1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கர்ணன் என் காதலன் : 40 (இறுதிப் பகுதி)

Discussion in 'Stories in Regional Languages' started by veni_mohan75, Mar 17, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கர்ணன் என் காதலன் : 40

    பகுதி நாற்பது : இறுதிப் பகுதி


    யுத்த பூமி


    கர்ணன், மற்றும் அர்ஜுனன், இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் துவங்கியது. இரு வீரர்களுமே தங்கள் மனதில் வெற்றி அல்லது வீரமரணம் எனும் எண்ணத்தை விதைத்திருந்தனர்.

    துவக்கம் அர்ஜுனனிடம் இருந்து. ஆக்னேய அஸ்திரத்தை கொண்டு கர்ணனுக்கு துணை இருந்த அனைத்து வீரர்களையும் அக்னி கொண்டு துரத்தினான்.

    அதற்கு பதிலாய் கர்ணன், வாருனாஸ்திரம் எய்தான். அது கரிய மேகங்களுடன் கூடிய மழையை வருவித்து அந்த இடத்தையே வெள்ளக்காடாக ஆக்கியது.

    அர்ஜுனன் வாயுவாஸ்திரம் கொண்டு அந்த மழை மேகங்கள் அனைத்தும் தூர துரத்தினான். பின்னர், இந்திரனால் தனக்கு தரப்பட்ட சக்தி அஸ்திரத்தை கர்ணன் மேல் பிரயோகித்தான். அஸ்திரத்தின் வலிமையால் ஆயிரக்கணக்கான அம்புகள் காண்டீபத்திலிருந்து பாய்ந்து கர்ணனின் உடலை பதம் பார்த்தன.

    அதற்கு பதிலாய் பார்கவா அஸ்திரத்தை கர்ணன் பிரயோகிக்க, அது பாண்டவ சேனையின் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றது.

    அதில் கோபம் கொண்ட அர்ஜுனன், கண்ணாலும், பீமனாலும் ஊக்கம் பெற்று, பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான்.

    அது கர்ணனின் தரப்பின் ஆயிரம் வீரர்களைக் கொன்றது

    கர்ணன் அதற்கு பதிலாக, ஐந்து சர்ப்ப அம்புகளை எடுத்து அதை கண்ணனின் மீது ஏவினான். அது கண்ணனின் உடலில் ஊடுருவி, பூமிக்குள் பாய்ந்து மீண்டும் கர்ணனிடமே செல்லத்துவங்க, அர்ஜுனன் அவற்றை தன் அம்புகளின் மூலம் துண்டு துண்டாக்கினான். அந்த அம்பினால் கண்ணனுக்கு பாதிப்பு எதுவுமே இல்லாமல், எப்போதும் போல சிரித்துக் கொண்டே இருந்தார்.

    ஆனாலும், கண்ணனை, கர்ணன் தாக்கியதில் கோபம் கொண்ட அர்ஜுனன், கர்ணன் சேனையில் கர்ணனுக்கு துணை இருந்த ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தான்.

    அர்ஜுனனின் தாக்குதலில் அஞ்சிய கர்ணனின் சேனை வீரர்கள் அனைவரும் அவனை விட்டு விலகிச் சென்றனர்.

    தனி ஒருவனாய், அர்ஜுனனையும், அவனைக் காக்க நின்ற வீரர்களையும் தாக்கினான் கர்ணன்.

    அர்ஜுனனிடம் அம்புகள் தீராத அம்புறாத் துணிகள் இரண்டு உண்டு. கர்ணனிடம் அது இல்லை.

    அர்ஜுனனிடம் உடைக்க இயலாத காண்டீபம் உண்டு, கர்ணனிடமும் உடைக்க இயலாத விஜயம் உண்டு. ஆனால், காண்டீபத்தில் நாணை அறுக்க இயலாது. விஜயத்தில் அப்படி இல்லை.

    காண்டீபத்தின் நானை அவிழ்க்க வேண்டுமானால் முடியும். ஆனால் அர்ஜுனன் கண் இமைக்கும் நேரத்தில் அதை மீண்டும் கட்டும் வலிமை உடையவன்

    காண்டீபத்தில் நூற்றி ஒரு நாணும் உண்டு. செயற்கரிய வீரன் ஒருவன் காண்டீபத்தின் நாணை அறுத்தாலும் அந்த நூற்று ஒரு நாண் வரை அது மீண்டும் மீண்டும் வரும். ஆனால், காண்டீபத்தின் நாணை அறுப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

    இது அத்தனை இருந்தும் கர்ணன் அர்ஜுனனை எதிர்த்தான்.

    தனி ஒருவனாய், களத்தில் நின்று அர்ஜுனனை சார்ந்த வீரர்கள் அனைவரையும் களைத்துப் போகச் செய்தான்.

    களத்தில் அர்ஜுனனும் கர்ணனும் மட்டுமே.

    காணுதற்கு அறிய ஒரு காட்சி கண் முன்னே அரங்கேற, கண் இமைக்கக் கூட இல்லாமல் மக்கள் வெள்ளம் அதைக் கண்ணுற, நாடி, நரம்பு, ரத்தம், மனம் என அனைத்திலும் போர்த்திறம் ஊறிய இரண்டு வீரர்கள் அங்கே போரிட, காற்றும் அங்கே நின்று போனதாம் போரினைக் காண.

    மேகமும், மேகமும் மோதினால் மின்னல் வரும். இது இயற்கை. மின்னலும், மின்னலும் மோதினால் வருவது என்னவோ??? அதுதான் அன்றைய குருச்சேத்திரம்.

    யார் சிறந்தவர் :


    போரில் அர்ஜுனனின் தாக்குதலில் கர்ணனின் ரதம், சில மீட்டர்கள் வரை பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதே அர்ஜுனனின் ரதம், கர்ணனின் தாக்குதலில் சில அங்குலங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளப்பட்டது.

    இதற்காய் கண்ணன், கர்ணனைப் பாராட்ட, அர்ஜுனன் கோபம் கொண்டு, கண்ணனைக் கேட்டான்.

    “என் தாக்குதலில் கர்ணனின் ரதம் மீட்டர் கணக்கில் நகர்ந்ததே அதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. நமது ரதம் நகர்ந்தற்க்கு அவனைப் பாராட்டுகிறீர்களே???”

    “ஆம் அர்ஜுனா, அவன் ரதத்தில் மனிதர்களான சல்லியனும், கர்ணனும் மட்டும்தான் இருக்கிறார்கள். உன் ரதத்தில், நீயும், மூவுலகையும் தன்னுள்ளே அடக்கிய பகவான், நானும் இருக்கிறேன், மூவுலகங்களும் என்னுள் அடக்கம். கூடவே உன் தேரின் கொடியில் மகா பலசாலியாய் அனைவராலும் அறியப்பட்ட அனுமன் இருக்கிறார். நாங்கள் இருவரும் இருக்கும் ரதத்தை எந்த மனிதனாலும் அசைக்கக் கூட முடியாது. ஆனால், கர்ணனின் தாக்குதலில் ரதம், சில அங்குலங்களே நகர்கிறதே”

    “வலிமை மிக்கவன், தனித்திருந்தாலும் தீரம் மிக்கவன் கர்ணன்”

    இந்த விவாதம் அர்ஜுனன் தரப்பில் நடந்து கொண்டு இருக்க, அங்கே கர்ணனின் தரப்பில் என்ன நடக்கிரதெனக் காண்போம்.

    கர்ணன் : எத்தனை முறை அவிழ்தாலும் அர்ஜுனன், காண்டீபத்தில் நாணை கண் இமைக்கும் நேரத்தில் கட்டிக் கொள்கிறானே. பலே... இப்போது தெரிகிறது அவனை ஏன் வில்வித்தையில் சிறந்தவன் என்று அனைவரும் சொல்கிறார்கள் என”

    சல்லியன் : கர்ணா, உண்மைதான். அவன் குரு வில்வித்தையில் மிகச் சிறந்தவர். அவரது பரிபூரண ஆசியையும், அருளையும், வழிகாட்டுதலையும் பெற்றவன் அர்ஜுனன்.

    அர்ஜுனனின் வலிமையைக் காணக் காண, கர்ணனிடம் உற்சாகம் ஊற்றுப் போலப் பொங்குகிறது.

    கர்ணன் : இப்படி ஒரு போரைத்தான் நான் எதிர்நோக்கினேன். சளைக்காமல் போரிடும் வீரன் ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டு இருந்தேன். நிமிடம் கூட என்னை ஓய்வெடுக்க விடாது, நான் கற்று வைத்த அத்தனை திறமையும் என்னிலிருந்து வெளிக்கொணர வைக்கும் இந்த அர்ஜுனன் மீதும் என் ப்ரீத்தி பெருகுகிறது. இந்த நிமிடத்தில் நான் தான் உலகிலேயே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பவன்.

    சல்லியன் : கர்ணா, எதிராளி வலிமை மிக்கவன் என்கையில் நமக்கு அவன் மீது வன்மம் வருவதுதானே இயல்பு. நீ சொல்வது இயல்புக்கு மீறியதாக அல்லவா இருக்கிறது.

    கர்ணன் : இல்லை, மத்ரா தேச மன்னரே, எனக்கு அப்படி இல்லை, என் வரையில் நான் அப்படி இல்லை. போரிடும் போதும், நமக்கு நிகரானவர்களோ, நம்மை விட வலிமை மிக்கவர்களோ அவர்களோடு போரிடும் போதுதான் நமது திறமை முழு அளவில் வெளிப்படும்.

    நம்மை மேலும், மேலும் வலுப்படுத்த, இதுபோன்ற போர்தான் அவசியம். நான் எப்போதும் விரும்புவதும் அதைத்தான். அது இன்றுதான் நிறைவேறுகிறது.

    உண்மையில் அர்ஜுனன் ஒரு தலை சிறந்த வீரன்.

    சல்லியன் : எதிரியிடம் கூட நல்லதைக் காணும் உன் வீரத்தின் திறத்தின் முன் நான் தலை வணங்குகிறேன் கர்ணா. மகனே.. உனக்கு சாரதியாய் இருப்பதில் வருத்தமும், உன்னை ஜெயிக்க விடக் கூடாது எனும் வக்கிரமும் கொண்டு இருந்தேன்.

    உன் திறமையைக் கண்டதும், வக்கிரம் மறைந்தது. உன் குணம் கண்டு, என் வருத்தமும் மறைந்தது. இப்போது நீ பேசியதைக் கண்டதும், உன் மீதும், வாத்சல்லியமும், வாஞ்சையும் வஞ்சமின்றி பல்கிப் பெறுகிறது கர்ணா.

    வெற்றி உன் வசமாகட்டும் கர்ணா.

    கர்ணன் : உங்கள் அன்பை அடைந்தது என் பாக்கியம். மிக்க நன்றி அரசரே.
     
    Last edited: Mar 17, 2011
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Re: கர்ணன் என் காதலன் : 40

    மன்னிக்கவும், கவனியாது இடை புகுந்து விட்டேன்
     
    Last edited: Mar 17, 2011
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: கர்ணன் என் காதலன் : 40

    நாகாஸ்திரம் :

    இருவருக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இருவரும் அஸ்திரங்களின் மூலம் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

    பல விதமான அஸ்திரங்கள் இரு தரப்பில் இருந்தும் வெளியேற, அதைக் கண்ட மக்கள், இருவரில் யாரோ ஒருவரின் பக்கம் சேர்ந்து அவருக்காய், கோஷங்கள் எழுப்பி அவர்களை உற்சாகப் படுத்தினர்.

    இது இவ்வாறு இருக்க, இந்த யுத்தம் பற்றிக் கேள்வியுற்ற அஸ்வசேணன் என்னும் நாகம், இந்த யுத்தத்தைக் காண வந்தது.

    இந்த நாகம், அர்ஜுனனை பழி வாங்க வேண்டும் என பல்லாண்டு காலமாய் காத்துக் கொண்டு இருக்கும் நாகம். அர்ஜுனன், அக்னிக்காக, கான்டவ வனத்தை அழிக்கையில், தன் தாயின் கருவில் இருந்த இந்த நாகம், மிகுந்த இடர்களுக்கு இடையில் தப்பிப் பிழைத்து, தன் தாயைக் கொன்றவனைப் பழி வாங்கிடத் துடித்துக் கொண்டு இருந்தது.

    கர்ணனும், அர்ஜுனனும், போரிடுகிறார்கள் என்பதை அறிந்து, வேகமாய் களத்தை அடைந்தது. அர்ஜுனனைக் கொல்லவென கர்ணன் வைத்திருந்த நாகாஸ்திரத்தில் சென்று புகுந்தது.

    கர்ணனும், பல அஸ்திரங்கள் எய்து பார்க்க, அர்ஜுனன் அத்தனை அஸ்திரங்களையும் தடுத்தான். அர்ஜுனனின் அத்தனை அஸ்திரங்களையும் கர்ணன் தகர்த்தான்.

    முடிவில் கர்ணன், நாகாஸ்திரத்தை எடுத்து, விஜயத்தில் தொடுத்து, நாணை முழு நீளத்திற்கு இழுத்து எய்யப் போகும் தருணம், கர்ணனின் குறியைக் கண்ட சல்லியன் கர்ணனிடம், அவன் கழுத்துக்கு குறி வைக்காதே, மார்புக்கு குறி வை என்றான்.

    கர்ணன், அர்ஜுனன் மாபெரும் வீரன், அவன் உயிர் சில நிமிடங்கள் ஆனாலும் துடித்து இறப்பதை நான் விரும்பவில்லை. ஒரே நொடியில் வேதனை இன்றி அவன் இறக்கட்டும். இதோ அவன் கழுத்துக்கு குறி வைத்து எய்கிறேன் அம்பை என்றான்.

    சல்லியன் மீண்டும் வலியுறுத்தினான், சொன்னாள் கேள் கர்ணா, அர்ஜுனனிடம், நாகாஸ்திரத்துக்கு தகுந்த பதில் அஸ்திரம் கிடையாது. எனவே கண்ணன் நிச்சயம் ஏதாவது சூழ்ச்சி செய்வான். எனவே நீ அவன் மார்புக்கு குறி வை என்றான்.

    கர்ணன் : இல்லை என் மனம் ஒப்பவில்லை. இதோ அவன் தலையைக் கொய்கிறேன் என அம்பை விடுத்தான்.

    நாகாஸ்திரம், நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய, அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க, அண்டசராசரங்கள் நடுநடுங்க, போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க, நாகஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது.

    அந்த நேரத்தில், கண்ணன் தன் காலால் தேரை அழுத்த, அது, ஒன்னரை அடி மண்ணுக்குள் புதைந்தது.

    அர்ஜுனன் தலையைக் கொய்ய வந்த நாகாஸ்திரம், அர்ஜுனனின் கிரீடத்தை(அர்ஜுனனுக்கு அவன் தந்தை இந்திரனால் வழங்கப்பட்டது) மட்டும் சுக்குநூறாக உடைத்தது.

    அஸ்திரம் திரும்ப கர்ணனை வந்தடைந்தது.

    சல்லியன் கோபம் :


    சல்லியன் கர்ணனை அறிவுருத்தினான். கர்ணா, இதோ மீண்டு வந்த அஸ்திரம், இப்போதாவது அதை அர்ஜுனன் மார்புக்கு குறி வை. கர்ணன் அதை எடுத்து வில்லில் தொடுக்கும் போதுதான், தன் தாய்க்கு, நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் அர்ஜுனன் மேல் பிரயோக்கிக்க மாட்டேன் என வாக்கு தந்தது நினைவுக்கு வந்தது. அஸ்திரத்தை மீண்டும் அம்பறாத் துணிக்குள்ளே வைத்து விட்டான்.

    இலக்கை சரியாகத் தாக்காத அஸ்வசேணன் மீண்டும் வந்து, நான் தான் நீ எய்த அம்பில் இருந்தவன். என்னை நீ மீண்டும் உபயோகித்துக் கொள். அந்த பாவியைக் கொல்லாமல் விட மாட்டேன். தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தாலும் அர்ஜுனனை நான் கொல்வதை தடுக்க இயலாது. என்கிறது.

    அதை கர்ணன் மறுக்கிறான். ஆயிரம் அர்ஜுனன்களை நான் அழிக்க வேண்டி இருந்தாலும், ஒரே அஸ்திரத்தை நான் ஒரு முறைக்கு மேலே உபயோகிக்க மாட்டேன்.

    மேலும், வெற்றி என் திறமை மூலமாக எனக்கு கிடைக்க வேண்டும். அடுத்தவர் மூலம் கிடைக்கும் வெற்றி எனக்கு வேண்டாம் என மறுத்துவிடுகிறான்.

    அஸ்வசேனன், இவனிடம் பேசிப் பயன் இல்லை என, தானே அர்ஜுனனைத் தாக்கச் செல்கிறது. அதை கண்ட கண்ணன், அர்ஜுனனுக்கு அந்த நாகத்தை அழிக்குமாறு ஆணை இடுகிறான். அர்ஜுனனும், அந்த நாகத்தை அழிக்கிறான்.

    அஸ்திரத்தை கர்ணன், உள்ளே வைத்ததைக் கண்ட சல்லியன், கோபம் கொண்டு, அஸ்திரத்தை எடுத்து தாக்கு கர்ணா என்கிறான்.

    கர்ணன் : (தாய்க்கு தந்த வாக்கு என்பதை சொல்ல இயலாத கர்ணன்) நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். உங்கள் வேலை ரதத்தை செலுத்துவது மட்டும்தான். அதை செய்யுங்கள்

    சல்லியன் : (இந்த பதிலில் ஆத்திரம் அடைகிறான் சல்லியன்)

    இதன் பின்னர், கண்ணன், தேரினை பூமிக்குள் இருந்து வெளியே எடுக்கிறார்.

    மீண்டும் இரு வீரர்களும், உயிரைப் பறிக்கும் அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மீது ஒருவர் எய்து கொண்டு போரிடுகிறார்கள்.

    அர்ஜுனன், எய்த என்னன்ற அம்புகள் கர்ணனைத் தாக்க, கர்ணன் சோர்ந்து போகிறான். அப்போது அவன் முடிவு அவன் கண்களில் தெரிகிறது.

    மரணம் தன்னை நெருங்கி வந்ததை கர்ணன் அறிகிறான் கால தேவனின் துணையுடன். “கர்ணா, பூமாதேவி உன் ரதத்தை தன்னுளே பிடித்து வைக்கப் போகிறாள்” கவனம் என எச்சரிக்கிறார்.

    ஆனாலும், தேரின் சக்கரம், பூமிக்குள் புதைகிறது. தேர் அசைய மறுத்து நின்று விடுகிறது.

    கர்ணன் : அரசரே, ரதத்தை மேற்கொண்டு செலுத்துங்கள்.

    சல்லியன் : ரதம் இம்மி கூட நகராது. சக்கரம் மண்ணில் புதையுண்டு போயிற்று.

    கர்ணன் : இறங்கி சரி செய்யுங்கள்

    சல்லியன் : (கர்ணன் தன் சொல் பேச்சு கேட்க மறுத்த காரணத்தால்) அது என் வேலை அல்ல. என் வேலை ரதத்தை செலுத்துவது மட்டும் தான்.

    கர்ணன் : இது என்ன வாதம். உடனே ரதத்தை மேலே கொண்டு வர ஆக வேண்டியதை செய்யுங்கள்.

    சல்லியன் : முன்பே நான் துரியோதனனிடம் சொல்லி இருக்கிறேன், நீ என்னை அவமதிப்பது போல பேசினால், உன்னை விட்டு நான் விலகி விடுவேன் என்று. நீ என்னிடம் பேசும் முறை சரி இல்லை. நான் போகிறேன். நீயே உன் ரதத்தை சரி செய்து கொள்.

    கர்ணன் : போர் முனையில் இப்படி என்னை நிராதரவாக விட்டுச் செல்வது நியாயம் இல்லை.

    சல்லியன் பதிலேதும் பேசாது அவர் பாட்டுக்கு சென்று விட்டான்.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: கர்ணன் என் காதலன் : 40

    கர்ணனின் முடிவு :

    அர்ஜுனனுக்கு கர்ணன் இந்த நிலையில் இருக்கையில் போரிட விருப்பம் இல்லை. ஆனால் கண்ணன் ஆணை இட்டான். அவனைத் தாக்கு. தாக்கி அழித்துவிடு.

    அப்போது

    கர்ணன் : அர்ஜுனா, நில், என் தேர்ச்சக்கரம் மண்ணில் புதையுண்டு போயிற்று. கொஞ்சம் அவகாசம் கொடு. ஒரு நிமிடத்தில் அதை நான் சரி செய்து விடுகிறேன்.

    அர்ஜுனன் மௌனமாய் அதற்கு சம்மதிக்க, கண்ணன், அர்ஜுனனி போரிடத் தூண்டுகிறான். அர்ஜுனன் பகவானை மகிழ்விக்க கர்ணனை தாக்கத் தொடங்கினான்.

    கர்ணன் : தனியாய், சாரதி இன்றி, ரதமும் மண்ணிலே புதையுண்ட நிலையில் போரிடுவதுதான் வீரத்துக்கு அழகா??? அர்ஜுனா, நீ செய்வது நியாயமா?? கொஞ்சம் பொறு அர்ஜுனா.

    கண்ணன் : தனியாய் வந்த சிறுவன் அபிமன்யுவை, மாவீரர்கள் அனைவரும் சேர்ந்து கொன்றீர்களே அது தான் வீரமா?? அதைச் செய்த வீரன் பேசும் வார்த்தைகளா இது??? சூதாட அழைத்தது நியாயமா??? வஞ்சகமாய், நாட்டை எடுத்துக் கொண்டது நியாயமா??? திரௌபதியை சபையில் துகிலுரித்து அவமானப் படுத்தியது நியாயமா??? இதை நீ செய்யாவிடினும், செய்தவர் பக்கம் இருந்து, அமைதியாய் வேடிக்கை பார்த்தது நீதானே???

    கர்ணன் : எதுவும் பேசாமல், தன் சக்தி அஸ்திரத்தால் அர்ஜுனனை தாக்கினான். அது ஒரு கணம், அவனை நிலை குலையச் செய்ய, கர்ணன் அந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, தன் தேர் சக்கரத்தை மண்ணிலிருந்து எடுக்க முயற்சித்தான்.

    ஆனாலும், பிடித்திருந்தவள் பூமாதேவி அல்லவா??? விடுவாளா??? ஆன மட்டும் முயற்சித்தான் கர்ணன். அவனால் சக்கரத்தை வெளியே எடுக்க முடியவில்லை.

    அந்தோ பரிதாபம், அப்போது தெளிவடைந்த அர்ஜுனன், கர்ணனைத் தன்னிடம் இருந்த சக்தி அஸ்திரத்தால் தாக்கினான்.

    சரியாய் அவன் மார்பிலே பாய்ந்தது அஸ்திரம்.

    அந்தக் கணத்தில் பரசுராமரின் சாபம் பலித்து, கர்ணனுக்கு, அஸ்திரங்களை ஏவும் மந்திரங்கள் மறந்து போக, உதவி அற்ற நிலையில், கர்ணன், புறமுதுகு காட்டாது, அர்ஜுனனின் அஸ்திரங்களை மார்பிலே ஏந்தினான்.

    அம்பு மீது அம்பு விட்டான் அர்ஜுனன். ஆனாலும் கர்ணனின் உயிரை அவற்றால் தீண்டக் கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில், அர்ஜுனனின், மின்னல் வேக அம்புகள் அனைத்தும், மலர் மாலைகளாகி கர்ணனுக்கு விழத் துவங்கின.

    குழம்பினான் அர்ஜுனன். விளக்கினான் கண்ணன்.

    இதுநாள் வரையில் கர்ணன் செய்த தான தர்மங்களின் பலன் அவனைக் காக்கிறது. இரு வருகிறேன், என ஒரு வயோதிக ஏழை அந்தணன் வடிவெடுத்து கர்ணனிடம் செல்கிறான்.

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா கர்ணா
    வருவதை எதிர்கொள்ளடா

    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர்பழி ஏற்றாயடா
    நானும் உன் பழி கொண்டேனடா

    மன்னவர் பணியேற்கும்
    கண்ணனும் பணி செய்ய
    உன்னடி பணிவானடா கர்ணா
    மன்னித்து அருள்வாயடா கர்ணா
    மன்னித்து அருள்வாயடா

    செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா

    கர்ணனை நாடினான் கண்ணன்.

    கண்ணன் : அய்யோ.. தருமம் இப்படி வீழ்ந்து கிடக்கிறதே. யாசிக்க வந்த நானோ ஏதும் பெற முடியாத பாவி ஆனேனே.

    கர்ணன் : யாசகமா??? பெரியீர், ஏது வேண்டும்??? என்னிடம் இருக்கும் எதையும் பெறலாம். இப்போது உயிர் ஒன்றுதான் இருக்கிறது. அது வேண்டுமா?? இல்லை என்றேன் என்ற சொல் வராமல், இருப்பதைக் கேட்டுப் பெற்று இறக்கும் போதும் எனக்கு பெருமை வரச் செய்யுங்கள்

    கண்ணன் : நீ செய்த தருமத்தின் பயனை எல்லாம் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடு. அதுபோதும்.

    கர்ணன் : ஆகா... எவ்வளவு சிறந்த சேவைக்கு என்னை ஆளாக்கிணீர்.

    (என கர்ணன், தான் செய்த தான, தர்மத்தின் பலனை எல்லாம், தன் உதிரம் கொண்டு கண்ணனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தான்)

    கண்ணன் : கர்ணா, அழியாப் புகழோடு முக்தியும் பெறுவாய் நீ

    கர்ணன் : எனக்கு முக்தியும் சித்திக்கும் என்று அருள் புரியும் நீர் யார்???

    கண்ணன் : நானா?? இதோ பார்.... என விஷ்வரூப தரிசனம் தருகிறான்.

    கர்ணன் : பரந்தாமா, தங்களின் கருனைதானா என்னை ஆட்கொண்டது?? என கைகளைக் கூப்பியபடி தொழுகிறான்.

    (தொழுதவன் மயங்குகிறான், மாதவன், அர்ஜுனனிடம் சென்று இப்போது தொடு உன் கணையை, கர்ணன் கதை முடிந்து விடும். அவ்வாறே அர்ஜுனன் செய்ய, கர்ணன் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது)

    கர்ணன் : அம்மா..ஆ...ஆ...ஆ...
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: கர்ணன் என் காதலன் : 40

    கர்ணனின் உறவுகள் :


    கர்ணனின் கடைசி ஓலம் அவன் அன்னையை எட்ட, விரைந்து வருகிறாள் போர்க்களத்துக்கு...

    குந்தி : மகனே... மகனே... மகனே... என அலறித் துடித்து, கர்ணனை மடியில் ஏந்தி கதறுகிறார்.

    சூரியன் : கர்ணா, என் மகனே... என நொடியில் தன் வெளிச்சக் கதிர்கள் இழந்து இருண்டு போகிறான்.

    தருமர் : அன்னையின் குரல் கேட்டு, நகுலா, இறந்தது யார் அர்ஜுனனா?? இல்லை கர்ணனா?? அம்மா ஏன் மகனே மகனே என கதறுகிறார்???

    நகுலன் : நான் அறிவேன் அண்ணா, நிச்சயம் இறந்தது கர்ணன்தான். ஆனாலும் அன்னை அழும் காரணம் தான் நான் அறியேன் அண்ணா.

    தருமர்: சரி வாருங்கள் பார்க்கலாம் என சகோதரர்கள் நால்வரும் வருகின்றனர்.

    குந்தி : மகனே... அய்யோ... சாகாப் புகழும், வளமும், நலமும், கொண்ட உன்னை விட்டு உயிர் பிரிந்ததா??? மகனே... என தன் மடியில் இருந்த மகனின் முகம் தொட்டு கதறிக் கொண்டு இருந்தால் இந்த அன்னை.

    அர்ஜுனன் : அம்மா, என்னம்மா இது??

    குந்தி : என் மகன். தன் உடன் பிறந்த சகோதரர்களான உங்களைக் காக்க தன் உயிரை ஈந்த என் முதல் மகன்.

    அர்ஜுனன் : அம்மா....

    குந்தி : ஆம் அர்ஜுனா, எனது தலை மகன் கர்ணன் தான்.

    அர்ஜுனன் : அய்யோ.. என்னம்மா இது??? என் அண்ணனையா நான் கொன்றேன்?? அதிலும் அனைவரில் மூத்தவரையா நான் கொன்று விட்டேன்??? எதிரில் இந்த மாவீறனைக் கண்ட போதெல்லாம், அண்ணனைப் போல தோன்றியது இதனால்தாணா???

    கிருஷ்ணா... கிருஷ்ணா... வஞ்சகன் நீ உன்னால் அல்லவா இந்த உத்தமனை நான் கொன்றேன்???


    கிருஷ்ணன் : ம்ம்ம்ம்ம்.... ஹ ஹ ஹ... நான் கொன்றேன், நான் கொன்றேன் என ஏன் நீ வீணில் மார்தட்டிக் கொள்கிறாய்?? உன் ஒருவனால் அவனைக் கொல்ல முடியுமா??? முதலிலேயே நான் உன்னிடம் சொல்லி உள்ளேன்.

    மாபெரும் வீரன் கர்ணன். அவனை தேவர்கள், மூவர்கள், ஏன் கடவுளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கூட அவனைக் கொல்ல முடியாது. அளப்பரிய ஆற்றல் கொண்டவன்.

    ஆற்றலில் அவன், தன் வழியே வரும் அனைத்தையும், பொசுக்கிடும் வலிமை கொண்ட நெருப்புக்கு சமம்.

    வேகத்தில், கட்டுக்கடங்காமால் மோதும் மூர்க்கத்தனமான காற்றுக்கு சமம் அவன்.

    சீற்றம் கொள்கையில், தன்னைக் கூட அழித்துக் கொள்வான் அவன்.

    வலிமையான பண்பில், உடல் அமைப்பில், அவன் சிங்கத்துக்கு ஒப்பானவன்.

    உயரமும், உயரத்துக்கேற்ற பருமனும், நீண்ட கைகளும், பரந்த மார்பும் உடையவன்.

    வெல்லமுடியாதவன். கொல்லப்பட முடியாதவன். உணர்ச்சிமிக்கவன். தோள்கள் தினவெடுத்தவன்.

    போர்க்கலையின் ஒவ்வொரு செயல்பாடுகளின் மீதும் வெறிபிடித்தவன்.

    எதிரிகளை தினறடிப்பவன். அவன் நண்பரின் பயங்களை சிதறடிப்பவன்.

    மொத்தத்தில் அவன் ஒரு நாயகன். இதுவரை நாயகனாய் இருந்த அனைவருக்கும் முதலானவன்.

    சாபங்கள் எதுவும் இல்லாமல் இருந்திருந்தால், அழிவில்லாதவன் அவன். அழிக்க இயலாதவன் அவன்.

    நம்பிக்கை எனும் சொல்லு இலக்கணம் அவன். விசுவாசம் எனும் சொல்லுக்கு பொருளானவன் அவன்.

    நட்புக்கு, நடமாடும் உதாரணம் அவன். இறந்தாலும், இறவாமல் நம் நெஞ்சில் பொருந்தியன் அவன்.

    கர்ணனின் சாவுக்கு பங்களித்த காரணிகள் இவை : (நன்றி விக்கிபீடியா)

    1. கர்ணனின் சாவிற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் முனிவர் துர்வாசா ஆவார். அபர் குந்தியை ஆசீர்வதிக்கையில் மந்திரத்துடன் அவரது விருப்பத்திற்கு எந்த கடவுளையும் அழைக்கலாம் என்று ஆசீர்வதித்த அவர், அந்த மந்திரத்தின் பின்விளைவை அவரிடம் சொல்லவில்லை. எனவே, குந்தி அந்த மந்திரத்தின் பின்விளைவைப் பற்றிய விழிப்புணர்வின்றி தனது திருமணத்திற்கு முன்னதாக சூரியனை அழைத்தார். திடீர் பயத்தாலும் தொடர்ந்த தீய வழியினாலும் குழந்தை உருவானது. தேரோட்டி அதிரதாவினால் அவர் வளர்க்கப்பட்டதால் கர்ணனை க்ஷத்ரியராக ஏற்றுக்கொள்ளல் மறுக்கப்பட்டது. அஸ்தினாப்பூரின் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் கர்ணன், யூதிஷ்திராவோ அல்லது துரியோதனனோ அல்ல, ஆனால் அவரது பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டதால் இது அறியப்படவில்லை.

    2. இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த பகவான் இந்திரன், கர்ணனின் தொடையைக் குடைந்தார். இது குரு பரசுராமரைக் கோபப்படுத்தியது, அவர் தொடர்ந்து கர்ணனை தனது சாதி பற்றி பொய்யுரைத்ததற்காக சாபமிட்டார். பின்னர் குருக்ஷேத்திராவில் நடக்கவிருந்த படுகொலைபற்றி பரசுராமருக்கு தெரியும் என்பது வெளியிடப்பட்டது. அர்ஜூனனுடன் போரிடும் முன்னர் இரவில் அவர் கர்ணனிடம் கனவில், உறுதியாக கௌரவர்களைத் தோற்கடிக்கவே கொடூரமான முறையில் அவரை நோக்கத்தோடு சாபமிட்டதாக விவரித்தார், கர்ணன் சாபத்தை பணிவுடன் ஏற்றுக்கொண்டதால், அவர் இறப்புக்குப் பின்னரும் எக்காலத்திற்கும் அழியாத புகழைக் கொண்டிருப்பார் என்று ஆசிர்வதித்தார்.

    3. பசுவின் உரிமையாளரான பிராமணனின் சாபம்.

    4. பூமாதேவியின் சாபம்.

    5. பகவான் இந்திரனுக்கு தனது கவசம் மற்றும் குண்டலத்தை தன்னிடமிருந்து தானமாக அளித்தல், இந்த முறை அவர் பிச்சைக்காரராக மாறுவேடமிட்டிருந்தார், ஏனெனில் அவரது அதீத பெருந்தன்மைக் குணம்.

    6. ஷக்தி ஆயுதத்தை கடோட்கச்சாவின் மீது செயல்படுத்தியது.

    7. அவரது தாய் குந்திதேவிக்கு அளித்த அவரது இரண்டு சத்தியங்கள்.

    8. அர்ஜூனனை கர்ணனின் நாகஸ்திரத்திலிருந்து காக்க கிருஷ்ணன் தேரை அழுத்தியது

    9. குந்திக்கு தான் அளித்த இரண்டாவது சத்தியத்தின் பொருட்டு "நாகஸ்திரத்தை" இரண்டாவது முறை பயன்படுத்தாதது.

    10. ஷால்யா, போர் மிகமுக்கியமான கட்டத்தில் இருந்த போது நடுவழியில் கர்ணனின் தேரை விட்டுச்சென்ற தேரோட்டி.

    11. மகாபாரதப் போரின் ஆரம்பத்தில் கர்ணனுக்கு பாண்டவர்கள் தனது சகோதரர்கள் என்பது கிருஷ்ணர் மூலமாகத் தெரிந்தபோது, பாண்டவர்களின் மீதான கர்ணனின் பழிவாங்கும் எண்ணம் பயனற்றதானது. பாண்டவர்களின் மீதான கர்ணனின் பகைமை மறைந்தது. ஆனால், துரியோதனனின் மீதான விசுவாசத்தின் அடிப்படையில், கர்ணன் போரில் அர்ஜூனனுக்கு எதிராகப் போரிட முடிவுசெய்தார். மாறாக, பாண்டவர்கள் யாருக்கும் கர்ணன் அவர்களின் சகோதரர் என்பது கர்ணன் இறந்த பின்னர் வரையில் தெரியாது.

    12. பகவான் கிருஷ்ணர், கர்ணன் தனது தேரை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவரும் போது அவரைக் கொல்லும்படி அர்ஜூனனை வற்புறுத்தினார்.

    13. கர்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது தெய்வீக அம்பான விஜயாவை பயன்படுத்தவில்லை

    14. கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனிடமிருந்து மூன்று முறை ஷக்தி, பார்கவா அஸ்திரா மற்றும் நாகாஸ்திரா ஆகியவற்றிலிருந்து காப்பாற்றினார்


    துரியோதனன் : கர்ணா... என் நண்பா.. போய் விட்டாயா என்னை விட்டு??? அய்யோ... இதுவரை இருவரும் சேர்ந்து இருந்ததைப் போலே, நாணும் உன்னுடனே வந்திருப்பேனே நண்பா. வந்தாலும், செயற்கரிய செயலைச் செய்து நீ அடைந்த இடத்தை நான் அடைய முடியுமா???

    நண்பா, என் பொருட்டு எதையும் நீ செய்வாய் என்பதை நான் அறிந்தே இருந்தேன். உன்னை நான் இழப்பேன் என கனவில் கூட எண்ணியதில்லை நண்பா.

    என் உயிரே, உன் மீது நான் கொண்ட நட்புக்கு, நீ இத்துணை பெரிய தியாகம் செய்வாய் என் நான் அறியவில்லையே கர்ணா.

    என்ன செய்து என் அன்பை இனி உனக்கு புரியவைப்பேன் என நீ கேட்டபோது நான் அறியவில்லை கர்ணா, உன் உயிரைத் தந்து அதை நீ உணர வைப்பாய் என..

    நண்பா... கர்ணா... என் உயிரே....


    சுபாங்கி : அத்தான்... என்னை விட்டு போய் விட்டீர்களா??? அய்யோ.. என் தெய்வம் என்னை விட்டுப் போய் விட்டதா??? என் உளம் வாடப் பொறுக்காத என் உயிர் என்னை வாட விட்டுச் சென்று விட்டதா???

    சுபாங்கியின் தந்தை : மகளே.. சுபாங்கி... என தொடர்ந்து ஓடி வருகிறார்.

    சுபாங்கி : பாருங்கள் அப்பா. பாருங்கள், நீங்கள் விரும்பாத உங்க மருமகனைப் பாருங்கள். என்னை வாழ்வித்த தெய்வம், மண்ணிலே வீழ்ந்து இருப்பதை பாருங்கள்.

    சுபாங்கியின் தந்தை : கர்ணன், குந்தியின் மடியில் கிடப்பதைக் கண்டு.. உண்மை அறிந்து... மகளே... என கதறுகிறார்.

    சுபாங்கி : அவர் இல்லாத உலகத்தில் எனக்கு எதுவுமே இல்லை. அவர் ஜீவன் இல்லாத, இடத்தில் நாணும் வாழ மாட்டேன். அத்தான்.. நீங்கள் வாழும் உலகிற்க்கே நாணும் வருகிறேன் அத்தான்... அத்தான்... அத்தான்... என கர்ணனின் மீது வீழ்ந்து சுபாங்கி இறக்கிறாள்.

    சுபாங்கியின் தந்தை : கர்ணா, என் மருமகனே, போரிலே உன் வீரம் கண்டே, மனதளவில் உன் மீது மரியாதை அதிகரித்தது. உன் தீரத்தின் செருக்கில், எனது ஆணவச் செருக்கு அடியோடு அழிந்து போனது. போர் முடிந்ததும், உன்னிடம் மன்னிப்பு கேட்க எண்ணி இருந்தேனே... இனி நான் என்ன செய்வேன்.

    யாரிடம் சென்று சொல்வது என் மனமாற்றத்தை??? சொன்னாலும் கேட்க முடியாது இடத்துக்கு சென்று விட்டீர்களே?? அய்யோ.. கர்ணா, மகனாய் உன்னை, மாளிகைக்கு அழைத்துச் செல்லலாம் என இருந்தேனே... என் ஆசை மண்ணோடு மண்ணாகிப் போனதே நான் என்ன செய்வேன்???


    குந்தி : கர்ணா.. என் மகனே, தம்பிமார் ஐவரும் உன் தாள் பணிய, நீ முடிசூடி அரசாள வேண்டும் எனக் கனவு கண்டேன். கர்ணா..

    தருமதேவதை : நீ ஏனம்மா அழுகிறாய்?? மலை போல் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பது உன் போன்ற தாய்க்கு தகுமா?? எனக்கு இருந்தது ஒரே பிள்ளை. அவனையும் நான் இழந்து விட்டேனே. மகனே.. கர்ணா...

    குந்தி : நீங்கள் யாரம்மா???

    தருமதேவதை : தருமத்தின் தேவதை. எல்லாரும் சேர்ந்து என் மகனை கொன்று விட்டீர்களே?? உங்களுக்கு புகழ் உண்டா??? மோட்சம் உண்டா?? எனக்கென ஒரே ஒரு மகன் அவதரித்திருந்தான். அவன் பிறந்ததில் தருமம் தழைத்தது என சந்தோசம் கொண்டிருந்தேன்.

    கிருஷ்ணா.. எத்தனையோ சதி செய்து, அவனை வாழ விடாது செய்தாயே. இது நியாயமா??? கருணைக் கடவுளுக்கு இது அடுக்குமா??

    கிருஷ்ணன் : ஹ ஹ ஹ, தருமமாதா, அறம் அறிந்த நீயும் பிறர் போல புலம்புதல் சரியா??? என் செயல் விதி மாறி அமையுமா???

    பரித்ராணாய ஸாதூநாம், விநாஷாய ச துஷ்க்ருதாம் |
    தர்ம ஸம்ஸ்தாபநார்தாய, ஸம்பவாமி யுகே யுகே ||

    For the up-liftment of the good and virtuous,
    For the destruction of evil,
    For the re-establishment of the natural law,
    I will come, in every age
     
    Last edited: Mar 17, 2011
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: கர்ணன் என் காதலன் : 40

    கர்ணா என் காதலனே:

    என் இதய வானின் ஆதவனே,
    மனதை நிறைத்த மாதவனே,
    என்னை விட்டுச் சென்றாயோ??


    எண்ணம் தனில் உன்னை விதைத்து
    நெஞ்சம் தனில் உன்னை தைத்து
    உரமேற்றிப் போனவன், இன்று
    உயிர் விட்டுப் போனதென்ன??


    உயிர் விட்டுப் போனவன்
    என் உளம் தொட்டுப் போனவன்


    என் மனம் வாடிய போதெல்லாம்
    வாடாத தீரம் என்னில் தந்தவன்


    சீராடும் பொழுதுகளில்
    போராடும் வீரம் தந்தவன்


    சிந்திக்கும் எண்ணம்
    மந்தித்த வேளையிலே
    சிந்தையிலே வந்தவன்

    சீர்தூக்கிப் பார்க்கும்
    சீரான குணத்தை
    சீராகத் தந்தவன்


    வாழ்வெனும் பாடத்தை
    வாழ்ந்திடவே வேண்டுமென
    போராகத் தந்தவன்


    மறைந்தது நீயா???
    மரித்தது நானா??


    மறைந்தாலும்,
    நீ மறைந்தது என்னிலே தெரிந்தாலும்,
    நீ விட்டுப் போன பாடங்கள்
    பசுமை நீங்கா நினைவுகளாய்
    என்னிலே.. எப்போதும்...


    உன்னைக் காதலித்தேன்
    உன் தீரம் காதலித்தேன்
    உன் ஈகை காதலித்தேன்
    உன் நட்பைக் காதலித்தேன்
    உன் காதலைக் காதலித்தேன்

    இறக்கும் போதும் இறவாத உன் வீரம் அதை
    நான் இறக்கும் வரை காதலிப்பேன்
    இன்றும், என்றும், எப்போதும்
    கர்ணா நீ என் காதலன்தான்.


    __________________________
    கர்ணனின் வாழ்வு, நாம் தெரிந்து கொள்ள வேண்டி, நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பல நல்ல விஷயங்களை சொல்லி உள்ளது.

    போராட வேண்டும் வாழ்வில்.

    வாழ்வு எப்போதும் நமக்கு மலர்படுக்கை விரிக்காது. கல்லோ, முள்ளோ, நடந்து பார். உன் துன்பம், துயரை நீ கடந்து பார். வாழ்வில் வெளிச்சம் வரும்.

    முடங்கிக் கிடந்தால், முன்னேற முடியாது. எண்திசையும் இருள்சூழ இருந்தாலும், முடங்கிப் போகாதே. முட்டி மோதி முயற்சித்துப் பார். மூர்சித்துப் போகும் வரை முயற்சித்துப் பார்.

    வெற்றி உன் வசம். வாழ்வு உன் வசம்.

    வாக்கு தவறாமை, விசுவாசம், ஈகை, நட்பு, என அனைத்தும் முக்கியம் தான் வாழ்வில்.

    நம்பிக்கை எனும் கையை மூலதனமாக்கு. அதற்கு நல்ல நட்பை துணையாக்கு. உன் ஆத்மார்த்த அன்பை அதற்கு அணியாக்கு. அடைவாய் ஜெயம்.

    பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்பதா வாழ்வு???
    இதனால் வராதா தாழ்வு???

    பிறந்தோம், வாழ்ந்தோம், வரலாறானோம் என இருக்கட்டும் வாழ்வு.
    இப்படி இருப்பின் எப்படி வரும் தாழ்வு???

    வாழ்க நலம்




    என் இதயம் நிறைந்த நன்றிகள் :


    இதுவரை நான் எழுதியதை ரசித்து, எனை ஊக்கப்படுத்தி, என் குறைகளை நிறைகளாக்க எனக்கு உதவிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கு என் முதற்க்கண் நன்றி :bowdown

    நான் அறிந்தவற்றை, மேலும் மெருகேற்றி, ஒரு வரிசையில் சீர்படுத்தி, அறியாத பல அறிய தகவல்களை நான் அறியச் செய்து, அதை உங்களுக்கு வழங்கிட உதவிட்ட இணையத்துக்கும், ஆதார நூல்களை இருந்திட்ட சில இனையதலங்களுக்கும் என் சிறப்பு நன்றிகள் பல. :bowdown

    கர்ணனின் படத்தை அழகாய், வரைந்து கொடுத்த என் நட்புடன் நண்பருக்கு சிறப்பு நன்றி. :bowdown

    விடாமல் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து, எனக்கு ஊக்கம் தந்த என் இனிய தோழிகளுக்கு என் மனம் திறந்த, மடை திறந்த நன்றிகள்

    கர்ணன் திரைப்படத்தை ஒட்டிய காட்சிகள் இந்தக் கதையில் நிறைய உண்டு. அந்தப் படத்திற்கு என் சிறப்பு நன்றி. கர்ணனை பற்றிய என் கற்பனைக்கு, நடிகர் திலகம் அந்தப் படம் பார்த்த பிறகு கணக்கச்சிதமாக பொருந்திப் போனார்.

    சொல்லாமல் யாரையேனும் விட்டு விட்டிருந்தால், அவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.
     
    Last edited: Mar 17, 2011
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: கர்ணன் என் காதலன் : 40


    ஜெயம் கொடுக்கும் அறம் விரும்பி
    கொடுப்பதொன்றையே வாழ்வின் கொள்கையாய் கொண்டு
    கேட்டவர்க்குக் கேட்டதைக் கொடுத்தே கெட்டாய்.


    கொடுப்பதெல்லாம் கொடுத்து இனி
    கொடுப்பதற்கு ஏதும் இலதென்று கலங்கி
    புன்னகையுடன் அர்ஜுனனின் அம்புகளை மார்பில் தாங்கிய பேருருவே
    சாகுந்தறுவாயிலும் சகாயம் செய்யத் துடித்த/துணிந்த ஞானியே
    அதுவும் வாய்த்ததே என்று உவகையாய்
    விதியின் கதை முடிக்கும் அந்த இறுதிப் பயணம்.
    தருமத்தின் பலனையெல்லாம் உதிரமாய்/தானமாய் தந்து...
    உன் இன்னுயிர் நீத்தாயே நண்பா.
    உன் கொடைகளிலேயே உன்னதமானது இந்த இறுதிக் கொடை.
    உன்னைப் போல் யார் தருவார் ?
    உன்னைப்போல் யார் வருவார் ?


    உன் இல்லாமையில் என் இயலாமை மருகுகிறது
    உன்னுடைய இழப்பை எண்ணி உருகுவதா -இல்லை
    இந்த துன்பியல் வலையில் இருந்து உனக்கு விடுதலை என்று மகிழ்வதா
    உன்னை உணராமல் போனவர்களை எண்ணி கலங்குவதா -இல்லை
    உதாசீனனாய் நீ வாழ்ந்ததை எண்ணி தியங்குவதா??????
    விட்டு விடு கர்ணா-
    இது
    வீணாய்ப் போன உலகம்.
    வீணர்கள் நிறைந்தது.



    கர்ணா நீ எங்கே நானும் அங்கே
    இதோ உன் வழியில் நானும் இங்கே
    எத்துணை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் கொடு
    அத்துணை பிறவியிலும் உன்னைப் போல் இருக்க வரம் கொடு.
    இன்றைக்கு உன்னிடத்தில் நான் பெற்றதை(குணங்களை)
    என்றைக்கும் என்னிடமே நான் வைத்துக் கொள்வேன்.
    கொடுத்ததை திரும்ப வாங்கும் குணம் உனக்கில்லை
    கொண்டதை திருப்பிக் கொடுக்க
    மனம் எனக்கு இல்லை
    மன்னித்து விடு .

    (மீண்டும்)சந்திப்போம் ஒரு நாள் நானும் நீயும்.





    ****************************************

    என் அன்புத் தோழிக்கு
    எதைச் சொல்வது?எப்படி சொல்வது ?என்னவென்று சொல்வது ?

    உணர்சிக் குவியலின் தொகுப்பு.

    கர்ணன் ஆரமபித்த நாள் முதல் இதோ இந்த நாள் வரை
    அத்தனை பகுதிகளும் அமர்க்களம்.



    சூர்ய புத்திரன்.
    சுயகெளரவத்துக்குப் பெயர் போனவன்.

    புறக்கணிப்பின் அடையாளமாகவே வாழ்ந்தவன்.

    சகோதரர்களின் எதிரிகளுடன் நட்பு; செஞ்சோற்றுக் கடனுக்காக உறவுகளை உதறியவன் .

    எல்லா அவமானங்களையும் தன் வீரத்தாலும் கொடையாலும் வென்று
    தலைநிமிர்ந்தான். விதிவசத்தால் அநீதியின்பால் நின்றான்.செஞ்சோற்றுக்கடனுக்காக அநீதியைச் செய்தான்.

    ஏமாற்றப்படுவதை அறிந்தும் தன் பாசத்தால் ஏமாற ஒத்துக்கொண்டான்.
    தீய இயல்பால் அழிந்தவர்கள் உண்டு, தன் நல்லியல்புகளினாலேயே
    அழிந்தவன் கர்ணன்.

    இயற்கையின் நியதிகளை வென்று தன் தனிப் பண்புகளை இழக்காமல்
    நின்றவன்.

    வெற்றி உறுதி என்று தெரிந்த பின்பு மோதும் வீரத்தை விட
    மரணம் உறுதி என்று உணர்ந்த பிறகும் எதிரியை கலங்கடிக்கும் வீரம்
    கர்ணனின் வீரம்.
    தலை வணங்குகிறேன் .:bowdown:bowdown:bowdown


    ......நெஞ்சம் அதிகம் கனத்தாலும் ..தடங்கல்கள் ஏதும் இன்றி
    வெற்றியுடன் இனிதே நிறைவு செய்தமைக்காக
    விழி ஓரக் கண்ணீருடன் இதழோரப் புன்னைகையும்.:):thumbsup
    மன நிறைவுடன் இந்த நிறைவுப் பகுதி.......


    இணைய தளம், தந்தையின் வழி ஞானம் ..இவை இருந்தாலும்
    தொகுத்துக் கூறுவது என்பது இயலாத காரியம்.
    அத்துணையும் அற்புதமாய் எத்துணையும் தளராமல் எங்களுக்கு
    பகுத்துக் கொடுத்த என் ஆருயிர் தோழிக்கு ஆயிரம் நன்றிகள்.
    கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,கேள்விகள் யார் கேட்டாலும்
    அல்லாட விடாமல்
    சல்லடையாய் செய்தி கொணர்ந்து சளைக்காமல் விளக்கம் தந்து,...
    நன்றி தோழியே.
    நான் அறியாமல் இருந்த பல செய்திகள் உன் எழுத்தின் மூலம் என்
    அறிவுக்குள்அடக்கம் .
    வணக்கம் பல முறை சொன்னாலும் என் வார்த்தைகளுக்குள் உன்
    விவேக பகிர்வுகள் அடங்காது.
    ஆதலால் வாழ்த்துகிறேன்
    இது போல் எழுத்துலகில் இன்னும் பல வெற்றிகள் அடைய ......[​IMG]


    ********************************************

    அன்பு நண்பருக்கு
    கதைக் களத்திற்கு ஏற்ற கனமான கச்சிதமான,விரைவான உங்கள் வரைவு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
    அறிவுக் கேணி கொண்டு தோழி கொடுத்த காவியத்திற்கு
    சிறப்பாய், சீராய்
    எழுத்தாணி கொண்டு கொடுத்த ஓவியத்திற்கு என் சிரம் தாழ்ந்த

    வணக்கங்களும் நன்றிகளும். [​IMG]
     
    Last edited: Mar 18, 2011
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Re: கர்ணன் என் காதலன் : 40

    அக்கா,

    இறுதி பகுதி மொத்தமும் நெகிழ்ச்சி மிகுந்து, அப்படியே கண் முன் போர் நிகழ்வதை போல இருந்தது. அருமை அருமை உன் வார்த்தை தேர்வு.:thumbsup

    கர்ணனை அறிந்து இருந்தேன் நீ, அவனைப்பற்றி துவக்கும் முன்
    இன்று கர்ணனை ஆராதிக்கிறேன் அவனை அவனுக்காய்
    அவனது நட்புக்காய், ஈகைக்காய், வீரத்திற்காய், காதலுக்காய், தீரத்திற்காய்.
    கர்ணா உன்னை போல் இனி ஒருவர் மண்ணில் பிறப்பது அறிதடா
    வணங்குகிறேன் :bowdown:bowdown:bowdown
    இறந்தாலும் என்றும் இறவாது இருப்பாய் எங்கள் நெஞ்சங்களில்

    கர்ணனுகாய் வந்த கடைசி கவிதை வெகு அழகு. ரசித்து படித்தேன்.

    நண்பரே..கர்ணன் படம் நன்றாக இருக்கிறது :)

    அனைவரும் அறிந்த விஷயம், தெரிந்த கதை ஆயினும் அதனை நீ சொல்லிய விதம்...அவனுக்காய் வந்த கவிதைகள், இடையே பல நிகழ்வுகளை அழகே தொடுத்து..பல தெரியாத செய்திகளை தெரிய வைத்து, அறிய வைத்து, சந்தேகமாயினும் விடாது, தெளிய வைத்த உனது பண்பிற்கும் அன்பிற்கும், எழுத்திற்கும் :bowdown:bowdown


    கர்ணா இன்று முதல் உன்னையும் உன் காதலியையும் இனி எப்படி காண்பேன்?????
     
    Last edited: Mar 17, 2011
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நா இத்துனை பகுதிகளையும் படிச்சு, புரிஞ்சு பதில் போட நாட்கள் ஆகலாம்.

    வேணி கோச்சுக்காதீங்க - கண்டிப்பா வந்து பதில் போடுவேன்.

    எப்டிங்க இப்டில்லாம் நிறைய விஷயத்தோட எழுதறீங்க?

    நா படிச்சப்ப கூட விஷயமே இல்லாமக் கூட சேத்து,

    இவ்ளோ எழுதி இருக்க மாட்டேன்னு தோணுது. :)
     
  10. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    தவறாம படிச்சுட்டு இருந்தேன். நடுவுல விட்டு போச்சு. முதல்ல இருந்து படிச்சுட்டு உங்களுக்கு எழுதுறேன். மன்னியுங்கள்.
     

Share This Page