1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இலக்கு

Discussion in 'Regional Poetry' started by Rrg, Oct 17, 2018.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    இலக்கு

    ஏறி வந்த படிகளை நான் எண்ணிப் பார்த்தேன் -இன்னும்
    எத்தனை படிகளுண்டோ தெரிய வில்லை; ஆயின்
    பாதி வழி எப்போதோ தாண்டி விட்டேன்
    பயணத்தின் முடிவு வெகுதூரமில்லை.

    இது பற்றி தீவிரமாய் நினைத்த தில்லை - ஆயின்
    இருக்கும் நாள் சொற்ப மென உணர்ந்த பின்னே
    மறுப்பில்லை - வெட்டியாய் பொழுதோட்டாமல்
    மனம் நிறைந்து முழுமையாய் அனுபவிக்க.

    கை நிறைந்த இனிப்பை கருத்தின்றி தின்று விட்டு
    கடை பாகம் வந்தவுடன் கவனமாய் சுவைக்கின்றேன்.

    பொறுத்திருக்க நேரமில்லை-
    வயதினால் மட்டும் வளர்ந்தோரின் வீண் உரையை;
    கருத்துரைக்க நேரமில்லை-
    கடைப்பிடிக்க ஒவ்வாத விதிகளையும் முறைகளையும்;
    ஏட்டுச் சுரைக்காய்கள் எடுத்து இயம்பும் தத்துவங்கள்
    எனக்கு கேட்டிட இனியும் பொழுதில்லை.

    வாழ்வின் சாரத்தை தேடி யலைகின்றேன்;
    என்னுள் உறையும் கருப்பொருளின் வேகத்தைக்
    கண்கூடாய்க் காண்கின்றேன்;

    இனி இருக்கும் நாட்களை நான் இனிதாக்க வேண்டி
    இதய முள்ளோர்கள் இடை வாழ விழைகின்றேன்.
    எதார்த்தமான எண்ணங்கள்; எதிர்பார்ப்பு அற்ற நட்பு;
    தான் செய்த செயல்களின் பொறுப்பு ஏற்கும் தன்மை,
    தவுறுகளை ஏற்கும் தனித்துவம், மொத்தத்தில்
    வாய்மையும் நேர்மையும் வழித்துணையாய்க் கொண்ட
    நல்லோர்கள் இடையே தான் நான் வாழ துடிக்கின்றேன்.

    நேரம் யாருக்கும் நிற்பதில்லை. நானறிவேன்.
    நெடுநாள் பொறுத்திருக்க அவகாசம் எனக்கில்லை.
    தேடுகிறேன் ஓடுகிறேன் தேடாத இடமில்லை - இங்கோ
    மாந்தர்களுக்கு இடையே மனிதர்க்காய் அலைகிறேன்.

    எனக்கு அவசரம் தான் மறுக்கவில்லை - இனி
    எள்ளளவும் நேரத்தை வீணாக்க மனமில்லை
    அனுபவ முதிர்வு அளிக்கும் செறிவோடும் மகிழ்வோடும்
    அணு அணுவாய் கடை நாளை அனுபவிக்க விழைகின்றேன்

    வரும் நாட்கள் மிக நேர்த்தியாய் அமையும் - ஐயமில்லை
    சென்ற நாட்களை விட சிறப்பான இனிய நாட்கள்
    கண் முன்னே மலர்வதை தெளிவாக காண்கின்றேன்.
    என்னை சுற்றிலும் (பிறர்) நலம் விரும்பும் நல்லோர்
    அன்பெனும் மொழியால் அரவணைக்கும் மாந்தர்
    “எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்;” - என
    சொல்லன்றி செயலால் எடுத்துரைக்கும் கூட்டம்;
    நான் தேடும் (இச்)சமுதாயம் வெகு தொலைவில் இல்லை.
    என் இதயத்தில் ஏக்கம் இனி எந்நாளும் இல்லை.

    அமைதியோடும் நிறைவோடும் பயணம் தொடர்கின்றேன்.
    அடிமேல் அடி வைத்து அனுபவித்து நடக்கிறேன்.
    இலக்கும் வெகு தொலைவிலில்லை; இருப்பும் வெகு நாட்களில்லை.
    இனிதான இப்பயணம் தொடரட்டும் நிறைவு நோக்கி.

    யாரோ சொன்னது:
    எல்லோரும் உயிர் வாழ்தல் இருமுறை;
    இரண்டாவதின் தொடக்கம் வாழ்வு ஒருமுறைதான் என்று நாம் உணரும் போதில்.

    அன்புடன்,
    RRG

    PS: Brazilian poet Mario de Andrade (San Paolo 1893-1945) அவர்களின் கவிதையை ஒட்டி என் நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி இயற்றியது.
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rrg இலக்கை எட்டுவது எளிது அல்ல .அமைதியாக நடந்தால் அருகில் இருப்பது போல் தோன்றும் இலக்கை எட்ட வேண்டும் என்று துரிதமாக நடந்தால் அது தொலை தூரத்தில் தெரியும் .மிக அருமை
     
    Rrg likes this.
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    வாழ்த்துக்களுக்கு நன்றி பெரியம்மா!
    இலக்கை எட்டுவது ஒரு புறம் இருக்க, அதை நோக்கி செல்லும் பாதையை அனுபவித்து நடப்பதே சிறப்பு. அதையே நான் ‘அடிமேல் அடி வைத்து அனுபவித்து நடக்கிறேன்’ என விவரித்தேன். அந்த பயணம் கற்பிக்கும் பாடங்கள் ஏராளம். அதை நன்கு படிப்பின் பிறவிப் பெரும் பயன் தானே வந்து அடையும்.
    அன்புடன்,
    RRG
     

Share This Page