1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை(10) நோற்றுச் சுவர்க்கம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 19, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    10) ஆண்டாள் பாடல்

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
    நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
    போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
    தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
    ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
    தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை

    " எங்களோடு சேர்ந்து இந்தப் பாவை நோன்பிருந்து அதன் பலனாய் சொர்க்கம் அடைந்து சுகம் பெறப்போகும் பெண்ணே! நீ உன் வீட்டுக் கதவைத் திறக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் எங்களோடு ஒரு வார்த்தை கூடப் பேசக்கூடாதோ ? நல்ல மணத்தையுடைய துளசி மாலையை தனது தலையில் சூடிக்கொண்டிருக்கும் நாராயணன், நம்மால் போற்றி வணங்கப்படத் தக்கவனும், நமக்கு வேண்டிய பலன்களைத் தருகின்றவனும் ஆவான். த்ரேதா யுகத்தில் ராமனாக அவதரித்த நாராயணனால் போரில் சாய்க்கப்பட்டு மரணத்தின் வாயிலில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை (உறக்கத்தில் உன்னை மிஞ்ச முடியாமல் தோற்றுப் போய்!) உன்னிடம் தந்து விட்டுச் சென்றுவிட்டானோ? எல்லையற்ற சோம்பல் கொண்டவளே, ஆயினும் எங்களுக்குக் கிடைத்தற்கரிய மேலான அணிகலன் போன்றவளே! தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!"

    பாசுரக் குறிப்பு

    சரணாகதம் என்கிற நோன்பினை ஏற்று வீடுபேறு அடைவதில் விருப்பம் கொண்ட அடியவரையே மற்றவர்க்கும் சரணாகத வாசல் திறந்துவிடச் சொல்லி வேண்டி எழுப்புதல் .5 x 5 +5 இல் இரண்டாவது ஐந்தின் முடிவு. திருப்பாவை 30 பாசுரங்கள் பெரும்பாலும் பரமனின் கிருஷ்ணாவதாரத்தின் பெருமை சொன்னாலும், 4 பாசுரங்கள் இராமாவதாரப் பெருமையைப் பாடுகின்றன.அவற்றில் இது முதலாவது.(மற்றவை,12ஆவது,13ஆவது,24 ஆவது பாசுரங்கள் ஆகும்.) பரமனை அடைவது வீடுபேறு , அதுவும் பரமானாலேயே வாய்க்கப்பெறும் என்பது தான் இப்பாசுரத்தின் முக்கிய கருத்து. அவனருளாலே அவன் தாள் வணங்கி !

    இதில் எழுப்பப்படும் ஆழ்வார் முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வார் . திருக்கோவலூர் கோயிலை அடைந்த முதல் மூன்றாழ்வார்களில், பொய்கையாரும், பூதத்தாரும் பெருமாளுக்கு இரு விளக்குகளை ஏற்றினர்.

    முதலில், பொய்கையாழ்வார் பாடியது:

    வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,
    வெய்ய கதிரோன் விளக்காக, செய்ய
    சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன்
    சொல் மாலை
    இடர் ஆழி நீங்குகவே

    பூதத்தாழ்வார் ஏற்றிவைத்தது:

    அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா
    இன்பு உருகு சிந்தை இடுதிரியா, என்பு உருகி
    ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான்.

    இதை நோன்பு நோற்பதாகக் (நோற்று!) கொண்டால், உபய அனுஷ்டானம் செய்யப்பட்டு விட்டதல்லவா? அவ்விளக்குகளின் துணையாலே, பேயாழ்வார் தனது திருவந்தாதியை பாடுவதற்கு முன்பாகவே, பெருமாளின் திவ்ய தரிசனத்தை காணும் பெரும்பேறு பெற்றவர். அவ்வாழ்வாரின் முதல் பாசுரத் தொடக்கமே, "திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று தொடங்குவதாம். ஆகவே தான் முதலடியிலேயே ஆண்டாள் "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்" என்று விளிக்கிறாள்!
     
    rai, umasivasankar and periamma like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    விரதம் இருப்பதினால் நல்லாருலகம் புகும்
    அருந்திறன் வாய்த்த எங்களது தோழியே !
    பெரிய செயலதனைத் தனியே செய்வதென
    விரும்பியே கதவைத் திறக்க வில்லையோ ?
    இருந்த போதிலென்ன வாயைத் திறந்துவொரு
    வார்த்தை பேசிடவும் விருப்பம் இல்லையோ ?
    அருந்துழாய் மாலை அணிந்த இறைவனாம்
    நாராயணன் எனும் பெயரைக் கொண்டவன்,
    பெருமை பாடியடி பணியும் நமக்கெல்லாம்,
    விரும்பும் யாவையும் கொடுத்து அருள்பவன் !
    பரமனவனுமே முன்னம் திரேதா யுகத்தினில்,
    இராமச் சந்திரனாய் அந்த சூரியவம்சத்தில்,
    தர்மம் காக்கவே வந்துதித்தத் தருணத்தில்,
    பெரிதும் உறங்கியே பொழுதைப் போக்கிய,
    அரக்கன் தயமுகன் இளவல் கும்பகருணனை,
    இரக்க மனத்துடன் எமனுலகம் அனுப்பினான் !
    பெருத்த மலையென்றுத் தோன்றும் அரக்கனும்,
    பெருமுறக்கப் போட்டியில் தோற்றே உன்னிடம்
    பெரிய உறக்கமிதைக் கொடுத்துப் போனானோ ?
    பெரிதாய்ச் சோம்பலுற்று உறங்கும் தோழியே!
    வருந்த வேண்டாம் -என்னவிருந்தப் போதிலும்,
    அருமை மிகக்கொண்ட அணிகலன் போன்றே
    பெருந்தலைவிப் பொறுப்பிலே நீ இருப்பதால்,
    வருந்தி அழைக்கிறோம்,தெளிவைப் பெற்றிடு !
    விரதம் தொடர்வதற்குன் கதவைத் திறந்திடு !

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - மார்கழி நோன்பிருந்து சுவர்க்கத்தை அடையும் தகுதியுடையவளே (நல்லாருலகம்- ஸ்வர்கம்),

    அம்மனாய் (அம்மனை என்பதன் ஈறு திரிந்த விளி) - கண்ணன் அனுபவத்தைத் தனியே செய்வது உன் பக்தியின் பெருமைக்குப் பொருந்தலாம் . ஆனால் எங்களுடனான உன் தோழமைக்குத் தகாது தாயே! எனவே கதவைத் திறந்து வந்து எங்களுடன் சேர்ந்து நோன்பிருக்க வா ! தோழியர் அவளுக்குக் கண்ணன் மீதுள்ள அன்பினைப் பற்றிச் சொல்லுவதைக் கேட்டு, அசோகவனத்தில் ஸிம்ஷுபா மரத்தின் மேனின்று அனுமன் சுந்தர காண்டம் சொல்லக் கேட்டிருந்த சீதையெப்படி ஆனந்தத்தில் வாய்பேசாதிருந்தாளோ, அப்படிக் கிடக்கிறாளாம் இந்தக் கோபிகை ! அதனாலே இந்த விளி !

    முதலடிக்கு மூன்றுவகையாகக் கருத்துரைக்கலாம் : முன்பிறவியில் நோற்ற நோன்பின் பயனாக இப்போது கண்ணனை அனுபவிக்கும் சுகமுற்றாள் என்பது முதற் கருத்து.
    பொழுது விடிந்தபின்னரும் எழாமையால், "இப்படி உறங்கிக் கொண்டிருக்கும் நீயோ நோன்பு நோற்றுச் சுவர்கம் செல்லப்போகிறாய் " எனத் திட்டுவதாகக் கொள்ளுதல், இரண்டாங்கருத்து.
    "'எல்லோரும் ஒன்றாய்க் கூடி நோன்பு நோற்றுக் கண்ணனை அனுபவிக்கும் சுகம் பெறுவோம்’ என்று சொல்லிவிட்டு , நீ தனியே நோன்பு நோற்றுச் சுகமடைவது என்ன தருமம் ?" என ஆற்றாமையோடு கேட்பதாகக் கொள்ளுதல், மூன்றாங் கருத்து.

    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் - கதவு தான் திறக்கவில்லை, எங்களுடன் ஒரு வார்த்தையேனும் பேசக்கூடாதோ ? "இப்போது கதவைத் திறக்க முடியாது "என்றாவது சொல்லக்கூடாதா ?(கதவு திறவாதா ,எழுந்து வாரீரோ ? என்பதே பொருள்)

    "ஒருவர் படுக்கலாம்,இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்" என்றளவில் இருந்த அறையில், நான்காவதாகப் பெருமாள் நெருக்கி நின்று, மூன்று முதலாழ்வார்களுக்கும் அருள் செய்ததை இங்கு குறித்தாள் ஆண்டாள். திருக்கோவலூர் கோயிலில் முதலில் நுழைந்த பொய்கையார் கதவை மூடி விட்டார். பின் வந்த பூதத்தாருக்கு அவர் கதவைத் திறந்தார். கடைசியாக வந்த பேயாழ்வாருக்கு பூதத்தார் கதவைத் திறந்து விட்டார். ஆனால், பேயாழ்வாருக்கு அடியவர் வேறொருவருக்கு கதவைத் திறக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனாலேயே, "வாசல் திறவாதார்" என்ற சொற்பதம் பேயாழ்வாருக்கு மிக மிகப் பொருத்தமான ஒன்றே !

    நாற்றத் துழாய்முடி நாராயணன்- நற்றுழாய்- துளசி, நாராயணனுக்கு உகந்த மலர் இதுவே. துழாயெனப்படும் துளஸி மிகவும் பெருமை வாய்ந்தது. பாற்கடலைக் கடையும் பொது திருமகள் வந்தாற்போல்ன்றே, துளஸியும் வெளிப்பட்டது. அனைத்திலும், அனைவரிலும் உயர்வான நாராயணனையே திருமகள் நாடினாற்போல், துளஸியும் பரந்தாமனையே அடைந்தது. எனவே தான் நாராயணனைத் துளசியினால் பூசிப்பது மிகவும் உகந்த செயல். நறுமணமுள்ள துளசியினைத் தனது திருமுடியில் மாலையாக அணிந்துள்ளான் நாராயணன்.துளசியின் மணங் கமழ்ந்தால் அங்கே நாராயணனாகிய கண்ணன் இருக்கிறான் என்பது பொருள். உள்ளே இருக்கும் கோபிகை கண்ணனுடன் இருப்பதனாலேயே தங்களுக்குக் கதவு திறக்கவில்லையென்று ஆண்டாள் உணர்த்துகிறாள். இந்தப் பாசுரத்துக்குரிய கோபிகையின் வீட்டிலிருந்து கண்ணனுடன் இருக்கக் கூடிய துளசி வாசமெழுவது, ஒரு வேளை உள்ளே இன்னும் கண்ணனோடே இருப்பதனால், இவள் அசையாமல் இருக்கிறாளோ என்று,ஆண்டாளுக்கு, மற்ற தோழியருக்கும் துணுக்கத்தை ஏற்படுத்துகிறது ! பேயாழ்வாருக்குத் துளஸியிடத்தில் மிகவும் அன்பு. அவரது பாசுரங்கள் பலவற்றில் திருத்துழாயைக் குறிக்கிறார்.

    புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்
    -புண்ணியன்- “ராமோ விக்ரஹவாத் தர்ம:” என்ற கூற்றின் படி ,தர்மகுண சீலன் இராமன், கூற்றம்- உயிர் வேறு உடல் வேறாகக் கூறுபோடும் எமன்.
    இராமாவதாரத்தில் கும்பகர்ணனை வதைத்த செய்தி.

    தோற்றம் உனக்கே பெருந்துயில்- கும்பகர்ணன் உன்னுடனான உறக்கப் போட்டியில் தோல்வியடைந்து, அவனுறக்கம் உனக்கு வாய்த்ததோ? “காண் காணென விரும்பும் கண்கள்” என்று ஒரு நொடிப் பொழுதும் கண்மூடாமல் இறைவனைக் காண ஆசைப்படும் நீங்கள் கும்பகர்ணனுக்கும் மேலாக உறங்குதல் நியாயமா என்கிறாள். பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்ட நடுவில்; “அவனே - இலங்காபுரமெரித்தானெய்து” என்றும் “எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழ” என்றும் குறிப்பிட்டதையொட்டித்தான் இப்பாசுரத்தில் நடுவில் இராமபிரானுடைய செய்தியை ஆண்டாள் அமைத்தது.

    ஆற்ற அனந்தல் உடையாய் -மிகவும் உறக்கமுடைய அடியார் , திருமழிசை பிரானை துயிலெழுப்பும் முந்தைய (9வது) பாசுரத்தில், ஆண்டாள் அவர் "அனந்தலோ?" என்று ஐயம் கொள்கிறாள். இதில் "ஆற்ற அனந்தலுடையாய்" என்று சொல்வதை வைத்து, திருமழிசையாரின் ஆச்சார்யனான பேயாழ்வாரையே இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார் என்பதும் ஏற்புடையதே. சைவராயிருந்தத் திருமழிசையார் மயிலையிலிருந்த போது பேயாழ்வாரின் தொடர்பினாலேயே வைணவத்திற்கு மாறினார்.

    அருங்கலமே - முன்னமே கண்ணனைக் கண்டு அனுபவிக்கும் பேறு பெற்ற அருமையான அணியினைப் போன்ற அடியாரே ; பேயாழ்வார் தமது பாசுரம் தொடங்கும் போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று அறிவித்தபடியேத் தொடங்கினாரல்லவா ? அதுதான் இச்சொல்லாடல்!

    தேற்றமாய் வந்து திற - தெளிந்து வந்து, (கதவைத்) திறந்திடு. சீதையைத் தேடுதற்கு உதவுவதாகச் சொன்ன சுக்ரீவன் மழைக்காலம் முடிந்தும் இன்னும் வராத காரணத்தைக் கேட்டு வரச்சொல்லி இராமன் இலக்குவனை அனுப்ப, அவனது கோபத்தைத் தணிக்கவெண்ணிய மகாராணி தாரை (முன்னம் வாலியின் பட்டத்தரசி) , அந்தப்புரத்திலிருந்து தலைவிரி கோலமாக, அப்படியே வெளிவந்தாளாம். ஆடை நெகிழ்ந்த பெண்ணைக் கண்டு இலக்குவன் விழி தாழ்த்திச் சற்றே வேகம் குறைப்பானென்று ! அது போலே வராதே,இங்கே ஊராரெல்லாம் நிறைந்து கிடக்கிறார்கள். ஆகையால் சற்றே உன் நிலையைத் திருத்திக் கொண்டு வந்து கதவைத் திறவென்று ஆண்டாள் குறிக்கிறாள் ! உம்முடைய திருநாமமோ பேயார்; பேய்த்தனமாக வாராமல் தேறி வந்து திறவும் என்கிறாள்.
     
    rai and periamma like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள்

    கற்றறியும் ஞானத்தால் அகங்காரம் எழக்கூடும்,
    முற்றுமவன் அடியினிலே சரணம் செய்திட்டால்,
    பெற்றிடலாம் இறைத்தொண்டாம் வீடு பேறென்று,
    கற்றறிந்தோர் செல்லும் கர்மாதி யோகமென்ற
    மாற்று வழியில்லாது பரமனின் தாளினையேப்
    பற்றியிவ் வுலகினில் தம்மைப் பிணைக்கின்றச்
    சிற்றின்பப் புலன்களிலும் அறியாமை அளிக்கும்
    மற்றெதிலும் கவனம் செல்லாது இறையாழ்ந்து ,
    முற்றும் முடிவாக இறைவனடியியைப் பணிந்தபடி
    நற்றவ அடியார்கள் பிறரோடே சேர்ந்தின்பம்
    உற்றிருக்க எண்ணுகின்ற சிறப்புடைய அடியாரே,
    ஏற்றமிகக் கொண்ட இலைவடிவில் இருக்கின்ற
    நாற்றங் கமழ்கின்ற அருந்துழாய் மாலையினை
    ஏற்றுக் கொள்கின்ற இறைவனைச் சரணடைந்து
    உற்றப் பேரின்பம் அடைவதற்குத் தகுந்தவராம் !
    இற்றைச் சிறப்புடையோர் வீடளிக்கும் பரமனைப்
    போற்றவும் துணியாது தமக்கிரங்கித் தன்னாலே
    ஏற்றுக் கொள்வானென்று மௌனம் காப்பதுவோ ?
    மற்றுமுள்ள அடியார்க்கு வருத்தம் விளைவிக்கும்
    பற்றாம் மமதையுடன் அகந்தையைக் களைகின்ற
    ஆற்றலுடையவராம் ஆத்ம குணம் அணிகலனாய்ச்
    சாற்றிக் கொள்கின்ற அடியார்கள் பிறிதுளோரால்
    போற்றிப் பணிவதற்குத் தகுதியும் கொண்டவரே !
    நற்றவமிகு ஆசானருளாலே எளிமை, நேர்மையுடன்,
    வற்றா மனத்தூய்மை, நம்பிக்கையும் பெற்றதினால்,
    மற்றுமவர் தாமே இறைவனவன் கருணையினைப்
    பெற்றிடும் தகுதியுடைய பாத்திரம் போன்றவரே!
    தோற்றமும் மறைவுமற்ற இறைவனவன் திருவடிப்
    பேற்றினைப் பிறருக்கும் காட்டும் திறமுள்ளவரே!
    நற்குணங்கள் வாய்த்த இப்படியோர் அடியாரைச்
    சுற்றமெனக் கொண்டால் பேற்றை அடைந்திடலாம் !

    நோற்று- இறைவன் திருவடிகளையேப் பற்றிக் கொள்கிற சரணாகதம் செய்து சுவர்க்கம்- இங்கே இந்திர உலகமன்று. பரமனையடையும் வீடுபேறு .(சுவர்க்கம்- சு= நல்ல , வர்கம்= இறைநெறியில் ஆழ்ந்த அடியவரின் குழாம்.) ஸம்ஸாரமென்னும் லௌகீகத்தில் ஈடுபடாமல், இறைத்தொண்டெனும் கைங்கர்யத்திலேயே ஈடுபடும் அடியார் குழுவினரையே 'சு வர்கம் எனக் குறித்தாள்.

    வாசல் திறவாதார் - சரணாகத வழியில் செல்வதினால்,கர்ம,ஞான,பக்தி யோகங்களைக் கடைபிடிக்காமல் இருப்பவர்கள் .

    மாற்றம் தாரார் - அவர்கள் (சரணாகதி செய்தவர்கள்) எவ்விதத் தடையுமின்றி நிச்சயமாக வீடுபேற்றை அடைவர்,அதிலே எவ்வித மாற்றமுமில்லை.
    புத்தி கூர்மையும் ஞானமும், சில சமயம் கர்வத்தைத் தந்து இறைநெறியில் ஈடுபடுவதிலிருந்து ஒருவரை திசை திருப்பி விடும். எனவே இறைவனைச் சரணாகதம் செய்வதே வீடுபேற்றை உறுதியாக அளிக்க வல்லது.

    பெருந்துயில் - அறியாமை கூற்றம்- புலன்சார் இன்பங்கள்

    கும்பகர்ணனும் பெருந்துயில் தந்தானோ - இறைவனை யாரென்று உணராமல், மறுத்ததோடு அல்லாமல், அதர்மத்தின் வடிவாய் நின்று ஆணவத்தோடு எதிர்த்த இராவணன் ரஜோ குணக் குறியீடு. இறைவன் யாரென்று உணர்ந்த பின்னே, தான் சார்ந்த அத்தனையையும் விட்டுவிட்டு அவன் திருவடிகளிலேயே சரணம் புகுந்த விபீடணன், ஸத்வ குணக் குறியீடு. இறைவன் யாரென்று தெரிந்தும், அவனைத் தான் சென்று பணியாது ,பந்த பாசங்களில் கட்டுற்றுக் குழம்பி, அருள் வழியில்லாமல், வதம் செய்யும் வகையில், இறைவனே வந்து தன்னை ஏற்கட்டும் என்று அதர்மத்தின் பக்கம் நின்ற கும்பகர்ணன், தமோ குணக்குறியீடு. 8 ஆம் பாசுரத்தில் எருமைச் சிறுவீடு என்றாளல்லவா ? எனவே கைவல்ய நிலையிலேயே இருக்கலாம் எனக் கருதும் அடியவர்கள், மனந்தெரி, கைங்கர்ய நிலைக்குச் செல்லவேண்டியதைக் குறிப்பில் உணர்த்துகிறாள், ஆண்டாள் !

    ஆற்ற அனந்தல் - இறையனுபவத்தில் மிகவும் மூழ்கிய அடியவர்கள் ஒன்றும் செய்யத் தோன்றாது செயலற்று இருந்து விடுவது இயல்பு . இதுவும் ஒரு வகையில் இறுமாப்பே.
    அதாவது இறைவனை நன்கு உணர்ந்திருந்தாலும், நம்மால் இறைவனை அடைய முடியாது என்றும், அவனே தம்மை நோக்கி வந்து ஆட்கொள்ள வேண்டும் என்றும் எண்ணுவது. இதுவே கும்பகர்ணக் குறியீட்டால் விளக்குவது.

    அருங்கலம்= அருமை+கலம், நல்லாசிரியரை அணுகி, மனத் தூய்மை, நேர்மை, பணிவு, விசுவாசம் போன்ற இயல்புகளைக் கொண்டு அவருக்கு அடி பணிந்து, அவர் மூலம் அருளப்பெற்று இறைநெறியில் ஆழ்பவர்களே,இறைவன் கருணைக்குப் பாத்திரமாகக்கூடிய (கலம்) பேறுடையவர்கள். அவர்களே உண்மையான வைணவர்கள் என்பது கருத்து.
     
    rai and periamma like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தேற்றமாய் வந்து திற-பெண்கள் கடை பிடிக்க வேண்டிய நற்குணங்களில் இதுவும் ஒன்று
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சரியாகச் சொன்னீர்கள் !
     
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Pavithra,
    You have nicely explained about 'arunkalam'.She talks about'Etra kalangal ' in 21st paasuram.
    I am reminded of Avvai'Paaththiram arinthu pichai idu'.
    ..எனக்கும் கொஞ்சம் ஆண்டாள் மோகம் தான்.எல்லோரும் மார்கழி திங்களில் ஆரம்பிப்பார்கள்.நாம் கடைசி பாசுரம் கடைசி வரியிலிருந்து படிக்கலாமே என்று தோன்றியது.
    திருப்பாவையின் கடைசி பாசுரம் " எங்கும் திருவருள் பெற்று இன்புறுருவர் எம்பாவாய்
    மனது நிறைந்து விட்டது.எத்தகைய ஆசி!
    இந்த வரிக்கு பராசர பட்டர் எழுதிய வ்யாக்யானம் மிக அருமை.
    ' எங்கும்'என்ற வரி எல்லா மானிடரையும் குறிக்கும்.விரதம் அனுஷ்டிப்பவர்கள், அனுஷ்டிக்காதவர்கள், நினைப்பவர்கள் நினைக்காதவர்கள் எல்லோரையும் உள்ளடக்கும்.
    'கன்றிழந்த தலைநாகு தோற்கன்றுக்கும் இறங்குமா போலே ' என்கிறார் பராசர பட்டர்.

    கன்றுக்குட்டி பசுவின் மடியிலிருந்து பால்
    அருந்துகிறது.கன்று இல்லாவிட்டால கன்றுக்குட்டியின் தோல் வைத்துத் தைத்து உள்ளே வைக்கோல் அடைத்து கன்றுக்குட்டி மாதிரி உள்ள பதுமைக்கும் பால் சு ரக்கும் .
    ஆண்டாள் நிஜக் கன்று.அவள் உண்மையான விரதம் அனுஷ்டித்தவள். நாம் அனைவரும் தோல் கன்றுகள்.சும்மா பாசுரங்களை சொன்னாலும் நினைத்தாலும் பரமாத்மாவின் அருள் கிடைக்கும்.
    ஆண்டாள் கூட இது மாதிரி ஒரு வ்யாக்யானம் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாள் .
    While Andal heightens the glory of margazhi vratham, she also thinks about people who do not have any mind to do anything and fall asleep like Kumbakarnan.
    Even those kumbakarnas are blessed by sriman Narayanan. and that is the palasruthi Andal sings in the last line of 30th Thiruppaavai.
    Sorry for taking you to the end of Thiruppavai.I wrote what I felt while appreciating Pavitra for her wonderful efforts.Just like reading the conclusion of a novel in the last page I thought of the last line.
    I really enjoy your writings and explanations.I am in trance .Your writings bring to my mind so many anecdotes.This tenth paasuram is the one for which Shri Paramacharya blessed me with a small gold coin in 1951.I was nine just then.I was asked by Paramacharya to recite this particular verse and explain the meaning in a sabha consisting of around 300 educated audience, mostly consisting of well versed vaishnavites in Srirangam.He specifically asked about the word'naatram' and the meaning, as the word more often denoted 'bad smell' in daily usage.

    Pavitra, you are taking us to corners hitherto unheard or unknown to many.
    Wish you all the best in your pavithra yatra,
    To the best possible might, I am trying to follow you closely, though not to the high intellectual level.

    Sorry for combining with English.It is just natural flow.Kindly excuse me.
    Jayasala 42
     
    periamma likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் வாக்குவன்மையின் இரகசியம் இப்போது உணர்ந்தேன். சிறுவயதிலேயே, ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் கையால் பரிசும்,பாராட்டும் கிடைக்கப் பெறுவது எவ்வளவு பெரிய பாக்கியம் ! பரமாச்சார்யாரைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் எனக்கு மெய் சிலிர்க்கும். காஞ்சி மஹானை எனது தந்தையார் காட்டித் தந்தார் ஓரிக்கையிலே, ஓரிரவு இருக்கையிலே ! ஆறு வயது சிறுமியாக அவரது பாதம் பணியும் பேறு பெற்றேன்.அது எனக்குக் கிடைத்த பாக்கியமென எண்ணுகிறேன்.

    ஆம், முற்றிலும் உண்மை ! ஆண்டாள் சொன்ன பலஸ்ருதி, கடைநிலை சீவர்களுக்கும் பெருவழித்துணைக்கு வேண்டிய மனோபலத்தைக் கொடுக்கக் கூடியது.

    Please do not say so, Madam ! I am indeed very happy to get your continuous feedbacks and support. I am grateful for the knowledge that you impart in each of them. Language does not matter, only the content.

    I do not know how to react. Please accept my Namaskarams.
     
    periamma likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இரண்டு அறிவுஜீவிகளுக்கு இடையே நான் வருவது சரி அல்ல .
    ஒருவர் கற்று தேர்ந்தவர் .இன்னொருவர் கற்று தருகிறவர்
    இருவரும் நீடுழி வாழ்க
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா இதுவரை திருப்பாவையில் நுனிப்புல் மேய்ந்தவள் நான் .இப்போது தான் அதன் ருசியை உணர்ந்து மீண்டும் படிக்க ஆரம்பித்துள்ளேன் .
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இரண்டு பேரல்ல பெரியம்மா,அம்மையார் வத்ஸலா ஜெயராமன் (ஜெயசாலா) ஒருவரே உங்கள் வார்த்தைகளுக்குத் தக்கவர் ! நான் உங்கள் அன்புக்குரியவள் மட்டுமே ! நீங்கள் இடையில் வரவில்லை, என்னோடு இணைந்து பயணிக்கிறீர்கள், நானும் பிறரைப் போலவே பெரியோரிடமிருந்து கற்றுக்கொள்ளும் மாணவியாக உள்ளேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !
    இந்த எண்ணம் வெகு சிலருக்குத் தோன்றினாலே, எனது சிறுமுயற்சிக்குக் கிட்டிய பரிசாக எடுத்துக்கொள்வேன் ! மிகவும் நல்லது பெரியம்மா ! பக்தி இலக்கியங்கள் மட்டுமல்ல, தமிழின் பண்டைய இலக்கியங்கள் அனைத்துமே மிகவும் ஆழமான சொற்சுவையும் பொருட்சுவையும் நிரம்பியவை. கல்வி கரையில, கற்பவர் நாள் சில. என் வாழ்நாளில் சிறிதளவேனும் நமது இலக்கியங்களை அனுபவிக்க வேண்டுமென விரும்புகிறேன், இறைவன் திருவுளம் வேண்டுகிறேன் ! :)
     
    periamma likes this.

Share This Page