1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (11) கற்றுக்கறவை கணங்கள் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 21, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    11) ஆண்டாள் பாடல்

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
    செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
    குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
    புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
    சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
    சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

    பாசுரப் பொருளுரை

    "கன்றுகளுடன் இருக்கும் நிறைந்த எண்ணிக்கையிலுள்ள பசுக்களைக் கறந்து பால் சேர்க்கின்றவர்களும் ,(பசுச்செல்வம் நிறைந்த கோவலர்கள்) தம்முடைய பகைவர்களின் ஆற்றல் அழியுமாறு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களுமான, செல்வத்திற்கும் ஆற்றலுக்கும் ஒரு குறையுமில்லாத, இடையர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடி போன்ற அழகிய பெண்ணே! புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், தோகை விரித்தாடும் அழகிய மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! நிறைந்த செல்வத்தை ஆளுகின்ற பெண்ணே , நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவது எதற்காக என்று நாங்கள் அறியோம் ! (உறக்கம் கலைந்து எழுந்து வா ) "

    பாசுரக் குறிப்பு

    5 X 5 +5 இல் மூன்றாம் ஐந்தின் தொடக்கம் . மூன்றாம் பகுதி (11-15)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள், முன்னமே இறைநெறியில் ஆழ்ந்து ஈடுபட்ட வழி வந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன-இப்பாசுரத்தில், கண்ணனைப் போன்றேக் குழந்தைத்தனமும் குறும்பும் கொண்ட, மிகவும் அழகு வாய்ந்த, பெயர் பெற்றக் குடியில் பிறந்த அடியவரை எழுப்புகிறார்கள்.

    யோகபஞ்சகத்தின் கீழ் அமைந்த பாசுரம் இப்பாசுரத்தில் இறைவனை அடையும் மார்க்கங்களில் ஒன்றான பக்தி யோகம் பற்றிச் சொல்லப்படுகிறது.நல்ல ஆச்சார்யனை அடைந்து, பக்தியின் மூலம், ஞானமும், வைராக்கியமும் கைவரப் பெற்றவர்கள், இறைநாமத்தைப் பாடி அவனை சரணமடைந்து விட்டால் அவர்களை வேறெந்தப் பாவமும் சேராது, வீடாகிய பேறு கிட்டும் என்பது கருத்து. மிகவும் ஆழமான உட்பொருள் கொண்டிருக்கும் பாசுரம். பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் பெறப்படுபவை, ஆனால் பக்தி யோகம், அதுவாக வாய்க்க வேண்டும். சீவாத்மா பரமாத்மாவின் மீது வைக்கும் அன்பினை அடிப்படையாகக் கொண்டதே பக்தி யோகம்.அவரவர் விரும்பும் இறையுருவை வணங்கி, அதன் பெருமைகளைக் கேட்டும், பெயர்களைப் பாடியும், ஆராதனை செய்தும், வழிபட்டும், இறைத்தொண்டு புரிந்தும், இறைவனுடைய அடிமை நாமென்று ஆத்ம நிவேதனம் செய்தலே பக்தி யோகம்.யாரொருவர் பக்தியுடன் ஆச்சார்யரைப் பணிந்து ஞானமடைந்து , இறைவனையே அடைய வேண்டும் எனும் வைராக்கியத்துடன் இருக்கிறாரோ, அவருக்கே இறைக்கருணை மிக எளிதாய் வாய்க்கும். அவ்வடியார் தம்முடல் நீக்கும் , தருணத்தில் வைகுண்டத்திலிருந்து வைணவ அடியார்கள் வந்து அவரின் ஆன்மாவைப் பரமபதம் சேர்ப்பார்கள் என்கிற வைணவ நம்பிக்கையை இப்பாசுரம் நிலைநிறுத்துகிறது.

    ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சியின் வரிசையில், முதலாழ்வார்களில் இரண்டாமவரான பூதத்தாழ்வாரை எழுப்பும் பாசுரம்." குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! "என்ற விளி பூதத்தார்க்கு நன்கு பொருந்தும். பல பொருள்களை யுடையதான கோ என்னும் சொல் கோதா என்று ஆண்டாளையும் குறிப்பது போல, அருமையான பாசுரங்களை இங்கேக் குறிக்கிறது. கோவலர் - பாசுரங்களை அருளவல்லவர்களான ஆழ்வார்கள். குற்றமொன்றில்லாத என்ற குறிப்பு முதலாழ்வார்கள் மூவர்க்கே பொருந்தும்; கருவிலடைந்து பிறந்த குற்றம் மற்ற ஆழ்வார்களுக்கு உண்டு (ஆண்டாள் தவிர்த்து) கருவில் பிறக்காதவர்கள் முதலாழ்வார்கள்,கோதையைப் போன்றே கோவலர் , அவர்களுள் 'பொற்கொடியே!'
    "கோல்தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம்" என்கிற பாசுரத்தினால் தம்மை ஒரு கொடியாகச் சொல்லிக்கொண்டவர் பூதத்தாழ்வாரே . எம்பெருமானாம் கோலினைப் படரத் தேடிச் செல்லுகின்ற கொடி போல்வேன் நான் என்றவர் பூதத்தாழ்வார்!

    ஞானம் பக்தி வைராக்கியம் மூன்றுள் இடைப்பட்டது பக்தியே. பூதத்தாழ்வார் தமது திருவந்தாதியைத் தொடங்கியதும்,

    அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
    இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
    ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ்புரிந்த நான்
    .

    நிறைவு செய்ததும்,

    மாலே! நெடியோனே! கண்ணனே, விண்ணவர்க்கு
    மேலா! வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்
    விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
    அளவன்றால் யானுடைய அன்பு .


    அன்பு என்கிற பக்தியோடு தான். அதுவே பாம்பின் இடையழகாக (புற்று அரவு அல்குல்) உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
     
    rai and periamma like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    எண்ணப் பலவானக் கன்றுடைய பசுக்களையும்,
    எண்ணி முடிப்பதற்குள் கறக்கின்ற திறத்தோடு,
    திண்மை எடுத்தத் தம்மெதிரிகளை உட்புகுந்து
    ஆண்மை வெளிப்படுத்தி வெல்லும் வீரத்தோடு,
    கண்ணியம் குறையாத நற்குணப் பெருமைகள்
    கொண்டுள்ள ஆயர்குலப் பெருங்குடியில் பிறந்த
    பெண்ணே, தங்கக்கொடி போன்றழகு வாய்த்தக்
    கண்ணே,படமுள்ள நாகத்தின் கழுத்தையொத்த
    நுண்ணிய இடையழகும் ,தோகை விரித்தாடுகிற
    பெண்மயிலைப் போன்றே கூந்தலை விரித்தவளே,
    விண்டுரைத்தோம் உன்னழகை வாசல் திறந்திடு !
    வெண்ணிலா முற்றத்துன் உறவினரும் தோழியரும்
    ஒன்றாக நுழைந்தந்தக் கருமேக வண்ணமுடையக்
    கண்ணனின் பெயரைச் சொல்லிப் பெருமைகளைப்
    பண்ணிசைத்தும்,புகழைப் பாடியும் நிற்கின்றோம்!
    எண்ணற்ற செல்வங்களை ஆளுகின்ற நீயுமுந்தன்
    கண்களையும் திறவாமல் ,பேசாமல், அசையாமல்,
    இன்னுமிப்படி உறங்கிக் கிடப்பதன் பொருளென்ன ?

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
    - கன்றுடன் இருக்கும் பசுக்கள் பலவற்றைக் கறந்து ,
    (பசுச் செல்வம் நிறைந்த ஆயர்பாடிக் கோவலரின் வீடு).கண்ணன் இருந்த ஆயர்பாடியில், கன்றுகள் பலவற்றை ஈன்ற பின்னரும் கூட பசுக்கள் தளர்வடையாத இளமையோடு, நிறைந்த பால் செல்வத்தைத் தருமளவு இருந்தனவாம் ! முந்தைய 8 ஆம் பாசுரத்தால், எருமைகள் மேய்ச்சலுக்கு முன் சிறுதீனி செய்தனவல்லவா ? இப்பாசுரத்தில் , அவற்றைக் கறக்கும் நேரம் வந்ததைக் குறிக்கிறாள்.

    மற்ற ஆழ்வார்கள் பெரிய பாசுரங்களை இயற்றினார்கள். முதலாழ்வார்கள் எளிதாகப் புரியும் படி வெண்பாவகிய மிகச் சிறிய பாசுரங்களை அருளினார்கள். பொய்கையாரின் முதல் திருவந்தாதி 'கறவை கணம்' என்றும், பூதத்தாழ்வாரின் 2வது திருவந்தாதி "கறவை கணங்கள்" என்றும், பேயாழ்வாரின் 3ஆம் திருவந்தாதி "கறவை கணங்கள் பல" என்றும் குறிப்பிடப்படுகின்றன.

    செற்றார் திறலழிய- எதிரிகளின் திறமை அழித்துத் தோற்கடித்தல். சென்று செரு செய்யும்- பகைவரின் இடத்திற்கே சென்று போரிடக்கூடிய வல்லமை பொருந்தியவர்கள். நாம் பல இடங்களுக்குச் சென்று பகவத் விரோதிகளை விவாதங்களில் வென்று நல்வழிக்கு கொணர வேண்டும் என்று பூதத்தாரே அவரது பாசுரம் ஒன்றில் இயம்பியுள்ளார். இறைவனது பெருமையைப் பொறுக்காதவர்கள், இறையடியார்க்குப் பகைவர்; இறையடியாரின் பெருமையைப் பொறுக்காதவர்கள், இறைவனுக்குப் பகைவர். இவ்விருவகைப் பகைமையும் கொண்டவர்களை எதிர்த்து அடக்குதல்.

    குற்றமொன்றில்லாத கோவலர்- பகைவருடன் போரிட்டு அவர்களுடைய பலத்தையும், திறனையும் குன்றச் செய்து அவர்களை வெற்றி கொண்டாலும், அப்பகைவரை அழிக்காத நல்ல குணம் கொண்டவர்கள்.

    கோவலர்த்தம் பொற்கொடி - ஆயர்பாடியில் அப்படிப்பட்டப் பெருமை வாய்ந்த பெருஞ்செல்வந்தர் வீட்டுப் பெண். பூதத்தாழ்வாரின் திருவந்தாதியே ஆழ்வார் கூட்டத்தினருக்கு செல்வம் !

    புற்று அரவு அல்குல் - புற்றில் வாழும் பாம்பின் படம் (பாம்பின் தலை, கழுத்துப் பகுதி )சுருங்கியும் விரிதலும் போல் எளிதாய் அசையும் இடையுடைய பெண்.

    புனமயிலே - தோகை மயிலைப் போல அழகுடையகூந்தலை விரித்தவள் . இறைவனைப் பாடும்போது பரம எதிரிகளான பாம்பும் மயிலும் கூடப் பொருத்தமாய் இணங்கி வார்த்தைப் படுவது ஆண்டாளின் மொழி ஆளுமைக்குச் சான்று ! பொழில் சூழ்ந்த இடத்திலே தான் மயில் வாழும் பூதத்தாழ்வார் தோன்றிய தலமோ திருக்கடல்மல்லை என்கின்ற மாமல்லபுரம். மேகம் நீர் பருக வருமிடமான கடற் கரையிலே மயில்கள் மகிழ்ந்து நிற்கும். மயில் கார் மேகத்தைக் காண்பதிலே மிகவும் மகிழ்ச்சியடைந்து நடமிடுமாற்போல் கார்மேனியனைக் கண்டு இவர் பக்தி நடமாடுவார் . அதை வைத்தே இச்சொல்லாடல் !

    போதராய்- கதவைத் திற. திருக்கோவலூர் இடைக்கழி விளையாடல் குறிப்பு

    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
    -- ஊரிலுள்ள உன் உறவினர், தோழியர் எல்லாரும் வந்து. பூதத்தாருக்குப் பொய்கையாரும் பேயாரும் சுற்றத்தவர்கள் , மற்றையாழ்வார்கள் தோழிமார் !

    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட - உன் வீட்டு முற்றத்தில் நின்று கண்ணனுடைய பெயர்களைச் சொல்லிப் பாடுகிறோம் . முற்றம் என்றால் வைணவக் கோவில்களென்று பொருள். அடியார்கள் ஒன்றாகக் கூடி இறைவனைப் பாடுமிடம். மழை மேகங்களைக் கண்டதும் மயில் எப்படி ஆனந்தக் கூத்தாடுமோ, அது போன்றே, கார்வண்ணனாம் கண்ணனைப் பாடினால், மயிலைப் போன்ற அடியார்கள் ஆனந்தமாய் ஆடுவார்கள். " உலகேழும் முற்றும் விழுங்கும் முகில்வண்ணன் ஏத்துமென்னெஞ்சு" என்று முகில் வண்ணன் பேர் பாடினவர் இவ்வாழ்வாரே.

    சிற்றாதே (- சிற்றல்-சிதறுதல்; அங்கங்களை அசைத்தல்) பேசாதே செல்வ பெண்டாட்டி நீ - பெரும் தனம் படைத்தச் செல்வச் சீமாட்டி, எங்களோடு பேசாமல்,அசையாமல் படுத்திருக்கிறாய்
    எற்றுக்கு உறங்கும் பொருளே- ஏன் இன்னும் உறங்குகிறாய்
     
    rai and periamma like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள்

    ஏற்றமிகு மறையைக் காக்கும் காவலராய்ப்,
    பற்பலவாய் உள்ள மறையும் மற்றவையும்,
    கற்றுக் கரைகண்டு ஞானமெனும் பாலைப்
    பெற்று மறையினை ஏற்காதுக் குறையாகக்
    கற்று இகழ்வோரைக் கடியாது கருணையுடன்,
    செற்று வாதிட்டு இறைஞானம் அவர்களுமே
    உற்றுப் பேறடையச் செய்யும் நல்லாசானைப்
    பற்றிப் படரும் கொடியொத்த அடியவர்கள்,
    புற்றில் நுழைகையிலே படத்தினைச் சுருக்கி,
    வெற்றுத் தலையுடனே புகுகின்ற நாகமென,
    ஏற்றும் மூன்றான பக்திஞான விரக்தியுள்ளே,
    போற்றத் தக்கதாம் பக்தியை மேற்கொண்டு,
    உற்ற அடக்கத்துடன் ஆசானைப் பணிந்தால்,
    மற்ற இரண்டுமே மிகயெளிதாய் அடைவாரே !
    சீற்றமிகு விடங்கள் அண்டிடாத மயில்களுமே,
    காற்றில் கருமேகம் கண்டு ஆடுமாப்போல்,
    முற்றும் தீயெண்ணம் தம்மை அண்டாதபடி,
    ஏற்றம் கொண்டுள்ள ஆசானும் தனையண்டிப்,
    போற்றியடி பணிகின்ற மாணவர் திறமறிந்து
    கற்றுத்தர இசைவார் இறைஞான விளக்கத்தை !
    இற்றைச் சிறப்புள்ள அடியார்கள் அகமகிழ்ந்து
    மற்றுமுள்ள அடியார்க் குழாத்தை நாடிக்கூடி
    கற்றளியில் சிலையுருவில் உள்ள இறைவனைப்
    போற்றிப் பாடித் தொண்டிழைத்து மகிழ்ந்தபடி
    மற்றுமவர் அறிந்தும் ,அறியாதும் இழைத்திட்டக்
    குற்றங்கள் குறித்தக் கவலைகளை உதறிவிட்டு,
    முற்றிலும் இறைநாமம் மட்டுமே உரைத்தபடிப்,
    பேற்றை அளிக்கவல்ல சரணாகதி செய்திட்டால்,
    சிற்றின்பக் கட்டறுந்து அகந்தை மமதையெனும்
    குற்றங்கள் விடுபட்டு இறையன்பும் அடைவாரே !
    பற்பல ஏற்றங்கள் பெற்றுள்ள இவ்வடியவர்கள் ,
    வெற்றுடல் விடுக்கையிலவர் சூட்சும சரீரத்தில்,
    குற்றமில் இறைவன் தொண்டர்கள் நுழைந்துப்,
    உற்றமுறையில் இறை நாமங்கள் செவியோதி,
    பேற்றையளிக்கும் பரமபதம் கூட்டிச் செல்வர் !
    போற்றத் தக்கவராம் இவ்வடியார் மனமிரங்கி
    மற்ற அடியவர்க்குப் பிணியாகும் இவ்வுலகப்
    பற்றுகளைப் போக்க உதவியும் செய்திட்டால்
    பெற்றிடலாம் வீடுபேறு கவலையுற வேண்டாமே !
     
    rai and periamma like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கறவை- ஞானமெனும் பாலைப் பொழியும் வயதிலும் மூத்த ஆச்சார்யர்களைக் குறிக்கிறது; கற்று- சிறுவயதிலேயே ஞானத்தைப் பொழிகின்ற ஆச்சார்யர்களைக் குறிப்பது; கற்றுக் கறவை - நல்ல மாணாக்கரைப் பெற்றுள்ள ஆச்சார்யர்கள் ; பல கறந்து - பற்பல இடங்களிலிருந்தும் , தம்முடைய ஆச்சார்யர்களிடமிருந்தும் இறைஞானத்தைப் பெற்று, பின்வரும் தலைமுறையினருக்கு அதைக் காப்பாற்றி, சேமித்துத் தரும் ஆச்சார்யர்கள்.

    கற்றுக் கறவைக் கணங்கள், கோவலர் - புராண, இதிகாச, உபநிடதங்களை கற்று, அதன் ஞானத்தை உள்ளடக்கி,அதனால் சீடர்கள் புடை சூழ இருக்கும் ஆச்சார்யத் தன்மையை உட்பொருளாகக் கொண்டுள்ளது.
    மறையும் அதன் வெவ்வேறு பகுதிகளும் நன்கு கற்ற ஆச்சார்யர்கள் 'கோ' என்கிற மறையின் காவலர்.

    குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே - வேதங்களில் பாண்டித்யம் பெற்றவரை ஆச்சார்யனாக அடையும் பேறு பெற்ற சீடனை குறிப்பில் உணர்த்துகிறது ( கோவலர் - கோ என்றால் வாக்கு அல்லது வேதம்) கோவலர் என்பது வேதத்தை பாதுகாக்கும் ஆச்சார்யர்கள். அத்தகைய ஆச்சார்யர்களாகிய கொழுகொம்பின் மேல் படர்ந்து ஞானம் பெறும் கொடியாக சீடன் விளங்குகிறான்.

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து- தம்முடைய கடமைகளை எவ்வித விருப்பும் வெறுப்புமின்றி செய்யக்கூடிய வைராக்கியம் பொருந்தியவர்கள் என்றும் ஓர் பொருளுண்டு.

    குற்றமொன்றில்லாத கோவலர்- பக்தி, ஞான யோகங்களை கடைபிடிக்காத போதும், கர்ம யோகத்தில் சிறந்து விளங்கினால், அதுவே பரமனுக்குப் போதுமானது. எனவே கர்ம யோகிகள் குற்றமற்றவர் என்று இங்கு கருத்து

    செற்றார் திறலழிய செறு செய்யும் - அரைகுறையாய் மறையோதி எதிர்ப்போர்களை வாதிட்டு வென்று கருணையுடன் மெய்யறிவு புகட்டுதல்.அதன் மூலம் பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, இறையன்பு ஒன்றையே முன்நிறுத்தும் வைணவ நெறியின் குறிப்பு . அப்படிச் செய்யும் போது, அகந்தை மமதையோடு செயல்படாமல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்ற உயர்நோக்கில், இறையனுபவத்தைப் பிறரும் பெற வேண்டுமெனச் செய்தலால், குற்றமொன்றில்லாத கோவலர் ஆகின்றனர் !


    புற்றரவு
    - ஆச்சார்ய பக்தியும், மிகுந்த அடக்கமும் உடைய சீடன் .புற்றில் இருக்கும் நாகம் தன்னைச் சுருட்டிக் கொண்டிருக்கும் அல்லவா? அது போன்றே ஆச்சார்யரிடத்தில், அடியார் பணிவோடு இருப்பார்கள்.

    புற்றரவு அல்குல் - சிறுத்த இடை- சிற்றின்பம் அறவே வெறுத்துக் கண்ணனை அடைய வேண்டும் என்ற வைராக்கியம்.நாகம் புற்றுக்கு வெளியே இருக்கையில் தற்காப்புக்கென்றே தன் முதுகுப் பகுதி எலும்புக்கூடுகளைத் தலைப்பாகத்தில் கொண்டு சென்று இரண்டு பக்கமும் விரித்து வைக்கும். அதையே பாம்புப் படம் விரித்தது என்பார்கள். அதுவே புற்றுக்குள் நுழையும் போது இருபுறமும் விரித்தப் படத்தைச் சுருக்கி வெறும் தலையுடனே பணிந்து நுழையும் இதுபோன்றே, இறைநெறியில் ஈடுபட்டவர்களுக்கு , பக்தி என்கிற தலையும், அதனை ஆதாரமாகக் கொண்டு இரண்டு புறம் விரிகின்ற படம் போல ஒருபுறம் ஞானமும்,மறுபுறம் விருப்பு வெறுப்பின்றிக் கடமைகளை செய்யும் வைராக்கியமும் (விரக்தி) அடையாளமாக இருக்கும்.ஆயினும் இம்மூன்றில் சிறந்தது பக்தியே.அது இருந்தால், நல்லாச்சார்யனிடம் பக்தியோடு பணிந்து அவர் மூலம் மற்றவிரண்டும் கைப்பெற்று, இறைவன் திருவடியைச் சேரலாம் என்பது கருத்து

    புனமயில் - கார்மேகத்தைக் கண்ட மயிலெப்படி மகிழ்வோடு தோகை முழுதும் விரிக்குமோ, அதுபோல தகுதியான மாணவரை, இறையடியவரைக் கண்டால், ஆசிரியர்களும் மகிழ்வோடு தம்மிடம் உள்ள அனைத்து ஞானத்தையும் காட்டித் தருவார்கள் என்பது ஓர் கருத்து.மயிலைக் கண்டு விஷமுள்ள ஜந்துக்கள் உயிர் அச்சப்படும்.அது போல, ஞானமுள்ள ஆசிரியரிடம், எந்தக் குற்றங்களும்,தீய எண்ணங்களும் அண்டாது என்பதும் கருத்து. பெருமாளின் ஆயிரம் நாமங்களை ஓதும் சீடன் என்பதும் ஓர் கருத்து.

    போதராய் - ஆனந்த அனுபவத்தில் திளைத்தல்.

    சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து- நல்ல ஆச்சார்யர் மூலம் அகந்தை மமதை அழிந்து ஞானம் அடைந்த பின்னே வைணவ அடியார்கள் எல்லோரும் ஒன்று கூடி. மஹான்களாக விளங்கும் ஆச்சார்யர்களைச் சுற்றி அன்பர்கள்/அடியவர்கள் பலர் இருப்பார்கள். காஞ்சிப் பரமாச்சார்யாரை நினைவு படுத்திக்கொள்ளலாம் !

    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட- இறை நாமங்களை சொல்லி பக்தி செய்து சரணாகதி அடைந்த பின்னே,இறைவன் அடியார்கள் ஒன்றுகூடும் இடத்தில் (கோவில்களில்) எல்லோருடனும் சேர்ந்து இறைநாமம் சொல்லுதல்.

    சிற்றாதே, பேசாதே செல்வப் பெண்டாட்டி
    - அறிந்தோ, அறியாமலோ செய்த வினைகள் குறித்த கவலையை உதறி அகங்காரத்தையும் மமகாரத்தையும் தொலைத்து, பகவானின் திருநாமங்கள் தவிர வேறெதையும் பேசாமல் இருப்பதால் ,அந்த அடியவர் இறைவனுக்கு மிகவும் உகந்தவர்,கிருஷ்ணானுபவம் என்ற செல்வம் மிக்க அடியவர். இகவுலகில் வாடும் சீவாத்மாக்கள் வீடுபேறடைவதற்கு மிகவும் எளிய வழி இறைவனைப் பற்றிக்கொள்வதே ! இது பற்றிப் பேசிக் கவலையுற்று அலட்டிக் கொள்ள வேறொன்றுமில்லை என்பதே உட்பொருள்.

    எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய் - அப்படிப்பட்டவர் மற்ற அடியார்களின் அஞ்ஞானத்தையும், குறைகளையும் விலக்கி, அவர்களது உய்வுக்கு உதவாமல் இருக்கக் கூடாது (மற்ற இறையடியார்களும் வீடுபேறு அடைவதற்கு இந்தச் சிறந்த அடியார் உதவ வேண்டும்- கோஷ்டி சேவித்தல் !

    பரமனுடைய அடியார், தமது புறவுடலை விடுத்துப், பரலோகம் புகும் சமயத்தில் , இறை தூதர்கள் வந்து அழைத்துச் செல்வர் என்பது இன்னுமொரு உட்பொருள்.

    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து - வைகுண்டத்திலிருந்து வந்திருக்கும் பெருமாளின் தூதர்கள் , வைணவ அடியார்கள் அனைவரும்
    நின் முற்றம் புகுந்து - சூட்சம சரீரத்தில் நிழைந்து (ஆன்மாவை அடைந்து)
    முகில்வண்ணன் பேர் பாட - பரமனது திருநாமங்களை ஓதியபடி பரமபதத்திற்கு கூட்டிச் செல்லக் காத்திருக்கின்றனர்.
    சிற்றாதே, பேசாதே,- மற்ற எந்த பாவங்களும் நம்மை வந்து சேராது, கவலையுற வேண்டாம்.
    உறக்கம் - அகந்தை மமதை நீங்கியதால், இறைஞானம் வாய்த்துப் பேரமைதி ஏற்படுதல்
     
    periamma likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    படித்தேன் உணர்ந்தேன்
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அறிந்தேன்,மகிழ்ந்தேன் ! மிக்க நன்றி , பெரியம்மா !
     

Share This Page