றபோதெல்லாம் உங்களது யதார்த்த ஞானத்தைப் பின்னூட்டமாய்த் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இது உங்களைக் கட்டாயப்படுத்தும் நோக்கமல்ல. உங்களுக்கு என்னிடம் எல்லா சுதந்திரமும் உண்டு.

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    periamma likes this.

Share This Page