1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உளதோ, இலதோ ?

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 3, 2018.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    குறிப்பு: நீ....ண்ட பதிவு, வாசகரின் பொறுமைக்கு மிக்க நன்றி ! :)

    மரணம் என்பது உள்ளவரை
    இறைமைக்கென்றும் மரணமில்லை !

    ஜனனம் என்பதுத் தொடர்நிகழ்வு
    விடுதலையடைவது இறுதிநிலை !

    எனக்கேன் இப்படி ஆனதென
    வினவுதலனைவரின் மனக்கவலை !

    எனக்கு மட்டுமிது நடக்குதென்றால்,
    சொல்பவர்க்கன்றோ அறிவுக்குறை !

    அடுத்தவன் வாழ்வதைப் பொறுக்காமல்,
    கெடுதலிழைத்தல் குணநலனோ ?

    விடுத்தவனிருக்க அம்பை நோதல்,
    மனிதருக்கேயுள்ள மனநிலையோ ?

    காரணம் எதுவென்றுத் தெரியாமல்,
    அனுதினமிங்கேக் குழம்புகிறார் !

    ஊழ்வினை இதுவெனச் சொன்னாலோ,
    பொய்யுரையதுவென வாதிடுவார் !

    நல்வினை சுகங்கள் விளைவித்தால்,
    நன்மையென்றேயதை ஏற்றிடுவார் !

    கேள்வியெதும் அங்குக் கேட்பதில்லை,
    நானடைந்தேனென்றே மார்த்தட்டுவார் !

    தீவினை உறுத்து வந்தூட்டுதென்றால்,
    விதிப்பிழையென்றேப் புலம்பிடுவார் !

    தனக்கிப்படிச் செயல் தகாதென்றே,
    தெய்வத்தையவரும் நிந்திப்பார் !

    தமக்குவமை இல்லாதவரை இவர்,
    இல்லையென்றுறுதியாய்ச் சொல்லிடுவார் !

    உண்மையில் நடப்பது என்னவென்று,
    சிந்திக்கவுமிவர் மறுத்திடுவார் !

    நடப்பதெல்லாம் நம் நன்மைக்கென்று,
    ஆன்றோரருளிய சான்றாகும் !

    உணர்வுகளால் உந்தப் படுவதனை
    நீக்குதலென்றும் நலமாகும் !

    விருப்பமும் வெறுப்பும் உந்துதலால்
    கருமவினைகள் தொடர்ந்திடுமே !

    கருமம் மேற்கொள்ளும் வழிவகையால்
    இருவினை நம்மையண்டிடுமே !

    ஏதொன்றும் செய்யாதிருந்தால் அதும்
    தீதென்றுரைத்திடும் தருமமுமே !

    என்னயிது இதையென் செய்தலென்று
    எண்ணிடப் பாதையறிவுறுமே !

    வினைச்செயலால் வரும் விளைவுகளால்
    இன்பந்துன்பம் இரண்டுமுண்டு !

    எதுவரினும் மனம் சமநிலையில்
    ஏற்றிடில் பிழையொன்றுமண்டாது !

    கூர்ந்தமதி, அன்புசான்ற மொழி,
    நேர்ப்படத்தேர்ந்த வாழ்க்கைநெறி,

    சீர்ப்பட பிறர்க்கென்றும் சிந்தித்து,
    செயலாற்றல் நல்வழியாகும் !

    இத்தனையும் செயல் அரிதுயென்றால்,
    இறைமையையுணர்தலும் கடிதாகும் !

    எண்ணம் சொல் செயலிவற்றாலே,
    வினையாற்றுபவர் மானுடரன்றோ ?

    திண்ணமாய்ச் சொல்லிட ஆகிடுமோ,
    அதிலொன்றிலும் தீமையில்லையென்று ?

    ஒருவர்க்கு நன்மையை அளிப்பதுவே,
    அடுத்தவர்க்கங்கேத் தீதிழைக்கும் !

    ஏற்பது சற்றேக் கடிதெனினும்,
    விதியென்பதிதுவே மாற்றமில்லை !

    வினைக்கெதிர் வினையொன் றுண்டென்பது,
    அறிவியலுலகிலும் இருக்குதன்றோ ?

    அடிமுடியற்றவர்ப் படைத்த எந்த
    உயிர்களுக்குமிது பொருந்துமன்றோ ?

    தொடரும் கர்மவினைக் கணக்கைக்,
    கடப்பதொன்றும் வெகுசுலபமில்லை !

    எல்லாம் நம்வினைச் செயலென்றே
    அமைதியுற்றாலொன்றும் கடினமில்லை !

    ஆழ்ந்தொரு அமைதியில் மூழ்கிவிட்டால்
    வீழ்வதில்லை, ஊழ்ப்பயனுமில்லை !

    வினைக்கடல் கடந்திடும் தோணியொன்றேக்,
    கடவுளென்றுமதைக் கூறிடலாம் !

    இறைமையென் றொன்றுத் தனித்துயில்லை,
    நமக்குள் நம்முடனிருப்பதது !

    இறைவனும் நாமும் ஒன்றுயென்றால்,
    வெளித்தேடல் மட்டுமாகாதே !

    தேடலைக் கொஞ்சம் உள்நோக்கில்,
    நாமாயிருப்பதும் தெளிந்திடுமே !

    இறையுறை இடமென்று ஏற்பட்டவை,
    சிந்தையொருமிக்கச் செய்தவையே !

    உருவமொன்றிலதைத் தேடுதலும்- உள்
    உணர்வினில் காண்பதிரண்டுமொன்றே !

    நீக்கமறயெங்கும் நிறையும் ஒன்று,
    இல்லாதாயிடமென ஏதுமுண்டோ ?

    எண்ணம்,சொல்,செயலெதுவெனினும்
    சத்தியநோக்கே இறையாகும் !

    மனத்திற்குள்ளே ஒரு நீதிக்குரல்,
    ஒலிக்கின்றதேயது இறையாகும் !

    மனமறிந்துப் பிறவுயிர்க்குத் தீங்கு,
    இழைக்காதிருத்தல் இறையாகும் !

    அறியாமல் செய்த பிழையெனினும்,
    மனம்வாடல் நல்லிறையாகும் !

    பிறர்த் தமக்கிழைக்கும் இருவினையை,
    சமநோக்கல் இறைகுணமே !

    அவருக்கும் நன்மை புரிவதுதான்,
    இறைமையினுயர்ந்த வெளிப்பாடே !

    நோதலும் தணிதலும் ஒன்றுயென்றே
    நோக்கிடுதல் நல்லிறையாமே !

    எச்சூழலிலும் தன்னிலை இழக்கா
    உறுதியதும் இறைநிலையே !

    வந்ததை வருவதை அமைதியுடன்
    அணுகுதலும் இறைநிலையே !

    நடப்பதெல்லாம் நாடகம் என்றே,
    உணர்ந்திடுதல் இறைநிலையே !

    வேடமேற்பதும் வேடிக்கைப் பார்ப்பதும்
    வாடிக்கையான ஒன்றாகும் !

    காட்சிக்கு ஏற்றக் காரியங்கள்,
    புரிந்தமைதல் இறைநிலையே !

    போற்றலும் தூற்றுலும் ஏதுமின்றி,
    நடப்பதையேற்றல் இறைநிலையே !

    துன்பமுமின்பமும் காண்பதும் கடப்பதும்
    கடினந்தான்,மறுப்பதற்கில்லை !

    அனுபவங்கள் நிரந்தரமில்லை-இதை
    அறிந்தாலொன்றும் வருத்தமில்லை !

    வெவ்வேறு வகை அனுபவமாய்,
    நம்முடனிருப்பது இறையாகும் !

    அவரவர் அடையும் அனுபவத்தால்
    உருவங்கொள்வது இறையாகும் !

    இதுயிப்படித்தான் இருக்குமென்று அதை,
    வரையறுத்தல் பெரும்பிழையாகும் !

    இறைவனைப் பற்றி நாமறிவதெல்லாம்,
    அறிவதரிதென்ற ஒன்றினையே !

    ஆயிரம் சாத்திரம் கற்றாலும்,
    அடக்ககுணம் இறைநிலையே !

    அறிவியலும் கற்றுத் தெளிந்திடிலும்
    அடிப்படையெதிலும் இறையாகும் !

    ஆக்கல் காத்தல் அழித்தலென்னும்
    முக்குணமுரைப்பது இறையாகும் !

    இடையே மறைத்தலும் அருளலென்றும்
    விடையாயிருப்பதும் இறையாகும் !

    ஆகியது பலதுள்ளதென்றால் அவை
    ஆக்கியதுமொன்று உளதாகும் !

    ஆகியவையதைத் தாம் மறந்தே
    இல்லையென்றாலும் அதுயேற்கும் !

    உண்டில்லையென்று சொல்ல வைத்தே
    நமையியக்குவதும் அவ்விறையாகும் !

    உண்டெனிலுயர்விலை இல்லெனில் தாழ்விலை,
    அதிசயமிதுவே இறையாகும் !

    விண்டவர்க்கண்டிலைக் கண்டவர் விண்டிலை
    ஆண்டவனுண்மை இதுவாகும் !

    அண்டத்துள்ளது பிண்டத்து ளுண்டென,
    உணர்ந்தாலென்றும் ஆனந்தமே !

    Regards,

    Pavithra
     
    Last edited: Oct 3, 2018
    jskls, Rrg, periamma and 2 others like this.
  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ஆத்தடி நா வரல இந்த வெளாட்டுக்கு

    சரி வந்தது வந்துட்டேன், கொஞ்சமா வம்பு வள த் துட்டு ஓடி விடுகிறேன் :)

    இரு வரிகளை மாற்றி - டீசல் பெட்ரோல் விலை உயர்வை வைத்து :

    உண்டெனிலுயர்விலை இல்லெனில் தவழும் நிலை,
    அராஜக மிதுவே அரசாகும் !
     
    jskls likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா நீங்கள் இந்த யுகத்தில் பிறக்க வேண்டிய பிறவி அல்ல .இந்த சிறிய வயதில் எத்தனை ஞானம் .இறையின் தன்மையை நன்கு உணர்ந்து எழுதிய கவிதை .

    'கேள்வியெதும் அங்குக் கேட்பதில்லை,
    நானடைந்தேனென்றே மார்த்தட்டுவார் !'

    இந்த வரிகள் தன்னை முன்னிறுத்தி கொள்ள நினைக்கும் மனிதர்களின் நிலையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது .
     
    jskls and GoogleGlass like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    GG, நீண்ட பதிவைப் படிப்பதற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி ! உங்கள் நகைச்சுவை உணர்வை இரசித்தாலும் வம்பை மேலும் வளர்க்க விருப்பமில்லை. எல்லாம் நன்மைக்கே ! :)
     
    GoogleGlass likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா, நீங்கள் சொல்லியிருக்கும் மிகப்பெரிய வார்த்தைகளுக்கு நான் சற்றும் பொருத்தமானவளில்லை. முற்பிறவிகளின் நல்வினையோ என்னவோ இறையருளால், பெரியோர் ஆசியால், சத்சங்கம் என்றறியப்படும் நல்லோர் உறவினால், சற்றேனும் ஆன்ம தேடலில் மனம் செல்கிறது. அதன் வழியில் சென்றும், எனக்கு இந்தப்பிறவியில் ஏற்படுகின்ற அனுபவங்களின் பயனாய்ப் பெறும் பட்டறிவைக் கொண்டும், விருப்பு வெறுப்புகள் என்னை உந்தாத, மிகச்சிறிதாகவே அமையும் பொழுதுகளில்,திரும்பத் திரும்ப எனக்குள் ஒலிக்கும் குரலினால் நானுறும் தெளிவையே அவ்வப்போதில் சொற்களில் வடிக்கிறேன்,அவற்றில் சிலவற்றை சிலவருடங்களாக வெளியுலகின் பார்வைக்கும், கவனத்திற்குமென இவ்விடம் பதிகிறேன். ஆயினும் இந்திரியங்கள் எனப்படும் பெரும்புலன்கள் என்னை ஆட்டுவிக்கும் பெரும்பான்மையான பொழுதுகளில் ஆன்மாவின் உண்மை நிலையை(எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும் சதானந்த நிலை) இழந்து தவிக்கிறேன். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் - இந்த இழுக்குகளில் சிக்குண்டு வினைமேற்கொள்கிறேன். பிறகு அதற்காக மன வருத்தமும் கொள்கிறேன்.

    இப்படியான அஞ்ஞானத்தோடே, அறிவீனத்தோடே என் வாழ்க்கைப் பயணம் செல்கிறது. எண்ணத்தில் தோன்றுவதை சொற்படுத்துவது, பிறருக்காக இல்லை, என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் வகையாகவே. "அதைத் தனிப்பட்ட முறையில் செய்வதுதானே, பிறகேன் இங்கேப் பதிய வேண்டும்?" என வினவினால் அதற்கென் விடை- என் தனிப்பட்ட சிந்தனை வேறு யாருக்கேனும் சிறிதேனும் உதவினால் மகிழ்ச்சி என்பதே ! ஒரு வேளை இது எனக்கானக் கடைத்தேற்றமாகக் கூட இருக்கலாம், நானறியேன் பராபரமே ! அமைதியளிக்கும் ஆன்மீகத்தில் என்னைத் தகவமைத்துக் கொள்ளும் முயற்சி என்றைக்கு முழுமையான வெற்றியுறுகின்றதோ, அப்போது என் நீள்நெடும் பிறவிப் பயணமும் நிறைவுறுமென்று எனக்குத் தோன்றுகின்றது. அதுவரை அறத்தின் இலக்கணத்தைக் கூடியவரைக் கடைப்பிடித்துக் கடமையாற்றி, இல்லறத்தின் நலம் பேணித் தொடர்ந்து அமைதியாக வாழ்வதையே விரும்புகின்றேன். உங்கள் அன்பிற்கும், ஆசிக்கும் என் பணிவான நன்றி !:)
     
    jskls, GoogleGlass and kaniths like this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அடக்க மது அப்துல் கலா மினைப் போல்; தமிழோ கற்கண்டு, வாழ்க நின் புலமை
     
    jskls, periamma and kaniths like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா இறைவழிபாட்டில் நாட்டம் கொள்வதற்கும் ஒரு மனப்பக்குவம் வேண்டும் .அது உங்களுக்கு இந்த இளம் வயதில் வந்தது உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு கொடுத்த வரம் .தாங்கள் செய்த புண்ணியம் .இதை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் .அடுத்து அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் இந்த இத்தகாத செயல்களில் சிக்குண்டு தவிப்பதாக சொல்கிறீர்கள் .இவை மனிதனுக்கு உரிய இயற்கை குணம் .சிக்குண்டாலும் அதில் இருந்து மீண்டு வெளி வந்து தவறை உணரும் போது புடம் போட்ட தங்கமாக மிளிர்வீர்கள் .தங்கத்தை நெருப்பில் வாட்டி ,அடித்து அடித்து அழகிய ஆபரணம் உருவாக்குகிறார்கள் .கல்லை உளியால் செதுக்கினால்
    தான் அழகிய சிலை கிடைக்கும்.அது போல் அனுபவங்கள் ஒரு மனிதனை உத்தமனாக்குகிறது .

    துறவறம் மேற்கொண்டு ஆன்மீகத்தில் ஈடுபடுவது ஒரு வழி .இல்லறத்தை கடை பிடித்து கொண்டு ஆன்மீ கத்தில் ஈடுபடுவது மிக கடினம் .அதனால் மீண்டும் சொல்கிறேன் நீங்கள் ஒரு ஞானியே .வாழ்க வளமுடன் .
     
    jskls, GoogleGlass and kaniths like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    :facepalm: (Thanks for this icon idea, @kaniths )
    உங்கள் சொற்கள் மிகுந்த ஆறுதலைத் தருகின்றன, பெரியம்மா ! எனக்கு மட்டுமல்ல, பொதுவாகவே இளைய தலைமுறையினருக்கு உங்களின் அநுபவபூர்வமான விளக்கம் மிகுந்த பயனளிக்குமென்று எண்ணுகிறேன். மிக்க நன்றி !
     
    jskls and GoogleGlass like this.
  9. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    வெகு சிறப்பான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    RRG
     
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கீதை படிக்க நேரமற்றோர் தங்கள் கவிதையை படிக்கலாம். இறைதன்மையின் சிறப்பு நன்று.
     

Share This Page