1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனிய உளவாக ...

Discussion in 'Posts in Regional Languages' started by PavithraS, Apr 12, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வாசகருக்கு வணக்கம் !

    தமது தாய்மொழி (தாய் மொழி !) என்றத் திரியின் மூலம் , இளந்தலைமுறையினர் தமிழ் கற்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான அருமையான எளிமையான வழிகளையும் எடுத்துக் கூறி நம்மையெல்லாம் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டிய திருமதி சுமதி சுந்தர் @krishnaamma அவர்களுக்கு மிக்க நன்றி !

    என்னை இந்தப் பதிவை இங்கு போடத் தூண்டியது , தனிப்பட்ட முறையில் தனது ஹைக்கூ திரியில் தோழி @kaniths விடுத்த வேண்டுகோளின் ஒரு சிறிய அம்சமான , "ஒரு திருக்குறளாவதுக் கற்றுக்கொடுங்கள்" என்ற நேர்மையான அழைப்புத் தான். அதற்கு அவருக்கு என் நன்றி. அவர் எண்ணுவது போல் நான் கற்றுத்தரக் கூடிய திறமை வாய்த்தவளில்லை . ஊர்கூடி இழுத்துத் தேரோடப் பண்ண என்னாலான சிறு உதவி தான் செய்ய முடியும்.

    ஆயினும் 'திருக்குறள்' என்று அவர் குறிப்பிட்டது என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது. என்னால் இயன்ற வரை சரியாகச் செய்ய முயற்சித்திருக்கிறேன். தவறுகள் இருப்பின் தயை கூர்ந்து மன்னித்து விடுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். வாசித்தப்பின் உங்களின் ஒத்தக் கருத்துகளையும் , மாற்றுச் சிந்தனைகளையும், பின்னூட்டமாக இங்கேப் பதிந்தீர்களேயானால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும், எனக்கும் மகிழ்ச்சியாயிருக்கும். இப்பதிவை உங்கள் நேரம் செலவிட்டு வாசிப்பதற்கும், பின்னூட்டமிடுவதற்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன் ! இனி மேலே செல்வோம் ...


    நான் பள்ளி மாணவியாக இருந்த சமயம்,ஒரு நாள் எங்கள் தமிழாசிரியர் என்னை வழிபாட்டுக் கூட்டத்தில் 'இன்றைய சிந்தனைக்கு' என்ற பகுதியில் பேசப் பணித்தார் . அன்று எனக்கு மிகவும் பிடித்தமான இந்தக் குறட்பாவைத்தான் கூறி விளக்கமளித்தேன். அந்த நினைவு இன்றும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது.


    (திருக்குறள் அறத்துப்பால் , அதிகாரம் : இனியவை கூறல் , குறள் எண் 100 )

    இனிய வுளவாக வின்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.


    இரண்டு வரிகளில், ஏழு சீர்களில் (சொற்கள்) அமைந்துள்ள இக்குறள் வெண்பாவினை, ( யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் , திருக்குறள் குறள் வெண்பா வகையில் எழுதப்பட்ட இலக்கியம்) சீர் பிரித்து எழுதினால் கிடைப்பது ,

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனி இருப்பக் காய் கவர்ந்தற்று .


    இதற்கான பொருள்

    இனிய உளவாக இன்னாத கூறல்= அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறல்;

    கனி இருப்பக் காய் கவர்ந்தற்று= இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.


    பொருள் விளக்கம்
    என்று கூறினால், ஒவ்வொருவர் தமது பார்வையில் , எண்ணத்தில் , எப்படித் தோன்றுகிறதோ அப்படி விரிவாகச் சொல்லலாம். எனக்குத் தோன்றியதை இங்கேப் பகிர்ந்து கொள்கிறேன். தமிழறிந்த நற்சான்றோர்கள் குற்றம் பொறுக்க வேண்டுகிறேன்.

    ஒருவர் எந்த மொழி பேசுபவராயிருப்பினும் , அந்த மொழியில் பிறருடன் அளவளாவவும், தன் கருத்தைத் தெளிவாகக் கூறவும், பிறர் கருத்தை அறியவும், பயன்படுத்தக் கூடிய சொற்கள் நிறைய இருக்கும். அவற்றுள் இதமாகப் பேசி, தானும் மகிழ்ந்து, பிறரையும் மதித்துப் பேசக் கூடிய வகையில் நற் சொற்கள் நிறையவே இருக்கும்.அவற்றுடன் கடினமான உணர்வுடைய, தடித்துப் பேசக்கூடிய, கடுஞ்சொற்களும் சேர்ந்தே இருக்கும். அந்த மொழியைப் பேசக்கூடியவருக்கு இந்த இரண்டு வகையான சொற்களும் தெரிந்தே இருக்கும்.

    இப்படியான சூழலில், ஒருவர் தான் பேசக் கையாளும் சொற்களின் தன்மையை வைத்துத் தான் , அவர் ஆழ்ந்த அறிவும், அறமும் ,அன்பும் நிறைந்த நற்பண்பாளரா அல்லது அவசரமும், ஆணவமும், அறிவீனமும் இணைந்த மூடரா என்பதை மற்றவர்கள் முடிவு செய்வார்கள்.

    ஒரு மொழி என்பதைக் காயும் கனியும் விளைகின்ற ஒரு மரத்தோடு ஒப்பீடு செய்தால் , அதிலுள்ள அன்பு நிறைந்த சொற்கள் மரத்தில் விளைந்திருக்கக்கூடிய , பசியைப் போக்குகின்ற , இனிய சுவையுடைய கனிகளுக்குச் (பழங்களுக்குச்) சமமாகும். அதே மொழியில் இருக்கக்கூடிய , அன்பற்ற, மொழிவதற்கும் , செவிமடுப்பதற்கும் கடினமாகவும் , துயரத்தைத் தரக்கூடியதுமான கடுஞ்சொற்கள் , அதே மரத்தில் இருக்கக் கூடிய , பசிக்குதவாத ,பக்குவப்படாத , கசப்புணர்ச்சியை மட்டுமே விளைவிக்கக்கூடிய காய்களுக்குச் சமமாகும் .

    எனவே அன்பும் , பண்பும் வெளிப்படுத்தும் சொற்கள் அதை மொழிபவருக்கும், எதிர் இருந்துக் கேட்டு நுகர்பவருக்கும் என அனைத்துத் தரப்பிற்குமே உவப்பானவை, அறிவுப் பசியைத் தணிக்கும் மொழியாகிய மரத்தின் நற்கனிகள் போன்றவை. அன்பும், பண்பும் , இதமும் அற்றதானக் கடுஞ்சொற்கள் , மொழிவதற்கும், செவிமடுப்பதற்கும் கடுமையாக இருப்பதோடு , அவை அறிவுப்பசியைத் தீர்ப்பதற்கும் உதவாத பயனற்றக் காய்கள் போன்றதாகும் .

    தனக்கெடுத்தப் பசியையோ அல்லது தன்னை அண்டியவனுடைய பசியையோ போக்க ஒரு மனிதன் எண்ணினால் , தன் முன் இருக்கும் மரத்தில் விளைந்திருக்கும் சுவை மிகுந்தக் கனிகளைப் பறித்து உண்பதும் , உண்பிப்பதும் தானே அறிவார்ந்த செயல் ? அதை விடுத்து, பசியைப் போக்காது, மேலும் கசக்கும் என்று தெரிந்தும், காய்களைப் பறித்து உண்ணவும் உண்பிக்கவும் செய்வானேயானால் அது அறிவீனம் அல்லவோ ?

    ஒரு மரத்தையும் , அதன் காய் கனிகளையும் உவமைப் பொருட்களாக எடுத்துக்கொண்டு , இனிய சொற்களைப் பேசுவதே ஒரு மனிதனை அறிவாளியாகக் காட்டும் என்பதையும் , அதற்கு மாறாக, ஒருவன் கடுஞ்சொற்களைப் பேசுவானேயானால் அவனை உலகம் அறிவற்ற மூடனாகவேக் கருதும் என்பதையும் எவ்வளவு அழகாக உணர்த்துகிறார் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் !

    இங்கே வேறு ஒரு கோணத்திலும் பொருள் விளக்கிக் கொள்ளலாம் . ஒரு மொழியிலே எப்படி நற்சொற் களும், தீச்சொற்களும் உள்ளதோ அப்படித் தான் ஒரு மரமென்று இருந்தால் அதிலே காயும் இருக்கும், கனியுமிருக்கும். பிஞ்சிலே பழுப்பது சிலவே ஆயினும் பெரும்பான்மையானவைக் காயாயிருந்துதான் கனியும். பக்குவப்பட்டால் தான் காய் கனியாக மாறும் . அது போலவே ஒரு மனிதர் மனப்பக்குவம் பெறாதவரை அவர் பேசும் சொற்கள் மற்றவர்களுக்கு மனக்கசப்பைத் தரக்கூடிய காய் நிலையிலேயே இருக்கும் . அவரே மனப்பக்குவமடைந்து விட்டால், அவர் மனங்கனிந்து நவிலும் சொற்கள் , மரத்திலுள்ள நற்கனிகள் எப்படி இனித்து நுகர்பவர்க்கு இன்பம் பயக்கின்றனவோ, அது போலக் கேட்பவர்களின் மனதிற்கு இதமளித்து நன்மை பயக்கும். பயனுடைய சொற்களைப் பேசுவதே மொழியறிவின் நோக்கமல்லவா ?

    மேலும் இங்கே ஆழ்ந்து சிந்தனை செய்தால், இன்னும் சில விளக்கங்கள் பெறலாம். ஒரு மரத்திலே காயாயிருப்பது தான், தக்கப் பருவத்தில் கனியாய் உருப் பெறுகின்றது. ஆரம்பக் கட்டத்தில் காயாய் இருப்பது அதன் குறையல்ல .ஆனால் பருவத்தேக் கனியாமல் , யாருக்கும் உதவாமல், காயாகவே வெம்பி விட்டால், அது தான் குறை.

    அதைப் போலவே ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் ஆரம்பத்தில் மரத்திலுள்ளக் காயைப் போலக் கசந்து பிறர்குதவாதத் தன்மையனாக, மனது பக்குவப்படாமல் வாழ்வது கூடப் பெருங்குற்றமில்லை , மன்னிக்கப்படக்கூடியதே.

    ஆனால், அதே மனிதனே தன் காலம் செல்லச் செல்லத் தானாகவோ அல்லது அனுபவமெனும் (தடி) ஆசானிடம் (அடி) பாடம் கற்றுத் தெளிந்தோ மனக்காயானது மெல்லக் கனிந்து பிறர்க்கு நன்மை பயக்க வேண்டிய நேரத்திலும், மனப்பக்குவமேற்படாமலே இறந்து பட்டால், அது தான் அவன் செய்யும் பாவமாகிறது, மன்னிப்புமற்றதாகிறது.


    குழந்தையாக இருக்கும் போது செய்யும் தவறுகள், ஒரு மனிதனின் பாவக் கணக்கில் சேராது என்பதை பெரும்பான்மையான மதக் கோட்பாடுகளிலும் காண முடிவதையும் இங்கேத் தொடர்பு படுத்திப்பார்க்கலாம்.

    ஒரு குறள் தான், அதற்கு எப்படி எல்லாம் விளக்கம் எடுத்துக் கொள்ள முடிகிறது பாருங்கள். இதுவே நம் இனிமைத் தமிழ் மொழியின் அழகு, நம் பழந்தமிழ் இலக்கியவியலாளர்களின் நுண்மையான அறிவின் வெளிப்பாடு !

    (முதற் பகுதி நிறைவு, அடுத்தப் பகுதியைக் கீழே காணலாம்)


     
    suryakala, jskls, periamma and 2 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    (மேற்பகுதியின் தொடர்ச்சி - நிறைவுப் பகுதி)

    நம் தமிழ் மொழியில் தான் இது போன்ற இலக்கிய நயங்களும் , கருத்துச் செறிவு மிக்கச் செய்யுட்களும் எத்தனை எத்தனை ! அவ்வளவும் அள்ள அள்ளக் குறையாத செல்வங்கள் ! பருகப் பருகத் திகட்டாத அமுத பானங்கள் !
    பண்டையத் தமிழ் இலக்கியங்கள், புலவர்கள் தவிர்த்தும் பார்த்தால், இடைக்காலத்தில், தங்களது மதத்தைப் பரப்புவதற்காக தமிழகம் வந்த எத்தனையோ ஐரோப்பியக் கிறித்தவ அறிஞர்கள்,தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத போதும் , அதன் சொற்சுவை பொருட்சுவை மிக்க இலக்கியங்களால் பெரிதும் உளம் கவரப்பட்டு, தமிழை முறையாகப் பயின்று , அதில் இயற்றப்பட்டுள்ள தொண்மையான இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்த்ததோடல்லாமல் , அவர்கள் தாமும் பல இலக்கியங்களைத் தமிழிலேயே சிறப்பாக இயற்றி நம் மொழிக்குத் தொண்டு செய்திருப்பது தான் தமிழர்களாகிய நாம் மிகவும் பெருமை கொள்ள வேண்டிய அம்சமாகும்.

    அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர், (இயற்பெயர் கான்ஸ்டாண்டிநோபில் ஜோசப் பெஸ்கி ,புகழ்பெற்ற பரமார்த்த குரு கதைகளை எழுதியவரும் இவரே .கொடுந்தமிழ் இலக்கணம் என்ற இலக்கண நூலை எழுதியவரும் இவரே.) ,திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு . போப் என்ற அறிஞர், இவர் தான் இறந்த பின்னர் தன் கல்லறையில் "இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகின்றான்" என்று பொறிக்கச் சொல்லியதையும் நாம் நினைவு கூறலாம்.


    அடிப்படை நோக்கம் மதமாற்றமாயிருப்பினும் ,வெளிநாட்டவர் தமிழ் மீது பற்று கொண்டு செய்திருக்கும் தமிழ்த்தொண்டை நோக்க நாம் நமது மொழிக்கு ஒன்றுமே செய்யாமல் இருப்பது வெட்கக்கேடல்லவா ? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று அவர்கள் உணர்ந்திருப்பது அவர்களது பெருந்தன்மையென்றால், உள்ளூர்க் குளம் தெப்பக்குளம் ஆகாது என்று நாம் வாளாயிருப்பது நம்முடைய சிறுமையே அல்லவா ?



    "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்

    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! " - என்று அறைகூவல் விடுத்த மஹாகவி பாரதியின் வேண்டுகோளுக்கிணங்க, வேற்றுமொழி இலக்கியங்களையும் அவற்றின் பண்பாட்டுக் கலைகளையும் நம் தமிழுக்குக் கொண்டு வந்துச் சேர்க்க நம்மால் இயலாவிடினும், நமது பண்டைய காலம் தொட்டு இன்றைய நாள் வரையிலுமான தமிழ் அறிஞர்களும், புலவர்களும் நமக்குக் கொடுத்தருளியிருக்கும் , இலக்கண இலக்கியங்களைத் தாமாக முயன்று பயின்றோ , அல்லது அவற்றிலே மூழ்கித் திளைத்த நம் தமிழறிஞர்கள் வாயிலாகவோ , கற்றும் கேட்டும், சுவைத்தும் ,இரசிக்கும் அளவிற்காவது பழகிக் கொள்ள வேண்டாமா ?

    " என்னது, இலக்கியமா ?, இலக்கணமா ? , இரசிப்பதா ? வேறு வேலையைப் பாருங்கள் !" என்கிறீர்களா ? சரி அந்த அளவிற்கு வேண்டாம்.பேச்சு வழக்கிலுள்ள உரைநடைத் தமிழிலாவது இயன்ற வரைப் பிழையில்லாமல், பேசவும் எழுதவுமாவது செய்ய வேண்டாமா, நம் இளைய தலைமுறைக்குக் கற்றுத்தர வேண்டாமா ?

    இப்படிச் சிந்திக்காமல் , தமிழிலே பேசுவதும் எழுதுவதும் ஏதோ வேற்று கிரகத்து மொழியில் உறவாடுவது போல அந்நியமாக எண்ணி முற்றிலுமாக ஒதுக்குவது பெரும் பேதைமை அல்லவா ? வேற்று மொழியெதையும் கற்றுக் கொள்ளக் கூடாது, பேசக்கூடாது என்பதல்ல இங்கு கருத்து. நம் தாய்மொழியைத் தவிர்த்து விட்டு வேற்று மொழியைக் கொண்டாடுவது என்பது , பெற்ற தாயைப் புறந்தள்ளிவிட்டு, மாற்றாந்தாய்க்கு மரியாதை அளிப்பது போன்றது என்பதே இங்கு கருத்து . ஒருவருக்குத் தன் தாய்மொழியில் நன்றாகச் சிந்திக்கத் தெரிந்தால் தான் வேற்று மொழியில் அவரது கருத்துகளைத் தெளிவாக எடுத்துக் கூற இயலும். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .


    தமிழ் என்பது வெறும் மொழியல்ல. நம் வரலாற்றின் அடிப்படை . நம் தொண்மையானப் பண்பாட்டின் அடையாளம் . அதிலும் நம் தமிழ் மொழி, வடமொழி, இலத்தீனம் போலவே உலகின் பல மொழிகளுக்கு மூலமாக விளங்கக் கூடிய பெருந் தாய்மொழி ! ஆனால் அவற்றைப் போல முற்றிலுமோ அல்லது பெரும்பகுதியோ பேச்சு வழக்கு அழிந்துபடாத இளமையான மொழி ! அதற்குக் காரணம் நம் மொழியில் உள்ள அருமையான இலக்கியங்களும், அவை எடுத்துக்காட்டும் அறம், மறம், அகம், புறம், எல்லாவற்றிற்கும் மேலாக இறை ,இவை பற்றிய நம் மூதாதையரின் பரந்துபட்ட அறிவும்,வாழ்க்கை முறைகளும்,நெறிகளும் தானென்றால் அது மிகையில்லை.


    இத்தகு பெருமை வாய்ந்த நம் தமிழ் மொழி நம் முன்னோர் செய்தத் தவப்பயனால் நம் தலைமுறை வரை அழியாமல் வந்து விட்டது.இதை நம் அடுத்தத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்வது நம் எல்லோருக்குமான சமூகக் கடமையாகவே எண்ண வேண்டும். இன்று உலகமே ஒரு கிராமம் என்ற நிலை வந்து விட்டது . திரைகடலோடித் திரவியம் தேடிப் பல நாடுகளில் தமிழர்கள் குடியேறி விட்டோம். தமிழ்நாட்டில் வாழும் இன்றைய தலைமுறையினர் கூட, சில விதிவிலக்குகள் நீங்கலாகத், தமது தாய்மொழியைப் பழித்தும், இழித்தும் வருவது மிகவும் வேதனைக்குரியது . இந்நிலையில் வெளிநாடுகளில் குடியமர்ந்து விட்டத் தமிழ்க்குடும்பங்களின் இளைய தலைமுறைக்கு நம் மொழியில் பேசவும் எழுதவும் முடியாத சூழலே நிலவுகிறது.


    அவர்களுக்கு மட்டுமல்ல, நம் நாட்டிலேயே வளரும் இளம் பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்க வேண்டிய அவசியத்தையும், அதைக் கற்பதன் மூலம் அவர்கள் பெறக்கூடிய இலக்கிய இன்பங்கள் மற்றும் பரந்துபட்ட அறிவாற்றல் பற்றியும் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், பெற்றோரும், உற்றாரும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் . குழந்தைகள் மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் தமிழ் கற்பதற்கான சூழலை வீட்டிலாவது உருவாக்கித் தர வேண்டும். அதற்கு முதலில் பெரியவர்கள் நம் மொழியின் வளத்தை உணர வேண்டும். அதன் பெருமையைக் காக்கத் தலைப்பட வேண்டும். இச்செயல் சற்றே கடினமல்ல, முற்றுமே கடினம் தான் ! ஆயினும் அதைச் செய்வது அவசியம் மட்டுமல்ல,அவசரமுங்கூடத்தான் !



    அவ்வாறு செய்யாமல் விட்டோமேயானால், இன்று நாளை இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில், தமிழ் என்கிற இப்பெருமொழி அழிந்து விடக்கூடிய அபாயம் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். அவ்வாறு நம் மொழியை அழிய விடுவதென்பது, நமது வேர்களை நாமே அழித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். நமது மொழி என்பது நமது அடையாளம், பண்பாடு- இதனை அழிய விட்டு வாழும் வாழ்விலே உயிர்ப்பு எப்படி இருக்கும் ? கடமை மறந்து, உரிமை இழந்த அடிமைத்தனத்தின் புழுக்கம் அல்லவோ நம்மை இறுக்கும் ? அப்படி வாழ்வதிலென்ன சுகம் ? காலம் இன்னும் கடக்கவில்லை. விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.


    என்னைப் பொறுத்தவரை இன்று சிறு குழந்தையாக இருக்கும் என் மகனுக்கு முதல் ஆசிரியராக நானே இருந்து, என் சிற்றறிவைக் கொண்டு நம் தமிழ் மொழியின் அடிப்படையைச் சொல்லிதருவதே என்னால் இயன்ற மொழிப்பணி. சிறுதுளி தானே பெருவெள்ளம் ? அவன் மேலும் வளர வளர அவன் ஆர்வத்தைத் தூண்டும் சூழலையும், திறமையான தமிழ் ஆசிரியர்கள் மூலம் மொழியைப் பயிலும் வாய்ப்பினையும் ஏற்படுத்த முயற்சி செய்வதே என் நோக்கம். அதற்கு அவனும் ஒத்துழைக்க வேண்டுமே ! ஆசையிருக்குத் தாசில் பண்ண அத்ருஷ்டமிருக்கு மாடு மேய்க்க என்றால் என்ன செய்வது ?!! :tongueout: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வமென்று ஒன்றெதற்கு ? மனிதர்களாகிய நாம் முயற்சி தான் செய்யலாம், அதற்கானப் பயனைப் பெறுவது என்பது , எல்லாம் வல்ல இறைவனின் அருளாலேயே அல்லவோ ?ஆயினும் "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" எனும் வள்ளுவரின் வாக்கை நான் பெரிதும் நம்புகிறேன் . .


    நம்மாலான மொழித் தொண்டு, அது எவ்வளவு சிறியதாயினும், மனமாரச் செய்வோம் , மகிழ்வோடு வாழ்வோம் ! தமிழரென்று சொல்வோம் ! தலை நிமிர்த்திச் செல்வோம் !



    என்றும் அன்புடன் ,


    பவித்ரா
     
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    டியர் பவித்ரா

    ஒரு அழகான திரியை ஆரம்பித்து உள்ளீர்கள். மிக்க மிக்க மகிழ்ச்சி. ஒரு நாளைக்கு ஒரு குறள் கற்று அதை follow பண்ணினாலே நம் வாழ்கை என்னும் படகு எட்ட முடியாத தூரத்தை .விடும். தங்கள் நடை சாலமன் பாப்பையா கூறுவது போல் உள்ளது. வாழ்த்துக்கள் தினமும் ஒரு குறள் மற்றும் விளக்கம் எழுதுங்கள் ... படிக்க நாங்கள் ரெடி. நன்றி :cheer:
     
  4. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Yet to read 2nd part. I will put my comment once i read.. thanks pavithra
     
    PavithraS likes this.
  5. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    இங்கு தமிழ்லில் எழுதி பழகுகிறேன், பிழை போருதுகொளவும்.

    குறள் விளக்கங்கள் அருமை, எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. இந்த முயற்சிக்கும், பதிவுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்! :)
     
    IniyaaSri, krishnaamma and uma1966 like this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக அருமை பவித்ரா......... hand-clapping-smiley-emoticon.gif ...உங்களின் விளக்கம் வெகு அருமை................தொடரட்டும் உங்களின் இந்த சீரிய முயற்சி!........தினமும் படிக்க நானும் தயார் !! flower-basket-smiley-emoticon.gif
     
    uma1966 likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சபாஷ், நீங்க கவலைப் படாதீங்க, நான் தினமும் உங்களுடைய பதிவுகளை quote பண்ணி, தவறுகளை bold எழுத்துக்களில் மாற்றி விடுகிறேன் , நீங்கள் பிறகு உங்களுடைய ஒரிஜினல் போஸ்ட் மற்றும் திருத்தப் பட்ட என்னுடைய போஸ்டையும் பார்த்து , உங்கள் தவறு என்ன என்று கண்டு கொள்ளுங்கள்.........சரியா? :).....கொஞ்ச நாளில் நல்லா அடிக்க வந்துவிடும் ! :thumbsup:
     
    jskls, uma1966, kaniths and 1 other person like this.
  8. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அருமை பவித்ரா அவர்களே. பொருள் விளக்கம் அதை விட அருமை. எனது மனமார்ந்த பாராட்டுகள் & நன்றி!!
    தொடரட்டும்!!
     
    uma1966 likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா வாழ்த்துக்கள் .நல்லதொரு ஆரம்பம் .அழகு தமிழுக்கு என்றும் அழிவில்லை உங்களை போன்றோரின் சேவை நம் மொழிக்கு தேவை .நம் தமிழ் இனத்துக்கு தேவை .முயற்சி என்றும் வீண் போகாது .வாழ்க உங்கள் தமிழ் பற்று .வளர்க உங்கள் தமிழ் தொண்டு .

    (அடுக்கு மொழியில் பேசி அனைவரையும் கவர ஆசை)
     
    uma1966 and kaniths like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா ரொம்ப சந்தோஷமா இருக்கு .தமிழில் இவ்வளவு விரிவான உரைநடை எழுதிய உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை .அருமையான ஆரம்பம் :clap2:
     
    uma1966 and kaniths like this.

Share This Page