1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (12) கனைத்திளம் கற்றெருமை !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 23, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    12) ஆண்டாள் பாடல்-

    கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலை வழியே நின்று பால் சோர
    நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
    பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
    அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

    பாசுரப் பொருளுரை

    "பால் கறக்காததால் ,கன்றுகளுடைய எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்து, அவை தங்களது கன்றுகளை நினைத்த பொழுதில் , அவற்றின் முலைக்காம்புகளின் மூலம் இடைவிடாது பால் சுரந்து, தரை ஈரமாகி, வீடெங்கும் பாலும் மண்ணும் கலந்து சேறாகியிருக்கும் இல்லத்துக்குத் தலைவனான நற்குணங்கள் பொருந்திய செல்வந்தனின் தங்கையே! எங்கள் தலையில் பனி கொட்டுவதையும் பொருட்படுத்தாமல், உன் வீட்டின் வாசலில் வந்து நின்று கொண்டு ,சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால் பெருங்கோபம் கொண்டு இலங்கை வேந்தன் இராவணனை மாய்த்தவனும், நம் உள்ளத்துக்கினியவனுமான இராமனின் புகழை நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா! இப்போதாவது விழித்தெழுவாய்! ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?"

    பாசுரக் குறிப்பு

    இப்பாசுரத்தால் எழுப்பப்படும் அடியவரைக் குறிக்கும் போது , அவரது உடன் பிறந்த சகோதரன் எப்போதும் கண்ணனோடே இருப்பவர் என்று ஏற்றம் தந்து குறிக்கிறாள், ஆண்டாள். இராமாவதார செய்தி சொல்லும் 2 ஆவது பாசுரம் . யோகபஞ்சகத்தின் கீழ் அமைந்த இப்பாசுரத்தில் கர்மயோகம் பற்றிச் சொல்லப்படுகிறது.

    அவரவர்க்கு விதிக்கப்பட்டிருக்கும் கர்மங்களை, கடமைகளை (நித்ய நைமித்திக போன்றவைகளை ) எந்தவித சுயநலமும் கருதாமல், நான் செய்கிறேன் என்ற அகந்தையில்லாமல் , எனக்காகச் செய்கிறேன் என்ற பற்றுதலில்லாமல் (மமதை) இதற்காகச் செய்கிறேன் என்று பலன் கருதாமல் (பேர்,புகழ்,செல்வம்) இறைச் சிந்தனையோடு பலனெதிர் பாராமல், பற்றின்றி செய்வதே கர்மயோகம்
    . இதைத் தொடர்ந்து செய்வதினால், பிறவுயிர்களின் மீது கருணை பிறப்பதோடு, உள்ளத் தூய்மையும் அமைதியும் வாய்த்து, தன்னையும் (சீவாத்மா) தெரிந்து கொண்டு , இறைவனையும் (பரமாத்மா ) அடைய முடியும் (வீடுபேறு).

    சென்ற 11 ஆவது பாசுரத்தத்தில் ,"கறவைக் கணங்கள் பல கறந்து " என்று குறிக்கப்படுவது நாம் தினசரி செய்ய வேண்டிய கடமைகளைப் புரிவது (நித்ய கர்மா). இப்பாசுரத்தில் "கனைத்திளம் கற்றெருமை முலை வழியே பால் சோர " என்று சொல்வதினால், தினசரி செய்ய வேண்டிய கடமை தவறுதல் போல் தோன்றினாலும், "நற்செல்வன்' என்ற குறிப்பால், இறைவனுடைய தொண்டிலே ஈடுபட்டதனால், ஒருவர் தினசரி கடமையில் சற்றே விலகினாலும் அது தவறில்லை என்று விளக்கப்படுகிறது. அதாவது, இறைவனின் ஆணைக்குட்பட்டு செய்கின்ற கடமைகள், ஒருவர் அனுதினம் கடைபிடிக்க வேண்டிய கடமைகளைக் காட்டிலும் முக்கியத்துவமுடையவை என்பதே கருத்து.

    இறைவனுக்கு ஆற்ற வேண்டிய தொண்டின் பொருட்டு, கட்டாயம் செய்யவேண்டிய நமது தினசரிக் கடமைகளை சற்று நேரம் தவறிக் கூட செய்யலாம், அப்படிச் செய்தல் குற்றமில்லை. இறைவனின் ஆஞையின் (ஆணை, இறைத்தொண்டு) கீழ் செய்யும் கர்மா மிகவும் முக்கியமானது. நாமாய் விரும்பிச் செய்யும் அநுஞை கர்மாக்களை நாம் செய்யாவிட்டாலும் தவறில்லை.

    ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சியில் முதலாழ்வார்களுள் பொய்கையாழ்வாரைக் குறிக்கும் பாசுரம். நற்செல்வன் தங்காய்" என்ற பதம் பொய்கையாருக்குப் பொருந்தும். உலகில் தங்கையென்று திருமகளையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவர்கள்.குளத்தில் இருந்த தாமரை மலரில் (திருமகளைப் போலவே!) இவர் தோன்றியவர். அதனால்,தங்காய்! என்ற விளி பொய்கையாழ்வாருக்கு நன்கு பொருந்தும்.

    கனைத்து- முதன் முதலாகப் பேசத் தொடங்கும்போது கனைப்பது இயல்பு. பொய்கையார்க்கு முன்னம் ஆழ்வார்கள் யாருமில்லை. இவரே முதன் முதலாகப் பாசுரம் இயற்றிப் பரமனைப் பாடத் தொடங்கியவராகையால் இச்சொல்லாடல் !

    இளங்கற்றெருமை- எருமை என்றால் வடமொழியில் மஹிஷீ; எம்பெருமானுக்கு மஹிஷியான (மனைவி)பிராட்டியை ஒத்தவர், பொய்கையாழ்வார் . “இளங் கன்றுகளையுடைய” இவருக்குப் பின் வந்த ஆழ்வார்களுக்குத் தாயார் ஸ்தானத்திலிருப்பதைக் குறிக்கும்.

    கன்றுக்கிரங்கி- இவரது பாசுரங்கள் மற்றவருக்குத் தாய்ப்பால் போன்றது.

    இப்பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களையெல்லாம் எழுப்பியாயிற்று . “ஆழ்வார்கள் பன்னிருவர்” என்று சொன்னாலும் மதுரகவியாரும் (நம்மாழ்வாரோடு சேர்த்தி), ஆண்டாளும்(பூமாதேவியின் அம்சம்) ஆழ்வார் குழுவில் சேராதவர்கள். இவ்விருவரையும் எழுப்பும் விதமாகக் கூட இப்பாட்டிற்குப் பெரியோர் பொருள் சொல்கின்றனர்.

    நற்செல்வன் தங்காய்! என்றது நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே! எனக் கொண்டு, இங்கு நற்செல்வனென்பது நம்மாழ்வாரை, அவர் திருவாய்மொழி அருளும்போதில் மதுரகவிகள் அவருடைய கையைப் போலிருந்து அதை ஓலையில் வடித்தாராதலால்,இந்த விளி மதுரகவிகட்குப் பொருந்தும்.
    .
    இனி நற்செல்வனென்று பரந்தாமனைக் குறித்தால் ,அவருடைய தங்கமென்று (தங்காய் என்பதைத் தங்கமே எனப் பொருள் கொண்டு) ஆண்டாளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.“கோதற்ற ஞானத் திருப்பாவை பாடிய பாவை தங்கை” என்றும், “பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்றும் ஆண்டாளைக் குறிப்பது மரபே ! "ஆண்டாள் தன்னைத் தானே எழுப்பிக்கொண்டாளா?" என்றால், சொற்சுவைக்கு அப்படிச் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமே :)
     
    knbg, srsgjm, periamma and 2 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    இறைப்பணிக் காரணமாய் வீட்டின் எருமைகளைக்
    கறக்காமல் உன்ணண்ணன் அப்படியே விட்டதினால்
    சிறுகன்றினை உடையவந்தத் எருமைத் தாயார்கள்
    நிறைந்த மடிப்பாலோடுக் கன்றுகளை நினைத்தபடி,
    உறுபசியைப் போக்கவெண்ணித் தாமே சுரந்ததினால்,
    ஆறெனப் பெருகியோடும் பாலினால் தரைநனைந்த
    சேறுமிகவானப் பெருஞ்செல்வர் வீட்டின் பெண்ணே !
    உறைபனியெம் தலையில் விழுவதைப் பார்க்காமல்,
    பொறுத்துக் கொண்டுமுன் வீட்டுவாசலிலே நின்றபடி,
    வெறுப்பே யில்லாதவனாம், சிந்திக்க இனிப்பவனாம்,
    மறுக்கவொண்ணா புகழுடை இராமனும்- சீதையைப்
    பறித்துச் சென்றானந்த இராவணனும் என்பதினால்,
    சீறிச்சினமுற்றுப் போரில் சாய்த்தப் பெருமையினைக்
    கூறிக்கொண்டு பாடுவதை நீயுமுந்தன் செவியுற்றும்,
    திறந்தொரு வாய்ச்சொல்லும் பேசாது கிடப்பதென்ன?
    ஆறாதயெங்கள் மனக்குறிப்பை யாம் உரைத்தோம் !
    குறிப்பறிந்து இனியேனும் கண்களைத் திறந்துவிடு !
    உறக்கம் இதுவென்னப் பெரிதாகக் கொண்டுள்ளாய் ?
    சிறந்ததாம் ஆய்ப்பாடியில் வாழும் வேற்றில்லத்தார்
    உறக்கம் நீக்கியுன்னை எழுப்பவென நிற்குமெங்கள்
    குறிப்பினை அறிந்துவிட்டார் நீயும் விழித்தெழுவாய் !

    கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி- பால் கறக்கும் நேரம் வந்தும், அந்த வீட்டு உரிமையாளன் தங்களைக் கறக்கும் கடமையைச் செய்யாததால், தங்கள் கன்றுக்குப் பால் தர இயலாத நிலைமையைப் பொறுக்காத தாய் எருமைகள் தமது சிறுகன்றுகளை நினைத்து ஆற்றமாட்டாமல் சத்தமிட்டன.

    நினைத்து முலைவழியே நின்றுபால் சோர- அந்தக் கன்றுகளை நினைத்தபடியே, அவற்றின் பசியாற்றுவதற்குத் தாமாய் முலைக்காம்பில் வழியே பாலினைச் சுரந்தன. 4 ஆம் பாசுரம் ஆழிமழைக்கண்ணாவில் சொன்னது போல ,மேகங்கள் கூட மழை பொழிய நினைத்தால் முதலில் கடலில் புகுந்து நீரை முகர்ந்து கொண்டு வந்து பின்பு பொழிய வேண்டும். ஆனால் கறவை மாடுகள் தம் கன்றுகளை நினைத்தவுடன் அருவி போல முலைக்காம்பு கடுத்துப் பாலைப் பொழிந்துவிடும் !

    நனைத்து இல்லம் சேறாக்கும்
    - கறவாது விட்டதனால் மாடுகள் தாமே பாலைச் சொரிந்து வீட்டைச் சேறாக்கின. பால் தரையில் கொட்டி வீடே சேறாகும் அளவுக்கு நிறையப் பசுச்செல்வமுடைய இடையர் வீடு. எருமைகளைக் கறக்கும் நேரத்தில் தவறி விட்டதைச் சொல்வதன் மூலம் ,பொழுது வேகமாய் விடிவதையும் இப்பாசுரம் குறிக்கிறது. பொய்கையாழ்வாரும் “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று அழுதவராதலால் , பெருமாள் கோவிலைச் சேறாக்கினாரென்று சுவைபடக் கொண்டு இச்சொல்லாடல் !

    நற் செல்வன்
    - கண்ணனோடு இருந்ததனால், வீட்டில் மாடுகறக்கும் வேலை செய்யாத பிள்ளை நல்லவனே. வெண்ணெய் களவாடும் போது எப்பவுமே உடன் இருப்பவன் ஸ்ரீதாமன் (எ) நற்செல்வன்! கண்ணன் மாட்டிக் கொள்ளும் போது, அவனைத் தப்புவிக்க, தான் அடி வாங்குவானாம் ! தங்காய்- அப்படிப்பட்ட செல்வந்தனுடைய தங்கையே ! உன்னுடைய அண்ணன் கண்ணனுக்கு அணுக்கத் தொண்டனாக இருக்கிறான், நீயென்னவென்றால் எம்முடன் நோன்பிருக்க வராமல் உறங்குகிறாயே என்று இடித்துரைக்கிறாள்.

    பனித் தலை வீழ நின் வாசற் கடைபற்றி - மார்கழிப் பனி விழும் விடியல் காலையே நாங்கள் உன் வீட்டின் முன்வாசலுக்கு வந்தோம். வாசலில் சேறாக இருப்பதனால் உள்ளே வந்து எழுப்ப முடியவில்லை. இங்கேயே உங்கள் வாசல் முற்றத்தில் வழுக்கி வீழாமலிருக்க கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு பனி பெய்யும் பொழுதில் காத்திருக்கிறோம் என்றாள் ! நான்காம் பாசுரத்தில் மேகங்களைப் பொழியச் சொல்லியபடி அவை காலத்திற்கேற்றபடி மழையும் பணியும் பெய்கின்றன, ஆதலால் இவர்கள் மார்கழிப் பனியில் நனைகிறார்கள்.

    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற - தன்னுடைய மனைவியைத் தன்னிடமிருந்து பிரித்தான் என்ற காரணத்தினால் தான் இராவணன் மீது கோபம் கொண்டு அவனைப் போரில் கொன்றான் இராமன்.இராமனாகிய உத்தம புருஷனுக்குக் கோபம் உண்டு, ஆனால் வெறுப்பு கிடையாது. சீதையைக் கவர்ந்து வந்த குற்றத்தைச் செய்தாலும் இராவணன் மிகுந்த பராக்கிரமசாலியே ! நாடு, செல்வம், படை, மக்கள் என்று பலவும் பல்கிப் பெருகி வாழ்ந்தவன் தான்.சிவபெருமானின் கால் கட்டைவிரலுக்குத் தான் இணையாக மாட்டோம் என்று உணர்ந்த போதும், அவனது அகந்தை அழியவில்லை. இராமன் ஒவ்வொருமுறை அவனுக்குத் திருந்த வாய்ப்பளித்த போதும் அவன் சரணாகதி செய்யவில்லை. வணங்காமுடியாகவே மாண்டு போனான். ஆகவே தான் 'கோமான்' என்று குறித்தாள், அவனை பெருமை படுத்தவில்லை!

    மனத்துக்கு இனியானைப் பாடவும்
    - இராமனைப் புகழ்ந்து பாடுகின்றோம். ஏகபத்தினி விரதனான காரணத்தாலே அவன் மனதுக்கு இனியான். எல்லா நற்குணங்களைக் காட்டிலும், ஒரு கணவன் ஏகபத்தினி விரதனாக இருப்பதே, அவன் மனைவிக்கு உவகை தரும். இராமபிரான் இராவனனோடு போர் புரியும் போது அவன் மிகவும் அசதியுற்றதைக் கண்டு இரக்கமுற்று, "இன்று போய், நாளை வா " என்றானல்லவா ? புகைக்கும் இரங்கும் குணங்களினால் உயர்ந்த இராமனைக் குறிக்கும்போது “மனத்துக்கினியான்" என்கிறாள் . தனது ஆருயிர் மனைவியின் வருத்தமறிந்தவன் இராமன். தன்னுடைய தாய்மார்களாகட்டும், மனைவியாகட்டும், ஏன் தன்னை மோகித்த அரக்கி சூர்பனகையாகட்டும் , இப்படி எல்லா பெண்களிடத்தும் இனிமையான சுபாவத்தோடு நடந்தவன் இராமன்.
    ஆனால் கண்ணபிரான் பெண்களைப் படுத்தும் பாடுகளை நினைத்தால் , அவன் மனத்துக்கு இனியனல்லன் போலும் ! ஆயினும் கார்வண்ணனைக் கண்ணுக்கினியானாகக் கொள்வது ஆயர்பாடியினரின் வழக்கமே ! இராமனோ திரேதாயுகத்தினன், ஆகவே ஆய்ச்சிகளுக்கு அவனை நேரில் காணும் பாக்கியமில்லை. மனிதனால் எண்ணுகிறர்கள்,அவன் மனத்துக்கினியான். கண்ணனோ ஆயர்களோடு துவாபர யுகத்திலிருந்தவன். ஆய்ச்சிகளவனைக் கண்ணால் காணும் பேறடைந்தார்கள். எனவே கண்ணன் கண்ணுக்கினியான் !

    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
    - இராமனைப் பாடுவதைக் கேட்ட பின்னராவது எழுந்திரு,இன்னுமென்ன உறக்கம் ?


    அனைத்து இல்லத்தாரும் அறிந்தே- இங்குள்ள மற்ற எல்லோருக்கும் நீ எழவில்லை என்று தெரிந்து விடும். இச்சொல்லாடலுக்கு இருவிதங்களில் பொருள் கொள்ளலாம். கண்ணனைக் காண்பதற்கு எல்லோரும் வர வேண்டுமென உள்ளிருப்பவள் நினைத்துக் கிடக்கிறாளென்றும், அவளிடம் அனைவரும் கண்ணன் சேவைக்கு வந்துவிட்டனர் என்று தெரிவிக்கும் விதமாகச் சொன்னாள் என்று சொல்வது ஒரு கருத்து. "ஆயர்பாடியிலுள்ள பெண்களெல்லாரும் திரண்டு வந்து உன் மாளிகை வாசலில் நின்று கூப்பிட, நீயோ பொழுது விடிந்ததை உணராமலிருக்க ,நாங்கள் உன்னை வருந்தி அழைப்பதால் , உனக்கு எம்மிடையே இருக்கின்ற மதிப்பை அனைவரும் அறியவேண்டுமென்று எதிர்பார்த்துக் கிடக்கிறாயென்றாலும் , அதை அனைவரும் அறிந்தனர் ; இனியேனும் நீ உணர்ந்து வா !" என்கிறார்கள் என்பது மற்றோர் கருத்து.
     
    knbg, periamma and rai like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள்

    அடியவனைக் காப்பதிலேத் தாமதம் ஏற்பட்டால்,
    நொடியும் தாங்காமல் பதறுகின்ற இறைவனவன்,
    ஓடித்தான் வந்துத் தன்னருளைப் பொழிதற்போல்,
    மடிப்பால் கன்றுக்கு சுரக்கும் தாயெருமையென,
    மடமையில் உழலுகின்ற சீவர்களின் மேலிரங்கி,
    சீடருக்கு நான்மறையின் சாரங்களை ஊட்டுகிற,
    நெடும்புகழ் வாய்த்திருக்கும் ஆசானைப் பணிந்து
    அடிதொழுது பெறுகின்ற ஞானத்தின் துணையால்,
    கடமைகளை விருப்பு வெறுப்பின்றி செய்யினும்,
    விடாமல் இறைத்தொண்டில் ஈடுபட்டு வாழ்தலே,
    தேடுகின்ற செல்வங்கள் அனைத்திலும் மேலெனும்,
    ஈடில்லாக் கர்மயோகம் எனுமுண்மைத் தெளியுமே !
    நெடிதுள்ள அறியாமையிருள் தன்னைப் போக்க,
    படியளக்கும் பரமனைக் காட்டும் நல்லாசானால் ,
    நெடியவனின் திருமந்திரம் உபதேசம் பெற்று,
    கடிவாளமின்றிப் தம் புலன்சார் உணர்வுகளை,
    அடக்காமல் விட்டுவிடும் சீவர்களைக் காக்கத்
    தடுத்தாண்டு அருள்கின்றப் பரமனைத் துதித்து,
    அடியவனும் ஆண்டவனும் ஒன்றெனக் கொள்ளும்,
    மடமையைப் போக்கியவன் பாதத்தில் பணிந்து,
    ஈடில்லாத எளியவழி சரணாகதி மேற்கொண்டால் ,
    நீடிக்குமானந்தம் சத்தியம் ஞானத்துடன்-குணக்
    கேடின்றியும் இருப்பவனாம் இறைவன் அருளாலே,
    பீடை உருவாக்கும் பெரும்பாவங்கள் தொலைந்து
    பாடின்றிப் பேறுறும் வாய்ப்பினையும் பெறலாம் !
    தேடலினால் பெறுமிந்த இறைஞான அனுபவத்தை,
    அடியவர்கள் மற்றோர்க்கும் எடுத்துக்கூறி ஒன்றாய்க்,
    கூடித்தொழுது கொண்டு இறைப்பணியில் ஆழ்ந்து,
    கொடியதான இகவுலகப் பற்றிருளினைக் கடந்து,
    பாடிப்பரமனடித் தொழுது பேற்றைப் பெறலாம் !

    கனைத்திளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி - தன்னுடைய அடியவருக்கு அருள நொடியும் தாமதிக்காதப் பரமனைப் போலே (கஜேந்திரனுக்கு அருள வேகவேகமாக ஆதிமூலமாகிய பரமன் வந்தான் - நாராயணீயம் )
    தன்னுடைய சீடர்களின் மீதில் கருணை கொண்டு,

    முலைவழியே நின்று பால் சோர - தாயாராகிய இலக்குமிதேவியைப் போல இருக்கும் ஆச்சார்யர்கள், நான்மறைகளென்னும் முலைக்காம்புகள் வழியே இறைஞானப் பாலைப் பொழிவார்கள். நான்கு முலைகளை , ஸ்ருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் என்பதான நான்கின் மூலம் அடையும் ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் - ஆச்சார்யக் கருணையினைப் பெறுகின்ற அடியவர்கள், அவரருளும் உபதேசங்களால் இறைஞானமாகிய செல்வத்தை அடைவார்கள். கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டே, கைங்கர்யம் என்கிற இறைத்தொண்டில் ஈடுபடும் நோக்கே நற்செல்வம் ஆகும் . அத்தகைய புண்ணியம் வாய்க்கப்பெற்றத் தவசிகளே 'நற்செல்வர்கள் !'

    பனித்தலை வீழ -அறியாமையுள்ள அடியவர்கள்

    நின் வாசல் கடைப்பற்றி- இறைவன் கோயில் கொண்டிருக்கும் திருமந்திரத்தை (ப்ரணவம் +நமோ+நாராயணாய) ஆச்சார்யரிடம் உபதேஸம் பெற்று

    சினத்தினால் செற்ற- இறைவன் யாரென்று ஆச்சாரியார் மூலம் உணர்ந்த பின்னும் அவனைச் சரணடையாமல் , புலன்களின் வசத்தில் இருக்கும் அடியவர்களுக்கு இறைவன் மறவருள் செய்வான்.

    தென்இலங்கைக் கோமானை - இராவண உருவகம்-புலன்களால் துய்க்கும் சிற்றின்ப உணர்வுகள்.
    இராமனே பரமாத்மா அவனைச் சரண் புகுந்து என்னைத் திருப்பித் தந்து விடு என்று சீதை குருவாகி ஞானத்தை வழங்கினாலும், இராவணன் கடைசி வரை சரண் புகாமல் இருந்ததால், கருணையே வடிவான இராமன் அவன் பேரில் கோபம் கொண்டு வதைத்தருளினான். சீதையைக் கவர்ந்ததை விட, ஆணவமும், மமதையும் தலைதூக்கி ஆடிய இராவணன், சரணாகதி செய்ய மறுத்ததே பரமனுக்கு கோபம் விளைத்தது.

    மனத்துக்கினியானைப் பாடவும்- இறைவன் சத்தியம், ஞானம், ஆனந்தம், நற்குணம் இவற்றின் உருவானவன். ஆதலால் அடியவரின் மனதுக்கு இனியவன். அவனது பெருமைகளைப் போற்றிப் பாடிச் சரணம் செய்தல்.

    நீ வாய்திறவாய் - அப்படிச் செய்யும் சரணாகதியைத் தனியாகச் செய்யாமல், அடியவர் அனைவரோடும் சேர்ந்து அதைப் பற்றிப் பேசி , இணைந்து செயல்பட வேண்டும்.

    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்- பரமாத்மாவும் சீவாத்மாவும் ஒன்றேயென்று இனிமேலும் மயங்காமல் (அத்வைத நெறிச் சாடல்? ! ) பரமாத்மாவைப் பணிந்து சரணம் செய்யும் சீவாத்மா நாமென்று அறிவுற்று , சம்சாரக் கடலின் இருளினை நீங்கி,

    அனைத்துஇல்லத் தாரும் அறிந்தே- எல்லோரும் மேற்கொள்ளக் கூடிய எளிய சரணாகதி வழியில் இறைவனைப் பாடிப் பணிந்து வீடுபேறு பெறலாம். இறையடியார் தாம் அறிந்த எளிய சரணாகத அனுபவத்தைத் தனியே செய்து பயனடையக் கூடாது, எல்லோருக்கும் அதைப் பகிர்ந்தளித்து வீடுபேறு அடைய வேண்டும்.
     
    knbg and rai like this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சாதாரணமாக திருப்பாவை 11, 12 இரண்டு பாசுரங்களையும் சேர்த்தே வ்யாக்யானம் செய்வது வழக்கம் .எருமைகள் உணர்ச்சியால் உந்தப்பட்டுத் தாமாகவே பால் சுரக்கின்றன.ஆச்சார்யர்கள் ,தங்களை சிஷ்யர்கள் அணுகினாலும் அணுகாவிட்டாலும் நற்செய்திகளை அள்ளி அள்ளிக் கொடுக்கின்றனர்.அவர்கள் இந்த காலத்து google குரு மாதிரி.Sorry Google has followed them

    எல்லாம் கிடக்க ஆசார்யனை போயும் போய் எருமைக்கு

    ஒப்பிடலாமா என்பது வாதம்.நாம் சோம்பேறியாக இருப்பவரை எருமைக்கு ஒப்பிடுகிறோம். முன்பெல்லாம் பள்ளியில் மந்தமான குழந்தைகளை எருமையோடு ஒப்பிடுவது வழக்கம்.

    இங்கே அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது.

    எருமைக்கு நாசூக்கு நாகரீகம் தேவையில்லை.மழையோ வெயிலோ வெளியிலேயே நிற்கும் .பொதுவாக பசுவை மட்டுமே கொட்டிலில் காட்டுவார்கள்.எருமை நனைந்து கொண்டே இருக்கும்.தான் கஷ்டப் பட்டாலும் அருமையான கெட்டிப் பாலை வழங்கும்.உரை ஊற்ற எருமைப் பால் தான் வாங்குவர்.கெட்டியான தயிரும், கணிசமான வெண்ணையும் தரும் முரட்டு தோல் கொண்ட எருமை.

    ஆசார்யன் tuff ஆக இருந்தாலும் அவர் சொல்லும் விவரங்கள் நீதி உடையவை, சத்து கொண்டவை.அதில் மறைந்துள்ள வெண்ணையும் நெய்யும் அளிக்கும் பலன் பல.

    நாங்கள் ஸ்ரீரங்கம் பள்ளியில் படிக்கும்போது ஒரு prayer பாட்டு

    " விறகு தீயினன் பாலில் படு நெய் போல்

    மறைய நின்றுணர் மாமணி ஜோதியாய்

    உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்

    முறுக வாங்கி கடைய முன் நிற்குமே.

    முரட்டு எருமைப் பால் நிறைய நாள் தாங்காது கெட்டு விடும்.அதைக் காய்ச்சி உரை ஊற்றினால் கெட்டித்த தயிர். நாள்பட நிற்காது.அதை நன்கு கடைந்து வெண்ணெய் எடுத்தால் இன்னும் சில நாள் தாங்கும்.ஆனால் நெய் மாதக் கணக்கில் கெடாது.

    ஆச்சர்யனுடைய அறிவுரைகளும் மேலுழுந்த வாரியாக நோக்கினால் மனதில் நிற்காது.அதை ஆழமாக மனதில் இருத்தி உள் நோக்கி செலுத்தினால் கிடைக்கும் ஞானமும் ஆனந்தமும் நிலைத்து நிற்கும். ஆசாரியன் தன்னை எருமை என்று அழைத்தாலும் கவலை கொள்வதில்லை.அவரது நோக்கம் சிஷ்யரை மேல் நோக்கி உ ணர்த்துவது மட்டுமே.

    தேங்க்ஸ் பவித்ரா,You have crossed 40% of the holy pilgrimage

    With best wishes



    Jayasala 42
     
    knbg, srsgjm, periamma and 1 other person like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நல்ல பாட்டு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !
    பொறுமையில் எருமை போல் இருப்பது சிறப்பு என்று என் தகப்பனார் சொல்லுவார் ! அப்போது நகைத்தாலும்,பிறகு அதன் பொருளுணர்ந்தேன்.பொறுமை எருமைக்குப் பெருமையே ! அதன் நெய்யின் தரமும் அருமையே !

    முற்றிலும் உண்மை ! நான் பல தலைமுறைகளாக ஆசிரியப் பணி செய்யும் குடும்பத்துப் பெண். இதை என்னால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகின்றது.

    இது என் பாக்கியம். தங்களது உளப்பூர்வமான வாழ்த்துகளுக்கு என் பணிவான நன்றி !
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்- பரமாத்மாவும் சீவாத்மாவும் ஒன்றேயென்று இனிமேலும் மயங்காமல் (அத்வைத நெறிச் சாடல்? ! ) பரமாத்மாவைப் பணிந்து சரணம் செய்யும் சீவாத்மா நாமென்று அறிவுற்று , சம்சாரக் கடலின் இருளினை நீங்கி,

    அனைத்துஇல்லத் தாரும் அறிந்தே
    - எல்லோரும் மேற்கொள்ளக் கூடிய எளிய சரணாகதி வழியில் இறைவனைப் பாடிப் பணிந்து வீடுபேறு பெறலாம். இறையடியார் தாம் அறிந்த எளிய சரணாகத அனுபவத்தைத் தனியே செய்து பயனடையக் கூடாது, எல்லோருக்கும் அதைப் பகிர்ந்தளித்து வீடுபேறு அடைய வேண்டும்.

    வீடு பேறு அடைய எளிய வழி சரணாகதி -உயரிய தத்துவம்
     
    knbg likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆம் பெரியம்மா, சரணாகதி ஓர் உயரிய தத்துவமே !
     

Share This Page