1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Horse Cart

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 10, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    This write up took me to 1950.
    I enjoyed the casual way it is written.

    நாங்கள் பயணிக்கும் ரயில் ஊரை நெருங்கிக் கொண்டிருக்கும். ஸ்டார் ஹோட்டல் பாத் ரூம் பைப் மாதிரி ஏகப்பட்ட கைப்பிடிகள் நீராவி இஞ்சினுக்குள் துருத்திக் கொண்டிருக்கும். அதில் ஏதோ ஒன்றிரண்டை டிரைவர் பிடித்து இழுக்க ரயிலின் வேகம் குறையும்.
    பிறகு இன்னொரு லீவர் மேல் ஏறி உட்கார்ந்து ப்ரேக்கைப் போடுவார். மாடு ஏகமாய் உச்சா போவது போல சிலிண்டரிலிருந்து நிறைய சுடு நீர் கொட்டும். ரயில் ஒரு வழியாக ப்ளாட்பாரத்தில் நிற்கும்.
    மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு இறங்குவோம். பெரியவர்களுக்கு மட்டும்தான் வாசல் கதவு வழியாக இறங்கும் பாத்யதை உண்டு. லக்கேஜ்கள் எல்லாம் ஜன்னல் வழியாகவே இறக்கப்படும்.
    அந்தக் காலத்து கம்பார்ட்மெண்ட் ஜன்னல்களுக்கு கம்பிகள் கிடையாது. அது Windows டெவலப் ஆகாத காலம். லக்கேஜ்கள் ஜன்னல் வழியாக இறக்கப்பட்டதும் என்னைப் போன்ற பொடிசுகளும் ஜன்னல் வழியாகவே இறக்கப்படுவார்கள்.
    இதற்காக ரயில் உள்ளே ஒரு Giver இருப்பார். ப்ளாட்பாரத்தில் ஒரு Taker இருப்பார். நம் குடும்பத்தைச் சாராத மூன்றாம் நபர் கூட இந்த Give and take policy ல் இணைவார்.
    லக்கேஜ்கள் எண்ணப்படும். கை கால் முளைத்த லக்கேஜ்களுக்கும் Numbering system உண்டு. பித்தளைக் கூஜாவுக்கு நம்பர் கிடையாது. அது Hand luggage.
    அப்போதெல்லாம் பயணத்தின் போது படுக்கை கண்டிப்பாக இருக்கும். அதன் உள்ளேதான் துணி மணிகளை சுருக்கம் சுருக்கமாய் அள்ளிப் போட்டு சுருட்டியிருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு படுக்கப் போட்டிருக்கும் லாண்டரி பேஸ்கட்.
    படுக்கையை கயிறு போட்டு கட்டியிருப்பார்கள். யூனியன் ஜேக் கொடி மாதிரி ப்ளஸ், பெருக்கல் இரண்டுமே அதில் இருக்கும்.
    ஜெமினி கணேசன் மாதிரி பிஸ்தாக்கள் மட்டும்தான் வலது தோளில் ஹோல்டாலை கோணலாக சாய்த்துக் கொண்டு ரயிலிலிருந்து இறங்குவார்கள். எங்களுக்கு எல்லாம் பவானி ஜமக்காளம்தான் ப்ராப்தி.
    இது நாள் வரை அந்த ஹோல்டாலை எப்படி பேக் செய்கிறார்கள் என்றே எனக்கு புரிபடவில்லை. அதை மடிப்பதும் சுருட்டுவதும் ஒரு கலை. ஹோல்டாலுக்குள் நம் ஜட்டி பனியன்கள் எல்லாம் தலையணை அவதாரம் எடுத்திருக்கும் என்று மட்டும் தெரியும்.
    அப்பாவும் அம்மாவும் முன்னால் போவார்கள். பின்னால் கோழிக்குஞ்சுகள் மாதிரி நாங்கள். ஒரே வித்தியாசம். கோழிக்குஞ்சுகளுக்கு மண்டையில் முடி இருக்கும். எங்களுக்கு நாட் அலவ்ட். முடி உச்சவரம்பு சட்டம் அமுலில் இருந்த காலம் அது.
    வெளியே நான்கு குதிரை வண்டிகள் காத்துக் கொண்டு நிற்கும். எங்களைப் பார்த்ததும் ஒரு குதிரை வண்டி முன்னால் வரும். குதிரை வண்டிக்காரர் கையில் இருக்கும் குச்சி முப்பது டிகிரி கோணத்தில் ஏதோ சேட்டிலைட்டை சுட தயாராக இருப்பது போல ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கும்.
    “அய்யா..ஏறுங்கய்யா” என்பார் வண்டிக்காரர். அவரை இனி கோவிந்து என அழைப்போம்.
    எங்கே போக வேண்டும் என்று கேட்க மாட்டார். ஓவர்சீயர் வீடு என்றால் அந்த சின்ன ஊரில் அனைவருக்கும் தெரியும். எனக்குத்தான் ஓவர்சீயர் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது.
    வண்டிக்குக் கீழே பன்னியை கட்டித் தூக்கிப் போகும் வலை மாதிரி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். குதிரைக்குண்டான புல் அதில்தான் ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். கோவிந்து குதிரைக்கு புல் போட்டு நான் பார்த்ததில்லை. ஏதோ statutory requirements க்காக அந்த புல் பேங்கை வைத்திருக்கிறார் என்று தோன்றியது.
    அந்த புல்களுக்கு மேல் படுக்கை மற்றும் இதர சாமான்களை வைப்பார் கோவிந்து. இதன் விளைவாக வீட்டுக்குப் போனவுடன் பல புல்லரிக்கும் சம்பவங்கள் நடக்கும்.
    வண்டிக்கு உள்ளே ஒரு லோ பட்ஜெட் மெத்தை இருக்கும். இங்கும் புல் தான். மேலே சாக்கு போட்டு மூடியிருப்பார்கள். புல் ஒரு சம்பிராதாயத்திற்குத்தான் இருக்கும். கவாஸ்கர் வண்டியில் ஏறினால் There is little amount of grass and it may assist passengers என்று பிட்ச் ரிப்போர்ட் கொடுத்து விடுவார்.
    கோவிந்து எங்களையெல்லாம் கண்ணாலேயே எடை போடுவார். சாக்கில் யார் உட்கார வேண்டும் என்று அவர் சாக்ரடீஸ் மூளை வேலை செய்யும்.
    பொதுவாக பெண்களுக்குத்தான் சாக்கு அலாட் ஆகும். ஏனென்றால் இந்த சாக்கு சறுக்காது. அது ஒரு Safe zone.
    கால் வைத்து ஏற பின் பக்கம் ஒரு படி இருக்கும். உள்ளங்கை சைஸுக்குத்தான் இருக்கும். ஏகப்பட்ட பேர் கால் வைத்து வைத்து உள்ளங்கை ரேகை முழுக்க அழிந்து போயிருக்கும். கால் வைத்தால் வழுக்கும். வழுக்கை வீழ்வதற்கே என்று பயமுறுத்தும்.
    ஒரு வழியாக பெண்கள் முதலில் ஏறுவார்கள். சாக்கு மெத்தையில் உட்காருவது ஒரு கலை. அந்த காலத்து பெண்கள் Table mate மாதிரி. பதினாறு வகைகளில் மடங்குவார்கள். ஒரு குக்கர் கேஸ்கட் அளவே உள்ள வட்டத்துக்குள்கூட கால்களை மடக்கி உட்காரும் அளவுக்கு Flexibility வைத்திருந்தார்கள்.
    ஒரு பெண்ணுக்கு எதிரே பொதுவாக இன்னொரு பெண்ணே உட்கார வைக்கப்படுவார். பொதுவாக மாமியாரும் மருமகளும்தான் எதிர் எதிரே உட்காருவார்கள்.
    மருமகளுக்குத்தான் பிரச்சினை. கால் மாமியார் மேல் படாமல் உட்கார வேண்டும். வாஸ்து புத்தர் மாதிரி முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார வேண்டும். அடுத்து பாட்டி ஏறுவார். பாட்டி நிறைய மடி பார்ப்பார். ஆனால் உடம்புதான் மடியாது. கஷ்டப்பட்டு உட்காருவார். பாட்டி மீது எல்லோரும் படுவார்கள். வேறு வழியில்லை. அரை மணி நேரத்துக்கு மடி விலக்கு கொள்கையை அமல் படுத்துவார் பாட்டி.
    வண்டிக்கு மத்தியில் ஜன்னல் இருக்கும். ஏழு இஞ்ச் ஸ்க்ரீன் செல் போன் சைஸுக்குத்தான் இருக்கும் அந்த ஜன்னல். அதன் வழியாகப் பார்த்தால் கும்பகோணம் பாத்திரக்கடை என்ற கடைப் பெயர்ப் முழுதாகத் தெரியாது. எந்த கோணத்தில் பார்த்தாலும் கோணம் மட்டும்தான் தெரியும்.
    குதிரை பாட்டுக்கு ஒரு ப்ளாஸ்டிக் ஸ்டூல் மாதிரி ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்கும். வண்டியின் உள்ளே ஆட்கள் ஏறியதும் குதிரையின் கால்களுக்கு லோட் டிரான்ஸ்பர் ஆகும். கால்கள் உதறும். சில சமயம் வண்டி முன்னல்கூட போக ஆரம்பிக்கும்.
    இதை தவிர்க்க வண்டியை கையினால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு Hand brake போட்டுக் கொண்டு நிற்பார் கோவிந்து.
    “ஏண்டா...அந்த குதிரையை கெட்டியா பிடிச்சிக்கோடா” என்று அலறுவார் பாட்டி.
    பாட்டி எல்லோரையும் வாடா போடா என்றுதான் கூப்பிடுவார். எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் டாதான். அவருக்கு அந்த Civil liberty உண்டு.
    இரண்டு சுமாரான பையன்களை பின்னால் உட்காரவைப்பார் கோவிந்து. குறுக்காக ஒரு கம்பியைப் போடுவார். Location sealed என்று அதற்கு அர்த்தம்.
    பின்னால் உட்காருவதில் ஒரு செளகரியம் உண்டு. காலைக் கீழே தொங்கப் போட்டுக் கொள்ளலாம். வேடிக்கை பார்க்கலாம். பிற்காலத்து ஃபிகர்களுக்கு டாட்டா காட்டலாம்.
    தெருவோரத்து மரங்களும் ஓட்டு வீடுகளும் ரிவர்ஸில் போவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும்.
    பின்னால் ஆட்கள் ஏறியவுடன் வண்டி பின் நோக்கி சாயும்.
    இந்த சமயத்தில் தான் ‘டேய் கடன்காரா’ என்ற திட்டு பாட்டியிடமிருந்து கிளம்பும். பாவம். இவ்வளவுக்கும் கோவிந்துவுக்கு எந்த கடனும் இருக்காது. அவனால் எந்த பேங்குக்கும் NPA ஏறியதில்லை.
    கோவிந்து ஒரு ரவுண்டு அடித்து பின்னால் வருவார். கொஞ்சம் உள்ளே போங்க..தம்பி காலை இப்படி நீட்டு என்று சில Balancing acts செய்வார்.
    பிறகு அப்பா முன்னால் ஏறி உட்காருவார். முன்னால் உட்காருவது மிகவும் கடினம். அப்பாவின் ஒரு தொடை வண்டிக்குள்ளும் இன்னொரு தொடை முன்னால் இருக்கும் சட்டத்தின் மீதும் இருக்கும். அப்பா தொடை நடுங்கியாக வந்து கொண்டிருப்பார்.
    அப்பா பக்கத்தில் என்னைத் தூக்கி வைப்பார்கள். முன் இருக்கை. வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
    எனக்குப் வலது பக்கத்தில் கோவிந்து உட்காருவார்.
    “தம்பீ..நகந்து உட்காரு. காலை கீழே போடு” என்பார்.
    காலை கீழே போட்டதும்தான் நமக்கு பிரச்சினை ஆரம்பிக்கும். குதிரைக்கு வால் நீளமாக இருக்கும். அதில் முடிவில்லாமல் முடி இருக்கும்.
    திரெளபதி மாதிரி குதிரையும் ஏதோ சபதம் செய்திருக்க வேண்டும். முடியை முடியாமல் தொங்கப் போட்டுக் கொண்டே வரும். அந்த முடி நம் காலில் பட்டு கிச்சு கிச்சு மூட்டும். சில சமயம் குத்தும்.
    குதிரையின் வால் முடியில் இயற்கையிலேயே முள் உண்டா என்று நமக்கு சந்தேகம் வரும்.
    முதலில் வண்டி பர்ஸ்ட் கியரில் மெதுவாகத்தான் போகும். திடீரென்று கோவிந்து தன்னை மறப்பார். குச்சி எடுத்து குதிரையை அடிப்பார்.
    வடிவேலு இருந்திருந்தால் “நல்லாத்த்தானே போயிகிட்டு இருக்கு..ஏன்?” என்று கேட்டிருப்பார்.
    குதிரை வேகம் எடுக்க ஆரம்பிக்கும். வண்டிக்குள் உட்கார்ந்திருப்பவர்கள் மண்டை பக்கத்து கூரையில் டங் டங்கென்று அடித்துக் கொள்ளும்.
    முன்னால் உட்கார்ந்திருக்கும் எனக்கு சறுக்கு மரத்தில் கீழே போவது போல ஒரு ஃபீலிங் வரும்.
    இப்போது குதிரை தன் வாலை உயர்த்தும். அது என் தொடையை நோக்கி வாலை நகர்த்தும். அந்த அவுட் கோயிங் வால் ஏகமாய் என் தொடையில் உராசி தொடையெங்கும் கீறல் விழும். தொடை வால் பேப்பர் ஆகியிருக்கும்.
    கொஞ்ச நேரத்தில்தான் க்ளைமாக்ஸ் வரும். குதிரை ரன்னிங் மோடிலேயே பச்சை லட்டுகளை உதிர்க்க ஆரம்பிக்கும்.
    Equal distribution of wealth என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்வதை குதிரை செய்து காட்டும். தெருவெங்கும் லட்டுகளை பரவலாக போட்டுக் கொண்டே போகும்.
    தனக்கு கோவிந்து புல்லை போட்டிருக்கிறான் என்பதை நிரூபித்து அநியாயத்திற்கு எஜமான விசுவாசத்தை காட்டும்.
    திடீரென்று குதிரை வேகத்தைக் குறைக்கும். ஒரு இடத்தில் நின்றே விடும்.
    கோவிந்து குதிரையிடம் ஏதோ பேசிப் பார்ப்பார். அது நகராது. பதினைந்து நாள் முன்னாலேயே ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருக்குமா எனத் தெரியாது.
    வாரைப் பிடித்து இழுப்பார். அடிப்பார். குதிரை நகராது. தியானம் பரமானந்தம் என்று நின்று கொண்டிருக்கும்.
    திடீரென்று அதுவே நகர ஆரம்பிக்கும். மறுபடியும் வேகம் பிடிக்கும்.
    பத்து நிமிடத்தில் எங்கள் வீட்டு வாசலில் நிற்கும். கோவிந்து அதற்கு ரூட் எப்படி சொன்னார்? அது எப்படி வந்தது? கூகுளாலேயே கண்டு பிடிக்க முடியாத புதிர் இது.
    அதன் மண்டைக்குள் ஓவர்சீயர் வீட்டுக்கு Navigation inplant ஆகியிருக்கிறது.
    வீட்டுக்குள் லக்கேஜ்களையும் கோவிந்துதான் கொண்டு வந்து வைப்பார்.
    அப்பா பணம் கொடுப்பார். கண்டிப்பாக ஒரு ரூபாய்க்குள்தான் இருந்திருக்க வேண்டும்.
    பாட்டி தலையை தடவிக் கொண்டே வீட்டுக்குள் போவார். திடீரெனத் திரும்பி கோவிந்தைப் பார்த்து சொல்லுவார்.
    “நீ நாசமாப் போவே”
    அந்த நாசமாப் போனவன்தான் எங்கள் அடுத்த சவாரிக்கும் தவறாமல் வருவார்.

    jayasala 42
     
    Thyagarajan, joylokhi and Anjelin like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,561
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I enjoyed reading. Nostalgic. One must have horse sense to enjoy this nostalgic post mixing good old with richness of modern day. It must taken you to villages and cities too when automobile was scarce and imported far and few between.
    Thanks and regards.
    God has distributed wealth among animals.
     

Share This Page