1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கடாரம்

Discussion in 'Posts in Regional Languages' started by iniyamalar, Nov 28, 2011.

  1. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    சக ஆண்டு 945
    *(பொ.உ. 1023)

    சூளாமணிப்பன்ம விகாரம், நாகப்பட்டினம்.


    கிருஷ்ணபட்சத்துப் பின்னிரவைத் தாண்டிய வேளை.
    விடியலுக்கு வெகு அருகில் வந்து விட்டபோதுங்கூட இன்று ஏனோ வானம், துளிக்கூட வெளிச்சப்புள்ளிகளற்று இருளில் கரைத்த மை போல் கருமையப்பிக் கிடந்தது. அதற்குச் சரியாய் வெள்ளிகள் கூட கண்ணுக்குப் புலப்படாமல் ஒளிந்து கொண்டிருந்தன.

    சற்றுத்தொலைவில் அரசாங்கச் சாவடியில் வழக்கப்படி நான்காம் சாமம் துவங்கிவிட்டதைச் சொல்லும் மணியோசை கணீரென்று ஒலித்துக் காற்றில் கலந்து வந்து செவியில் நுழைந்தது. தோட்டத்துப் பவளமல்லி வாசனையில் மூழ்கிய கடல்காற்று, மேனியைக் குளிரில் தோய்த்தெடுத்தது.

    இந்த நேரத்தில் இருளையும், குளிரையும் பாராமல் இந்த இளம் துறவி உறக்கமற்று எங்கே போய்க் கொண்டிருக்கிறார்?

    விகாரத்து விடுதிக்குள்ளிருந்து வெளிவந்து, பெரிய பிரகாரத்துள் நுழைந்து, தூண்டாமணி விளக்குகள் ஆங்காங்கு வரைந்து போட்டிருந்த சிறுசிறு வெளிச்ச விரிப்புகளைக் கடந்து செல்லும் அவரது நடையில், கூர்ந்து கவனித்தால் ஒரு சிறு தடுமாற்றம் தெரிகிறதோ?

    நேரே ஆதூரசாலையையும், அதையடுத்த உட்கட்டையும் கடந்து சன்னிதிக்குள் நுழைந்தவர், மண்டியிட்டு அமர்ந்து ஒரு வெண்கலப்பிறையில் கற்பூர தீபத்தை ஏற்றுகிறார். அகிலும் சந்தனமும் கலந்த நறுமணப் புகையையும் சிறிதாய் எழுப்பிவிட்டுப்பின் அமர்ந்த நிலையில் தியானம் மேற்கொள்கிறார். அதிலும் மனச்சாந்தி கிட்டவில்லையோ என்னவோ!

    சிறிது நேரத்தில் திறந்த அவ்விழிகள், எதிரில் இருந்த -எல்லையில்லா இன்பப் பெருக்கை மனதில் எழுப்பக்கூடிய, சாந்தி பொருந்திய- அவலோகிதேஷ்வரர் பொன் திருவுருவைக் ஆஞ்ஞையுடன் பருகியபடி கண்ணீர் சொரிந்து கொண்டிருக்க, உதடுகளோ

    கஹநஸரப்பதித்தேந
    திபேந தமதம்ஸிந
    திலோகதிபம் ஸம்புத்தம்
    புஜயமி தமோநுதம்।” *

    என்று சன்னமான ஒலியில் ஜபித்துக் கொண்டிருந்தன. அந்த கற்பூர தீப ஒளியில் இறைவனின் புன்னகை தந்த சாந்தியும், மந்திர உச்சாடனமும் அந்தத் துறவியின் படபடப்பைச் சற்றேனும் குறைத்திருக்க வேண்டும். இது போதும் என்பது போல அவர் மெதுவாக எழுந்து தன் இருப்பிடம் செல்லத் துணிந்தார்.

    கஜாபதி என்ற இவர் மூன்று திங்கள் வாசம்* முடிந்து, உரிய முறையில் ஜெயபாலராய் மாற்றங்கொண்டு இந்த விகாரத்தின் நிரந்தரவாசியாகி முழுதாய் இரண்டு திங்கள் கூட முடியவில்லை. இன்னும் மனத்துள் அவ்வப்போது சஞ்சலங்கள். ஆனால் அப்படித் தோன்றுவது இயல்பு தான் என்று தலைமை பிக்கு யோகசாரர் கூறியிருந்தார். அதற்காகவே ஜெயபாலரிடம் அவர் ஒரு சிறு உபாயமும் சொல்லியிருந்தார்.

    எப்போது மனச்சாந்தி குலைந்தாலும் யோசிக்காமல் ஒளிபொருந்திய இறைவனிடத்து சென்று மண்டியிட்டு விடு, கால நேரம் பார்க்காதே என்பது தான் அது. அதனால் தான் இப்போது இங்கு நிற்கிறார் ஜெயபாலர்.

    சன்னிதியில் இருந்து வெளிவந்த ஜெயபாலரின் மனதுக்குள் மீண்டும் குளிர் பரவியது. மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சித்தாலும் முடியவில்லை. மீண்டும் மீண்டும் மனதில் இனம் புரியாத பயம் வந்து கவ்விக்கொண்டு தான் இருந்தது.

    முந்தைய நாளிரவே ஏதோத் தப்பு நடக்க இருப்பதாய்த் தோன்றிய எண்ணத்தை, அவரது சஞ்சலத்தை, இன்னதென்று கூறாமலே அறிந்து கொண்ட தலைமை குரு ஒரு குளிர்ந்த புன்னகையை மட்டுமே அவர் பால் புரிந்தார்.

    ”காலை உதயத்தோடு உன் சஞ்சலம் தீர்ந்து விடும், இன்னொரு இனிய நெஞ்சத்துக்கு தீராத சஞ்சலம் பிறந்து விடும்.” என்ற வினோதமான பதிலோடு முடித்துக்கொண்டார் தலைமை பிக்கு யோகசாரர்..

    என்னதான் அவர் சொன்னதை நினைத்துக் கொண்டாலும், ஜெயபாலருக்கு சஞ்சலம் தீராமல் மனது ஒரு பக்கமாய்க் கனத்துக்கொண்டே போனது.

    ரெண்டாம் ஜாமத்தின் அந்திமத்தில் படக்கென்று விழிப்புத் தட்டியதும், எதோ தப்பு நடந்துவிட்டது போன்ற உணர்வு சொல்லாமல் கொள்ளாமல் மனதில் வந்து ஒட்டிக்கொண்டதும் அந்த நடு நிசியில் ஜெயபாலர் யாரிடத்தில் போய் சொல்ல முடியும்?

    இரண்டு மூன்று நாழிகை நேரம் அப்படியும் இப்படியுமாய் புரண்டு புரண்டு படுத்து ஓட்டியவர், பிறகு முடியாமல் எழுந்து விட்டார். மனதைப் புரட்டிய ஒரு விதக் குளிர் உடல் குளிரைப் பொருட்படுத்தவில்லையோ என்னவோ நேரே இங்கே வந்து விட்டார்!

    இதோ! விகாரம் விழித்துக்கொள்ள இன்னும் இரண்டொரு நாழிகை தான். ஆனது ஆகட்டும் என்று எண்ணியபடி நேரே குருவின் இருப்பிடம் நோக்கி நடந்தார் ஜெயபாலர்.

    அதீத சங்கோஜத்துடன் தயங்கித் தயங்கிச் சத்தம் எழுப்பிய ஜெயபாலருக்கு வெகு நேரமாகியும் குருவின் பகுதியில் இருந்து எந்தச் சலனமும் வராமல் போகவே, மீண்டும் பயம் வந்து பீடித்துக்கொண்டது. துடிக்கும் இதயத்துடன் திரை விலக்கிப் பார்த்தார்.

    அங்கே தலைமைத்துறவி யோகசாரரின் எளிமையான வெண்ணிறப் படுக்கையை அவரது குருதி நனைத்துச் சிவப்பாக்கியிருக்க, வலக்கையினுள் இருந்த ஸ்படிக ஜபமாலையில் பாதி உருட்டிய இடத்தில் விரல் நின்று போயிருக்க, நடுவயிற்றில் நடப்பட்டிருந்த குறுவாளைச் சலனமின்றி பார்த்தவண்ணம், புன்னகை உறைந்த நிலையில் இருந்த குருவின் உயிரற்ற உடல் தான் ஜெயபாலரை வரவேற்றது.

    -------------------------------------------------------------

    தொடர்ந்து அத்தியாயம்- 1 படிக்க
    ஐ.எல் கதைகள் பகுதிக்குச் செல்லவும்.

    புத்தகத்தின் முகப்புப்பக்கம் பார்க்க இங்கே சொடுக்கவும்.
     
    Loading...

  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai Iniya,

    Af ter a longtime i am reading historical novels. I loved to read historical novels.I am travelling with each every character and watching their movements and dialogues with the help of my dear IL Ms.Iniyamalar. A good twist and turns and narration of your tamil language hats off. Became slave of your writings my dear.
     
  3. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    dear sreema

    That was a really lovely comment from you. I know I am just a novice in this. But the encouragement you show towards me is really appreciable.
    Thanx a lot.
    Keep coming.
     

Share This Page