1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

Discussion in 'Stories in Regional Languages' started by crvenkatesh1963, Aug 18, 2019.

  1. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    65
    Likes Received:
    126
    Trophy Points:
    83
    Gender:
    Male
    ஊமை எழுத்தே உடலாச்சு மற்றும்
    ஓமென்ற எழுத்தே உயிராச்சு
    ஆமிந் தெழுத்தை யறிந்து கொண்டு விளை
    யாடிக் கும்மி யடியுங்கடி

    கொங்கணச் சித்தர்

    விபூதி வாசம் நாஸியைத் துளைக்க, யுகேந்திரன் சட்டென்று கண்ணைத் திறந்தார். அவர் அருகில் இருந்த ஸீட்டில் காவியுடை அணிந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

    கோவையில் இருந்து சென்னை செல்லும் அந்த பஸ் புறப்படத் தயாராக இருந்தது. கடைசி நேரப் பயணிகள் அவசர அவசரமாக ஏறிக் கொண்டிருந்தார்கள். பெரிய லக்கேஜுகளை பஸ்ஸின் அடியில் உள்ள ஸ்டோரேஜில் வைப்பதும் உள்ளே ஏறுவதும் என்று ஒரே பரபரப்பு. இந்த அமளியில் தான் எப்படி கண் அசந்தோம் என்று யுகேந்திரனுக்கு வியப்பு. எப்படியோ அந்தச் செல்லத் தூக்கமும் கலைந்தது.

    தன் அருகில் அமர்ந்திருந்தவரை பார்த்தார். சுமார் 65 வயது மதிக்கத்தக்க உருவம். காவி குர்தா காவி வேட்டி. நெற்றியில் பட்டையாகத் திருநீறு. கழுத்தில் பல சைஸ்களில் ருத்திராக்ஷ மாலைகள். மடியில் ஒரு ஜோல்னா பை.

    யுகேந்திரன் தன்னைப் பார்ப்பதை பார்த்து அவர் ஒரு புன்னகை பூத்தார். “என் பெயர் சித்ரகுப்தன்” என்றார்.

    யுகேந்திரன் ஒரு நொடி விக்கித்துப் போனார். என்ன பெயர் இது? இதுவரை கேள்விப் பட்டதேயில்லையே! மேல் உலகத்தில் இருப்பதாகச் சொல்லப் படும் சித்ரகுப்தனைத் தவிர வேறு எங்கும் இந்தப் பெயரைக் கேள்விப் பட்டதில்லை. :நான் யுகேந்திரன்” என்றார்.

    “மிகவும் வித்தியாசமான பெயர்” என்றார் காவி மனிதர்.

    “இதை நான்தான் சொல்லவேண்டும்” என்று யுகேந்திரன் புன்னகைத்தார்.

    “என்ன செய்கிறீர்கள் யுகேந்திரன்? தொழிலா இல்லை வேலையா?”

    “நான் பிசினெஸ் தான் செய்கிறேன் ஜி! கன்ஸ்ட்ரக்ஷன் பிசினெஸ். ஒரு பார்ட்னருடன் சேர்ந்து. அவனை பார்ட்னர் என்று சொல்லுவதை விட எனது பால்ய சிநேகிதன் என்று சொல்லலாம்.”

    “ரொம்ப நல்லது. திருமணமாகி விட்டதா? குழந்தைகள் இருக்கிறதா?”

    “திருமணமாகி விட்டது. குழந்தைகள் இல்லை” என்றார் யுகேந்திரன் சுருக்கமாய்.

    “உங்களுக்கு உங்கள் மனைவி மீது மட்டில்லாத அன்பு. அப்படித்தானே?”

    “ ஆமாம் சாமி. (அட, சித்ரகுப்தன் எப்ப சாமி ஆனார்?). அதெப்படி உங்களுக்குத் தெரியும்?’”

    “குழந்தைகள் இல்லை என்று சொன்னபோது உங்கள் முகத்தில் வந்த பாவத்தை வைத்துத் தான் உணர்ந்தேன்”

    அப்போது கண்டக்டர் வந்து டிக்கட் கேட்க இருவரும் மௌனமானார்கள். சிறிது நேரத்தில் பேருந்தும் கிளம்பியது. இரவும் மணி பதினொன்றாயிற்று. யுகேந்திரனுக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. பக்கத்தில் இருந்த சித்ரகுப்தனைப் பார்த்து “ சாமி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கப் போறேன். குட் நைட்” என்றார்.

    “நல்லிரவு” என்று சொல்லிச் சிரித்தது சாமி.

    திடீரென்று பஸ் போட்ட ப்ரேக்கில் யுகேந்திரனுக்கு விழிப்பு வந்தது. மணி ஐந்தரை ஆகியிருந்தது. கிட்டத்தட்ட சென்னையை நெருக்கி விட்டது. சிறிது நிதானித்தப் பிறகு பக்கத்துச் சீட்டைப் பார்த்தார். சாமி இல்லை. இறங்கியிருப்பார் போல. அப்போதுதான் அவர் கண்கள் காலி சீட்டின் கைவைக்கும் இடத்தில் செருகியிருந்த ஒரு சிறிய புத்தகத்தின் மீது விழுந்தது.

    “யார் புத்தகம்? ஒரு வேளை சாமி விட்டிட்டுப் போயிருப்பாரோ?”

    ‘சரி எடுத்துப் பார்ப்போம் என்று இடுக்கில் இருந்த அந்தப் புத்தகத்தை வெளியே எடுத்தார். சுமார் இருவது பக்கங்கள் கொண்ட புத்தகம் போல இருந்தது. வெள்ளைக் காகிதத்தில் எழுதி பசையிட்டு ஒட்டப்பட்டிருந்தது. அட்டையும் ஒரு வெள்ளைப் பேப்பர் தான். அட்டையின் நட்டநடுவில் அந்தப் புத்தகத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரைப் பார்த்ததும் யுகேந்திரனுக்கு அந்த அதிகாலைக் குளிரிலும் வியர்த்தது.

    அதில் ‘ யுகேத்திரனாகிய நான்” என்று எழுதப்பட்டிருந்தது.

    என் பெயரில் ஒரு புத்தகமா? அதுவும் அந்தச் சாமிதான் விட்டுட்டு போயிருக்கணும். அவர்கிட்ட என் பேர் போட்ட புத்தகம் எப்படி? யார் அவர்?

    இப்படி அவர் எண்ணங்கள் தறிகெட்டு ஓடின. சரி எதற்கும் இருக்கட்டும் என்று அந்தப் புத்தகத்தை எடுத்துத் தனது பெட்டியில் வைத்துக் கொண்டார். பிறகு படிக்கலாம் என்று.

    சரியாக ஆறு மணிக்குப் பெருங்களத்தூர் வந்துசேர்ந்தது பஸ். அவர் அங்கேயே இறங்கிக் கொண்டார். தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் தான் வீடு. ஒரு கால் டாக்ஸி பிடித்தார்.

    சரியாக அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார். வீடு பூட்டியிருந்தது. ஸ்னேஹா எங்கே போயிருப்பாள்? அதுவும் இவ்வளவு அதிகாலையில்? அலுத்துக்கொண்டே தன் பையில் இருந்த சாவியைத் தேடியெடுத்துக் கதவைத் திறந்து உள்ளே சென்றார்.

    வீடு புழங்கி ஒரு வாரம் ஆனது போலத் தோன்றியது. சட்டென்று ஒரு கோவம் தொற்றிக்கொண்டது. எங்க போனா?

    மொபைல் எடுத்து ஸ்னேஹா நம்பர் அழைத்தார். ஒரு ஐந்து ரிங் சென்றதும் ஸ்னேஹா எடுத்தாள் .

    " டியர்! எங்க இருக்கீங்க? வந்துட்டீங்களா?"

    "நீ எங்க இருக்க? வீட்டப் பூட்டிட்டு எங்க போயிட்ட?"

    "இல்லைங்க. எங்க ராமாயி பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் ஊருக்கு வந்திருக்கேன். சீக்கிரம் கிளம்பி வந்துடறேன். இன்னிக்கு மார்னிங் ப்ரேக்பாஸ்ட் மதியம் லஞ்ச் மட்டும் வெளில பாத்துக்கிடுங்க"

    வெறுப்புடன் கால் கட் செய்து போனை சென்டர் டேபிள் மேல் வைத்தார். பிறகு ஏதோ தோன்றியவராக போனை எடுத்து ஸ்விக்கி மூலம் அருகில் இருந்த ஹோட்டலிலிருந்து டிபன் ஆர்டர் செய்தார்.

    அவர் குளித்துவிட்டு வருவதற்கும் டிபன் டெலிவரி ஆவதற்கும் சரியாக இருந்தது. பசி வேகம் தாளாது உடனடியாக தின்று முடித்தார்.

    கை கழுவி சேரில் உட்காரப் போகும்போதுதான் அந்தப் புத்தகத்தின் நினைவு வந்தது.

    தன் பெட்டியிலிருந்து அதை எடுத்தார். மீண்டும் ஒரு முறை அதன் தலைப்பு அவரைக் குழப்பத்துக்கும் வியப்புக்கும் உள்ளாக்கியது. என் பெயர் எப்படி என்று யோசித்தவாறே முதல் பக்கத்தைப் புரட்டினார்.

    முதல் இரண்டு வரிகள் படிக்க ஆரம்பித்ததுமே அவர் கண்கள் மேலும் வியப்பில் விரிந்தன.

    ஆமாம் அது அவரது கதைதான். அவரது வாழ்க்கைக் கதைதான். யுகேந்திரனுக்கு வியர்த்தது. எழுந்து fan வேகத்தை அதிகப்படுத்திவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தார்.

    அவர் பிறந்ததில் இருந்து, அவர் படிப்பு, அவர் குடும்பம் என்று அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் துல்லியமாக எழுதப்பட்டிருந்தது. ச்நேஹாவுடன் திருமணம், நண்பனுடன் பிசினஸ் வரை வந்த கதை சட்டென்று நின்றது. கீழே இரண்டு லைன் விட்டு " இதுவரை எழுதியது உனக்குத் தெரிந்தது. இனிமேல் வருவது உனக்குத் தெரியாதது. விருப்பமிருந்தால் படிக்கவும்" என்று எழுதியிருந்தது.

    யுகேந்திரனுக்கு கொஞ்சம் போல இடது மார்பு வலிப்பது போலிருந்தது. பரபரப்புடன் அடுத்தப் பக்கத்தைப் புரட்டி படிக்க ஆரம்பித்தார். படிக்க படிக்க அவர் முகம் சிவந்தது. கண்கள் விரிந்தன. நெற்றியோரம் வியர்வை வெள்ளம். உங்களை மேலும் தவிக்க விடாமல் அதில் எழுதியிருந்ததின் சாராம்சத்தைச் சொல்லிவிடுகிறேன்.

    அதில் எழுதியிருந்ததாவது : ச்நேஹாவுக்கும் அவர் நண்பனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், அது இப்போது முற்றி ஒருவர் மற்றவரைப் பிரித்திருக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும் அதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அதற்குத் தடையாக யுகேந்திரன் இருக்கும் பட்சத்தில் அவரைக் கொன்றுவிடப் போவதாகவும் இப்போதும் கூட பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என்று பொய் சொல்லி இருவரும் அவர் நண்பன் வீட்டில் ஆனந்தமாக இருப்பதாகவும் எழுதியிருந்தது.

    அதற்கு பிறகு பக்கங்கள் காலியாக இருந்தன. யுகேந்திரனுக்கு தலை வெடித்துவிடும் போல இருந்தது. திடீரென்று காதோரம் " இதுக்கு மேல என்னன்னு எனக்குத் தெரியல. நீ தான் சொல்லணும்" என்று சித்ரகுப்தனின் குரல் கேட்டது.

    யுகேந்திரன் ஒரு தீர்மானத்தோடு அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். காரை ஸ்டார்ட் செய்து அவர் நண்பன் மற்றும் பிசினஸ் பார்ட்னர் வெங்கட் குடியிருந்த அடையார் பக்கம் செலுத்தினார். அரை மணியில் சென்றடைந்தார்.

    மிகவும் கோபமாக வேகமாக நடந்து அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார். வெளியே விடப்பட்டிருந்த ச்நேஹாவின் செருப்பு அவர் கண்ணில் பட்டது. அவர் கோபம் இன்னும் அதிகமானது.

    இரண்டாம் முறை பெல்லை அழுத்த எத்தனிக்கும் போது கதவு திறந்தது. திறந்த கதவுக்குப் பின்னால் அவர் பார்ட்னர் வெங்கட். அவனுக்கும் பின்னால் அவர் மனைவி ஸ்னேஹா. அப்போதுதான் முத்தமிட்டு பிரிந்திருப்பார்கள் போல இருந்தது. இவரைக் கண்ட அந்த இருவரின் கண்களிலும் பயம் குழப்பம் கலந்த ஒரு expression

    அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் யுகேந்திரன் கண்கள் வெங்கட் கையில் இருந்த ஒரு புத்தகமும் ஸ்னேஹா கையில் இருந்த ரிவால்வரும் பார்க்கத்தவறவில்லை

    வெங்கட் கையில் இருந்த புத்தகத்தில் "வெங்கடேசனாகிய நான்" என்று எழுதியிருந்ததும் ஸ்னேஹா கையில் இருந்த ரிவால்வர் அவரை நோக்கி உயர்ந்ததையும் கவனிக்கத் தவறவில்லை.

    வீயார்
     
    jillcastle and SpringB like this.
    Loading...

  2. jillcastle

    jillcastle Gold IL'ite

    Messages:
    476
    Likes Received:
    532
    Trophy Points:
    173
    Gender:
    Female
    பாராட்ட வார்த்தைகள் இல்லை :clap2::clap2:
     
    crvenkatesh1963 likes this.

Share This Page