1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அதிர்ஷ்டம்

Discussion in 'Stories in Regional Languages' started by ksuji, Jul 27, 2019.

  1. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    இரவு மணி எட்டு முப்பது இருக்கும்.

    ஆறுமுகம் மிகுந்த அலுப்போடு வீட்டிற்குள் நுழைந்தான்.

    புவனா , “வாங்க மாமா” என்று அவனை அன்போடு உபசரித்து அவன் உட்காருவதற்கு நாற்காலியை கொண்டு வந்து போட்டாள் . பிறகு ஒரு செம்பிலே தண்ணீரும் ஒரு டம்ளரும் கொண்டுவந்து மேசைமேல் வைத்தாள்.

    அவன் தண்ணீர் குடித்து முடித்ததும் அவள் அவனுடைய பையில் இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டாள் ; எண்ணிப் பார்த்தாள்.

    “என்னது, வெறும் 15 ரூபாய் தானா?” என்று கேட்டாள்.

    அவன் சிரித்துக்கொண்டே சட்டைப் பையை தட்டிக்காண்பித்தான்.

    அவளுக்கு இல்லாத உரிமையா ? மனைவி ஆயிற்றே ! அவனுடைய சட்டையின் மேல் பித்தானைக் கழற்றிவிட்டு உள் பக்கம் இருந்த பையில் இருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டாள்.

    எண்ணிப்பார்த்தாள்.

    600 ரூபாய் இருந்தது.

    புவனாவின் முகத்தில் சந்தோஷம்! சந்தோஷம் ! சந்தோஷம்!

    தினமும் ஆபீஸ் வேலை முடிந்து ஆறுமுகம்ரெக்ரியேஷன் கிளப்புக்கு செல்வான் . அங்கு அவனுடைய நண்பர்களுடன் சீட்டுக் கச்சேரி .ஆறுமுகம் சீட்டாட்டத்தில் பெரிய கில்லாடி . அவனை வெல்வதற்கு அவனுடைய ஆபீஸில் யாரும் கிடையாது. அதனால் தினமும் அவனுக்கு 500 லிருந்து 1000 ரூபாய் வரை வருமானம் . அவனுடைய மனைவி புவனாவுக்கு கொண்டாட்டம் தான் . இப்படி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆறுமுகத்தின் காட்டில் மழைதான்.

    -----------------------------------

    அன்றைக்கு அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்து சுசீலாவின் அழுகைக் குரல் கேட்டது .

    சுசீலா அழகாக இருப்பாள்.

    அவளுடைய கணவன் பாண்டுரங்கன் அவளைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான் . தினமும் குடித்துவிட்டு வந்து இவளை அடிப்பதே அவனுக்கு ஒரு பொழுதுபோக்காக ஆயிற்று .

    சுசீலா அவனுடைய அனுமதியின்றி வெளியே எங்கேயும் செல்ல கூடாது, யாருடனும் பேசக்கூடாது,அவ்வளவு ஏன் ,நன்றாக அலங்காரம் கூட செய்து கொள்ளக்கூடாது. சாயங்காலம் ஆனால் முகத்தை கழுவி பொட்டு வைத்துக் கொண்டு வாசல் பக்கம் வந்தால் உடனே பாண்டுரங்கனின் குரல் கேட்கும் ,"போடி உள்ளே போ, உள்ளே போ" என்று திட்டுவான்.

    புவனா பக்கத்து வீட்டில் இருக்கிறாள் என்று தான் பெயர் .ஆனால் அவளுடன் கூட ஒரு வார்த்தை பேசுவதற்கு பாண்டுரங்கன் அனுமதிக்க மாட்டான் . இத்தனைக்கும் பாண்டுரங்கனுக்கு காலேஜில் படிக்கிற ஒரு பையன் இருக்கிறான்.

    பாண்டுரங்கன் வெளியில் எங்காவது சென்றிருந்தால் அந்த நேரம் மட்டும் சுசீலா புவனாவுடன் சற்று நேரம் பேசுவாள்;அதுவும் எப்போது பாண்டுரங்கன் வந்து விடுவானோ என்ற பயத்துடனேயே இருப்பாள்.

    அப்படித்தான் அன்று ஒரு நாள் சுசீலா வேலிக்கு மறுபுறம் இருந்து புவனாவிடம் இரண்டு வார்த்தை பேசுவதற்குள் அங்கிருந்து பாண்டுரங்கன் குரல் கேட்டது," எவனோட பேசிட்டு இருக்கடி ?"என்று உரக்க கேட்டது. உடனே சுசீலா

    "நான் பிறகு வருகிறேன் புவனா" என்று கூறிவிட்டுபயந்துகொண்டேவீட்டுக்குஉள்ளேதிரும்பிப்போய்விட்டாள். கணவனிடம் அத்தனை பயம்.

    --------------------------------

    இரண்டு வாரம் போயிருக்கும்.

    அது ஒரு திங்கட்கிழமை மாலை.

    ஆறுமுகம் மிகவும் சோர்வாக வீட்டுக்குள் நுழைந்தான்.

    "என்ன மாமா ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள் , சோர்வாக இருக்கிறீர்கள்?"என்று புவனா கேட்டாள்.

    அவள் அவளுடைய சட்டைப் பையிலும்ஆபீஸுக்கு கொண்டு போகும் பையிலும் தேடிப்பார்த்தாள், எதுவுமே கிடைக்கவில்லை.

    "என்ன மாமா இன்று நீங்கள் விளையாடப் போக வில்லையா?"என்று கேட்டாள்.

    "விளையாட போனேன் அம்மா", என்றான்.

    "ஆனால் பை காலியாக இருக்கிறதே"என்றாள் புவனா.

    "அதையேன் கேட்கிறாய், என் பிழைப்பைக்கெடுப்பதற்காகவே ஒருத்தன் புதிதாக டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்கிறான்."

    "என்ன சொல்கிறீர்கள் மாமா? யார் அவன்? என்ன செய்து விட்டான்?"

    "நடராஜன் என்று புதிதாக ஒருவன் டிரான்ஸ்பர் ஆகி வந்து இருக்கிறான்.

    அவன் சீட்டாட்டத்தில் பலே கில்லாடியாக இருக்கிறான் . என்னால் அவனை ஒரு ஆட்டத்தில் கூட ஜெயிக்கவே முடியவில்லை. இன்றைக்கு வரவு இல்லாதது மட்டுமில்லை, என் கையில் இருந்து 300 ரூபாயும் போயிற்று "என்றான் ஆறுமுகம்.

    "விடாதீர்கள் மாமா அவனை எப்படியாவது நீங்கள் ஜெயித்தே ஆகவேண்டும் " என்று தூண்டுகோல் போட்டாள் புவனா.

    ஆறுமுகம் அந்த வாரம் முழுவதும் நடராஜனிடம் தோற்றுக் கொண்டே இருந்தான் . ஆறுமுகத்திற்கு 5000 ரூபாய் கையை விட்டுப் போயிற்று.

    ஆறுமுகத்தின் முகம் தொங்கிப் போய்விட்டிருந்தது. சோகத்தில் ஆழ்ந்தான்.

    ---------------------------------------------------------

    அன்று சனிக்கிழமை மாலை நேரம்.

    வேலிக்கு மறுபக்கத்திலிருந்து சுசீலாவின் குரல் கேட்டது. "புவனா புவனா", என்று உரக்கவே அழைத்தாள்.

    புவனாவுக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று.

    "சுசீலா எப்படி அவளை உரக்க அழைக்கிறாள்? அவள் கணவன் காதில் அவளுடைய குரல் கேட்டால் சும்மா இருப்பானா?" என்று நினைத்தாள்.

    வாசலில் போய் எட்டிப் பார்த்தாள்; வேலிக்கு மறுபுறம் நிற்பது யார், சுசீலாவா !ஆச்சரியமோ ஆச்சரியம்!!

    புவனாவுக்குஅவளுடைய கண்களையே நம்ப முடியவில்லை.

    பிங்க் கலர் புடவையும் அதற்கு மேட்சாக பிங்க் கலரில் ஒரு ரவிக்கையும் அணிந்திருந்தாள்; அதுவும் அந்த ரவிக்கை மிகவும் ஃபேஷனாக முழங்கை வரை இருந்தது; சிரித்த முகத்தில் மகிழ்ச்சியுடன் புவனாவை அழைத்தாள். புவனா கேட்டாள்,"என்ன சுசிலா , எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. நீ இன்று இந்த மாதிரி அலங்காரத்தில் மிக அழகாக இருக்கிறாய். நான் காண்பது என்ன கனவா? அதெல்லாம் இருக்கட்டும், உன் புருஷன்காரன் உன்னை எப்படி இவ்வளவு தூரம் பேசுவதற்கு விட்டான் வீட்டில் இல்லையா ? "

    "இப்பொழுதுதான் அக்கா எனக்கு விடிவுகாலம் பிறந்தது. அவர் வீட்டில்தான் இருக்கிறார் . ஒரு வாரமாக குடிப்பதை விட்டு விட்டார். என்னை ரொம்ப மதித்து நடக்கிறார்" என்றாள் சுசீலா.

    "இது என்ன மாயம் ! இதெல்லாம் எப்படி நடந்தது ?" என்று கேட்டாள் புவனா.

    சுசீலா புவனாவின் கையை எடுத்து தனது முழங்கையை தொட்டு காண்பித்தாள்.

    அங்கே ஒரு தாயத்து நெருடியது.

    சுசீலா தாழ்ந்த குரலில் சொன்னாள்,

    "பக்கத்து கிராமத்தில் ஒரு சாமியார் வந்திருக்கிறாரே, அவரிடம் போனேன் ; என்னுடைய குறைகளைச்சொன்னேன் அவர் எனக்கு இந்த தாயத்தை கொடுத்தார். இதை எப்போதும் முழங்கைக்குச் சற்று மேலாக அணிந்திருக்க வேண்டும் ,ஆனால் முழங்கை வரை சட்டை போட்டு இருக்க வேண்டும், தாயத்து வெளியே யார் கண்ணிலும் படக் கூடாது", என்று கட்டளையிட்டார்.

    " எனக்கு முதலில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. வீட்டிற்கு வந்து அவர் சொன்ன மாதிரியே செய்தேன். இரண்டு மூன்று நாட்கள் தான் ; என்ன ஆச்சரியம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது . என் கணவன் குடிப்பதை நிறுத்தி விட்டார். என்னை அடிப்பதே இல்லை. நான் அலங்காரம் செய்து கொண்டால் கூட என்னை ஒன்றும் சொல்வதே இல்லை " என்று மிகவும் பெருமையாக்கூறினாள்.

    புவனா சுசீலாவிடம் இருந்து அந்த சாமியார் எங்கே இருக்கிறார் எவ்வளவு காணிக்கை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் துருவித்துருவி விசாரித்துக்கொண்டாள்.

    அதற்குப் பிறகு சுசீலாவும் புவனாவும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் .பாண்டுரங்கன் வாசலில் இருந்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான்.

    அதன் பிறகு புவனாவும் சுசீலாவும் அவரவர் வீட்டிற்குள் சென்றார்கள்.

    --------------------------------------------------------

    அன்று ஞாயிற்றுக்கிழமை.

    புவனாவும் ஆறுமுகமும் சாமியார் முன் உட்கார்ந்து இருந்தார்கள்.

    ஆறுமுகம் சாமியாரிடம் தான் சீட்டாட்டத்தில் எவ்வளவு பெரிய புலி என்பதையும், நடராஜன் முன்னால் அவன் ஒரு தூசியாக மாறிவிட்டதையும் கூறினான். இந்த நிலைமையை மாற்றி பழையபடி அவன் நடராஜனையும் சேர்த்து ,எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்றும் அதற்கு ஏதேனும் உபாயம் இருந்தால் கூறுமாறும் கேட்டுக் கொண்டான்.

    சாமியார் ஆறுமுகத்திடம் ஒரு தாயத்தை கொடுத்தார் .

    "இதனை உன் முழங்கைக்கு மேலே கையில் எப்பொழுதும் அணிந்து கொள்ள வேண்டும், ஆனால் தாயத்து வெளியே தெரியாதபடிக்கு கை சற்று நீளமான சட்டையை அணிந்து கொள்ள வேண்டும், முக்கியமாக வெளி மனிதர்கள் இருக்கும் பொழுது முழுக்கை சட்டையை அணிந்து கொள்ள வேண்டும்", என்று கூறினார்.

    புவனாவும் ஆறுமுகமும் சாமியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு அவரை வணங்கி எழுந்தார்கள். பின்னர் வீட்டுக்கு சென்றனர்.

    ------------------------------------------

    மறுநாள்,. திங்கட்கிழமை மாலை 7 மணி இருக்கும்.

    ஆறுமுகம் விசிலடித்தபடி மந்தகாசமான முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தான்.

    புவனா ஆவலோடு அவனை வரவேற்றாள்," என்ன மாமா, இன்றைக்கு என்ன ஆயிற்று ? வெற்றியா தோல்வியா ? அந்த நடராஜனை சமாளித்தீர்களா ?" என்று கேட்டாள்.

    ஆறுமுகம் தான் அணிந்திருந்த கரு நீல கலர் முழுக்கை சட்டையை முழங்கைக்கு மேலே தட்டி காண்பித்தான் .

    "ஆஹா, அந்த சாமியார் எவ்வளவு பவர்ஃபுல்லான ஆளாக இருக்கிறார்!
    இதோ பார் ஏழு 100ரூபாய் கொண்டு வந்திருக்கிறேன். அந்த நடராஜன் என்னிடம் ஒரு ஆட்டத்தில் கூட ஜெயிக்கவில்லை . எல்லாம் அந்த சாமியாரின் மகிமை".

    புவனா ரொம்பவும் மகிழ்ந்து போனாள் . "நீங்கள் கையைக் காலைக் கழுவிக் கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு கேசரி செய்து தருகிறேன்" என்றாள்.

    --------------------------------------

    அந்த வாரம் முழுவதும் ஆறுமுகம் ஜெயித்துக் கொண்டே வந்தான் நடராஜன் தோற்றுக் கொண்டே வந்தான். ஆறுமுகத்துக்கு செம collection.

    -----------------------------------------

    அந்த ஞாயிற்றுக் கிழமை புவனாவும் ஆறுமுகமும் ஷாப்பிங் சென்றார்கள்.

    புதிதாக நான்கு முழுக்கைச் சட்டை வாங்கிக் கொண்டார்கள்.

    தியேட்டரில் சென்று சினிமா பார்த்தார்கள் .

    அது முடிந்து 5ஸ்டார்ஹோட்டலிலேயே ஆனந்தமாக சாப்பிட்டார்கள்.

    மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினார்கள்.

    ---------------------------------------------

    மறுநாள் திங்கட்கிழமை.

    ஆறுமுகம் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

    புவனா அவனுக்கு ஞாபகமாக முழுக்கைச் சட்டை அணிவித்தாள்.

    சாமி அலமாரியில் இருந்து விபூதி குங்குமம் கொண்டு வந்து அவனுக்கு வெற்றித்திலகம் இட்டு வாழ்த்தி வழியனுப்பினாள்.

    ---------------------------------------------

    சாயங்காலம் ஐந்தரை மணி இருக்கும் ஆபீஸ் மனமகிழ் மன்றத்திலே சீட்டுக் கச்சேரி மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது.

    ஆறுமுகம் ஐந்தே ஐந்து ஆட்டங்களில் கொண்டு வந்திருந்த 500 ரூபாயையும் நடராஜனிடம் தோற்று விட்டான்.

    ஆறுமுகத்துக்கு ஒரே குழப்பம்.அவன் ரகசியமாக தன்னுடைய கையில் தாயத்து இருக்கிறதா என்று தடவிப் பார்த்துக் கொண்டான் .
    இருந்தது.
    ஆனாலும்" எப்படி நடராஜனால் என்னை ஜெயிக்க முடிந்தது? சாமியார் கொடுத்த தாயத்துக்கு மதிப்பு ஒரு வாரம் தானா?" என்று மிகுந்த வருத்தப்பட்டான்.

    மறு நாள் லீவு போட்டுவிட்டு சாமியாரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    நடராஜன் புன்முறுவலுடன் ஆறுமுகத்தைப் பார்த்தான்.

    ஆறுமுகத்துக்கு மிகுந்த கோபமாக வந்தது. அவன் நடராஜனை மிகுந்த வெறுப்போடு பார்த்தான்.

    நடராஜன் , புதிதாக, கருப்பு நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை அணிந்திருந்தை அப்போதுதான் கவனித்தான் ஆறுமுகம்.
     
    periamma and Thyagarajan like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @ksuji அதிர்ஷ்டம் நம்பிக்கையில் இருக்கிறது என்பதை அறியாத அறிவிலிகள்.பெரியவர்கள் உன் வாழ்க்கை உன் கையில் என்று சும்மாவா சொன்னார்கள்
     
    ksuji likes this.

Share This Page