1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (22) அங்கண்மாஞாலத்து !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 6, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    22) ஆண்டாள் பாடல் (கண்ணனிடம் தாங்கள் வந்திருப்பதை அறிவித்தல்,அவனது திருக்கண்களின் அழகைப் பாடுதல் )

    அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
    கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
    செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
    எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.


    பாசுரப் பொருளுரை


    "நல்லழகும்,பெரும் பரப்பளவும் கொண்ட பூமியினை ஆண்ட மன்னர்கள், தம்மைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற அகந்தையும் தற்பெருமையும் அழிந்துபட்டு , உன்னிடம் வந்து உன் அரியணையின் அருகே பணிவுடன் குழுமியிருப்பது போல, நாங்களும் உன்னைச் சரணடைந்தோம்!சலங்கை மணிகளைப் போன்ற, பாதி திறந்து பாதி மூடியிருக்கும், தாமரை மலர்களை ஒத்த உன் அழகிய சிவந்த கண்களை சிறிது சிறிதாகத் திறந்து எம்மைப் பார்த்து அருள் செய்யலாகாதா ? குளிர்ந்த சந்திரனும், வெப்பம் தரும் சூரியனும் ஒரு சேர உதித்ததற்கு நிகரான அக்கண்களின் பார்வை எங்கள் மேல் விழுமாகில், எங்களின் சாபங்களும் பாபங்களும் ஒழிந்து போய் விடும்."

    பாசுரக் குறிப்பு

    நப்பின்னையின் வழிகாட்டலோடு கண்ணன் பள்ளி கொண்டிருக்கும் கட்டிலடியில் சென்று, அவனைத் துயிலெழுப்புவதாக அமைந்த பாசுரம். அகந்தை மமதைகளை விட்டுவிட்டு,"அன்யதா சரணம் நாஸ்தி,த்வமேவ சரணம் மம : " என்று மற்ற சிறு தெய்வங்களைப் பற்றாமல், பரமனையேப் பணிந்து சரணம் செய்ய வேண்டும் என உரைக்கும் பாசுரம்.சரணாகதி செய்கின்ற அடியவரின் எண்ணம் முழுதும் பரமனின் கைங்கர்யம் என்கிற வீடுபேற்றில் தான் உள்ளது என்று உறுதிப்படுத்தும் கருத்தைக் கூறும் பாசுரம்.

    சரணாகதி செய்வது தான் அடியவர்கள் நோக்கமென்று சொல்லும் போதே, அதற்கு ஆண்டவன் செய்யவேண்டிய பிரதிபலனென்னவென்றும் ஆண்டாள் கூறுவது தான் இப்பாசுரத்தின் சிறப்பு ! சரணடையும் அடியவரை நோக்கித் தன்னிரண்டு கண்களால் அருள் பொழிய வேண்டுமாம்,ஆண்டவன் !

    தத்துவங்களின் வரிசையில் அகந்தைக்கு 22 ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டியே இந்த 22 ஆவது பாசுரத்தில் அகந்தையை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ஆண்டாள் அழகுற அமைக்கிறாள்!

    சீவாத்மாக்கள் எல்லாமே தம்முடையவை என்றெண்ணும் மாயத் தூக்கம் கலைந்தெழுந்து, இறைவனுக்கே நாம் அடிமையென்னும் தெளிவுற்று இறைக்கருணையாலே தம்முடைய கர்மவினைகள் நீங்கப்பெற்று அவனோடே இருந்து தொண்டு செய்யும் பேறடைவதையே (ஸாயுஜ்யம்) அடைவதையே இந்த பாசுரம் சொல்கிறது.

    நந்தகோபர், யசோதை என்று குறித்தது ஆச்சார்யர்களையும் அவர்கள் அருளும் உபதேசங்களையும். அதன் மூலம் அடியவர் பெறுவது ஸாலோக்யம் , அதாவது இறைமுகவரி, தாம் சென்று சேர வேண்டிய இடத்தை, தகுந்த இடத்தைத் தேர்தல் .
    பின் பிராட்டியை அண்டி அவளிடம் சரணாகதி செய்தால் சீவர்கள் பெறுவது ஸாமீப்யம், இறை அருகாமை.
    அதன் மூலம் இறைவனை நெருங்கித் தம்முடைய மற்ற அபிமானத்தை எல்லாம் விட்டு அனன்ய சரணமாக அடைந்தால் பெறுவது ஸாரூப்யம்,அதாவது இறைதரிசனம்.
    இதுவரை மற்றவர்கள் துணையிருப்பார்கள்.ஆனால் அவனுடனே இருந்து அவனுக்கே பணி செய்து கிடைக்கும் வீடுபேறு பெறுவதற்கு ,ஸாயுஜ்யம், இறைவனருள் இருந்தால் மட்டுமே முடியும் . ஆகையினால் தான் அவனது கண்களைத் திறந்து நம் மேல் நோக்கச் சொல்கிறாள்,ஆண்டாள் ! அவள் அனைவருக்கும் தாயல்லவா ? அதுதான் அவள் குழந்தைகளான நம் மீதில் அன்போடும்,வாத்சல்யத்தோடும் இறைஞ்சுகிறாள் !

    இப்படியாக ப்ரபத்தி எனும் சரணாகத வழியையும், அதன் வெவ்வேறு நிலைகளையும், அதனை அடையும் உபாயங்களையும் ஆண்டாள் அழகாக நமக்கு எடுத்து வைக்கிறாள்.
    இந்தப் பாசுரத்தை உரிய முறையில் நித்தமும் ஓதினால் பிறவிப்பிணி நீங்கும் என்று வைணவ நெறியாளர்கள், ஆச்சார்யர்கள்,உறுதி அளித்திருக்கிறார்கள். திருப்பதி ஒன்பது நாள் பிரம்மோற்சவத்தில் நான்காம் நாள் மாலையில் இறைவனே அனைத்திற்கும் அதிபதி என்பதைக் குறிக்கும் விதமாக இப்பாசுரக் காட்சியை ஒரு வாகனமாய் வைத்திருப்பார்கள். ஸர்வ -பூ-பால -வாகனம்.
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    நீண்டதும் அழகுகள் நிறைந்ததாம் உலகினில்
    பாண்டவர் கௌரவர் போல் பற்பகுதிகள்
    ஆண்ட வேந்தர்கள் ஆணவம் அடங்கியே
    ஆண்டவனே உன்னடி பணிந்தாற் போல் ,
    மீண்டு வந்தோமெங்கள் இருப்பிடம் நீங்கி
    உன் பொன்னடிக்கீழ்ப் பெருந்திரள் திரளாய் !
    தண்டைச் சலங்கையில் திறந்தே மூடிய
    மணிகளைப் போன்று அலர்ந் தலராதத்
    தண்டுடைக் கமலத்தை ஒத்துச் சிவந்தவுன்
    கண்களை மெது மெதுவாக விழித்தெமைக்
    கண்டருள் புரிவாய் அருட் பெருந்தகையே !
    தண்ணொளி வீசும் நிலவினைப் போன்றும்
    விண்ணி லுதிக்கும் கதிரினைப் போன்றுமுன்
    பொன்னொளி விழிகளால் எம்மையும் நோக்கிட
    மண்ணில் பிறந்தயெம் சாபங்கள் யாவையும்
    மண்ணோடு மண்ணாகித் தீர்ந் தொழிந்திடுமே !
    கண்ணனே எங்களைக் காத்த்தருள் புரிவாய் !

    அம் கண் மா ஞாலத்து அரசர்
    - அழகுகள் நிறைந்த பெருநிலப் பரப்புடைய இம்மண்ணுலகை ஆண்ட அரசர். தயரதன் மாண்டபின்பு அயோத்தி திரும்பிய தன் மகனை கைகேயி"அரசே!" என்று விளித்துப் பேசியதைப் பொறுத்துக் கொள்ளாத பரதனைப் போல் எல்லோரும் இருப்பார்களா ? ஆளும் நிலப்பரப்புப் பெரிதோ,சிறிதோ, இராஜ்ஜியம் இருக்கின்றதோ,இல்லை பூஜ்ஜியம் தானோ, எப்படி இருந்தாலும்,அவரவரைப் பொறுத்தவரை அவரே பெரியவர் , அவரவர் உருவத்திற்கும் இருக்கும் இடத்திற்கும் ஏற்றார் போல் இருக்கும் அகந்தை மமதைகள் அத்தனைக்கும் இடங்கொடுக்கக் கூடிய இயல்புடைய பெரிய உலகம் இந்த மண்ணுலகம் .
    படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மதேவனாயிருந்தாலும், அவரால் படைக்கப்பெறும் சிறு எறும்பாக இருந்தாலும், அவரவர் உருவத்திற்கும், செய்யும் தொழிலுக்கும் சமமாக மனதில் தன்னைப் பற்றிய முனைப்பு, கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். உலகவழக்கில் இதுவும் ஒன்று. புல்லைக் கிள்ளிப் போட்டு மாப்பிள்ளை என்று சொன்னாலும் அது எம்பிக் குதிக்குமாம் என்று சொல்லாடல் உண்டல்லவா ? ஆகவே தான் 'மாஞாலம்' என்கிறாள்.
    அரசராயிருப்பது எவ்வளவு கடினம் ? நாட்டினை நிர்வாகம் செய்வதென்பது மிகுந்த சவாலான பணியல்லவா ? அதற்குரிய தகுதியுடையவர் தானே அரசராயிருக்க முடியும் ?ஆகவே தான் அவர்களிடம் எப்போதும் ஒரு கம்பீரம் இருந்து கொண்டே இருக்கும். அரசு நிர்வாகத்தை ஒரு தவம் போலச் செய்யும் சிலரைத் தவிர, பலரும் அந்தப் பதவியிலிருந்து கொண்டு, கம்பீரத்தைக் காட்டாமல், இறுமாப்பையும் கர்வத்தையும் காட்டுவதை இன்றைய நவீன உலகிலும் நாம் காண்கிறோமல்லவா ? அந்த கர்வமே அவர்களை ஒருநாள் அழித்துவிடும் என்பதை மறந்து அதிகாரத்தில் ஆடுவது தான் விந்தையிலும் விந்தை !

    அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்
    - அப்படிப்பட்ட அரசர்கள் தாங்களே பெரியவர் என்ற ஆணவத்தை விட்டு, இறைவனே தங்களைக் காக்க வல்லவன் என்ற உண்மையை உணர்ந்து இராஜாதி ராஜனான அரங்கராஜனைப் பணிகின்றார்.குருக்ஷேத்ரப் போருக்கு முன் ஆதரவு தேடிக் கண்ணனின் கால் பணிந்த பாண்டவன் அர்ஜுனன், வெற்றி பெற்றான்,ஆணவத்தோடு தலைமாட்டில் அமர்ந்த துரியன் தோல்வியுற்றான் என்ற செய்தியை ஒப்பு நோக்கலாம்.

    அண்ட பேரண்டத்தையெல்லாம் படைத்தவன் ஆண்டவனே அனைத்திற்கும் முதலாளி. அவனது பிரதிநிதியாகத் தான் அரசர்கள் தமக்குரிய நிலப்பரப்பை ஆண்டார்கள். இருப்பினும் அந்த செல்வங்களெல்லாம் தம்முடையவை என்றே மயங்கி அவற்றைக் காப்பதற்கும்,மேன்மேலும் பிறருடையவற்றை அடைவதற்கும் விரும்பி தமக்குள் பகை மூண்டு சண்டையிட்டுக் கடைசியில் எல்லோரும் மாண்டார்கள். இதுவே உலக வரலாறு. நமது பாரத இதிகாசம் இது போன்றதொருப் பங்காளிச் சண்டையை மிகவும் ஆழமாக விவரிக்கின்றது. அதன் பின்னணியில்,எத்தனையெத்தனைத் தத்துவங்களையெல்லாம் வியாச முனி உரைத்திருக்கிறார், கீதையும்,விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் உட்பட !

    வந்து தலைப்பெய்தோம்- நீயே கதியென்று கூட்டம் கூட்டமாய் உன் சந்நிதியில் வந்து தொழுதோம் (திருப்பதிக்கு அப்படித்தானே செல்கிறோம் !) இராஜாதி இராஜர்களெல்லாம், கண்ணனுடைய உதவியைப் பெறும் நோக்கில் வந்து,தங்கள் ஆளுமையிழந்து,ஆண்டவன் அடிமையெனக் காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆயர்குலப் பெண்களோ,கண்ணனுடைய அருட்பார்வையொன்றே வேண்டுமென விரும்பி அவன் காட்டில் காலருகேக் காத்திருக்கிறார்கள். அரசர்களைக் காட்டிலும் கண்ணனிடம் அன்பு இந்த அடியவர்களுக்கே அன்றோ ? கண்ணனுக்கும் இவர்களிடமே அக்கறையன்றோ ?

    அக்காலத்தில் அரசர்கள் நாடு துறந்தால்,காடேகி வானப்பிரஸ்தம் என்னும் தவ வாழ்வு நிலையை அடைவார்கள். ஆயினும் இவ்விடத்தில் அந்த அரசரைப் போலல்லாமல், இந்த ஆயர்குலப் பெண்கள் தம்முடைய அகந்தையான எண்ணங்களைக் கைவிட்டு, கண்ணனே சரணம் என்று அவன் கட்டிலின் கீழ் காத்திருக்கிறார்கள். "இவ்வளவு முயற்சி செய்து உன்னடியில் வந்து சேர்ந்தோம், அத்துடன் எங்கள் எண்ணம் நிறைவேறவில்லை ! உன் கண்களைத் திறந்து எங்களைப் பார்த்தருள் கண்ணா!"என்று கேட்கிறார்கள்.

    காடேகிய இராமனைத் திரும்பவும் அழைத்துச் சென்று முடிசூட்டிவிடும் எண்ணத்தில் வந்த பரதனோ , அண்ணலது பாதுகைகளைப் பெற்றுத் திரும்ப நேரிடுகின்றது. வனவாசம் முடிந்து இராமன் திரும்பி வரும் காலம் வரை முள் மேல் நடப்பது போன்ற இராஜ்யபாரத்தைச் சுமக்க நேரிடுகின்றது. அது இராமனுடைய விருப்பமென்பதால் பரதன் அதைத் தன் சிரமேற்கொண்டு செய்தான்.ஆனால் இராமனோடே கூட இருந்த இலக்குவனால் அண்ணனுக்கு எல்லாப் பணிவிடையும் செய்து திருப்தியாக வாழ முடிகின்றது. அதுவும் இறைவன் திருவுளமே !
    அதுபோலத்தான் இந்த ஆயர்குலச் சிறுமிகளும், தங்களுடைய இருப்பிடத்தை விட்டுவிட்டு, மற்ற எண்ணங்களைத் துறந்து கண்ணன் தொண்டிற்கே தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு அவன் கட்டிலின் கீழ் குழுமியிருக்கிறார்கள். அவனது அருட் பார்வைக்காகக் காத்திருக்கிறார்கள் என்று ஆண்டாள் அறிவிக்கிறாள்.

    கிங்கிணி வாய்ச்செய்த தாமரை செங்கண் - குழந்தைகளின் இடுப்பில் காட்டப்படும் அரைஞாண் கயிற்றில் கோர்க்கப்படும் மணிக்கு கிண்கிணி என்று பெயர். அந்தச் சதங்கையின் மணிகள் திறந்தும் திறவாதிருத்தல் போல் மலர்ந்தும் மலராதத் தாமரை மலர் போன்ற சிவந்த அழகிய கண்கள். இறைவனுடைய கண்ணழகைப் பாடப் பாட இந்தப் புலவர்களுக்கு அலுப்பே தட்டாது ! எத்தனையெத்தனை உவமானங்கள் தருகிறார்கள் ! எல்லாம் அவனது கருணை பொழியும் பார்வையைக் கருதியே அன்றோ ?

    சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ- வாடிய பயிரைக் கண்டு நீர் வார்க்கும் எண்ணத்தில் கருமேகமானது ஒரேயடியாக மழையைக் கொட்டி விட்டாலும், அது பயிரைச் சேதமாக்கிவிடுமல்லவா ? அது போலத்தான், ஆண்டவன் அருளை எதிர்பார்த்து எஞ்சியிருக்கும் அடியார்க்கு, மெல்ல மெல்ல அவனது கருணைப் பார்வை கிட்ட வேண்டும். ஒரேயடியாக இறைவன் பார்த்தாலும், அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அடியவருக்கு இருக்காதல்லவா ? ஆகையால் தான் இறைவனும் மெதுவாக கண் திறந்து பார்ப்பான்.

    திங்களும் ஆதித் தியனும் போல் அம்கண் இரண்டு
    - - நிலவின் குளிர்ச்சியும், கதிரவனின் ஒளியும் பொருந்திய அழகிய கண்கள்.
    நிலவு மறையாமல், சூரியனும் வானில் உதிக்கின்ற பொழுதில், தாமரை மலர்கள் மொட்டவிழ்ந்தும், முழுதும் மலராமல், இருக்கக் கூடியகாட்சியை இங்கு ஒப்பு நோக்கலாம். பரந்தாமனின் கண்களோ சூரியனையும், நிலவையும், தாமரையையும் போலவும் அவற்றின் மேலாகவும் அழகானவை. எனவே அவனது கண்கள் திறந்தும் திறவாமல் இருக்கும் நிலையோ, அடியவருக்குக் கிறக்கமூட்டி இராசக்ரீடை போன்ற இன்ப நிலைக்குக் கொண்டு சென்று விடும். ஆனால் அடியார்கள் வேண்டுவது அதைப் போன்ற காமாதி இன்பமல்ல. வீடுபேற்றினை நல்கக் கூடிய, முழு அருட்பார்வையினை.எனவே தான் இரண்டு கண்களும் நன்றாய்த் திறந்து, பிள்ளையை அன்னை நோக்குவது போல் அன்புடன் நோக்கச் சொல்கிறாள், ஆண்டாள் !

    நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தே
    - "உன் மீதில் அன்பு செலுத்தி என்றும் உன் தொண்டிற்கே இருக்கின்ற நாங்கள் வேண்டுமுன்பே எங்களுக்கு அருள் பொழியவேண்டிய கண்ணா, நாங்கள் எதற்காக வந்திருக்கிறோமென்று கேள்வி கேட்பது போல விழிகளை மூடியிருந்தால் , அது எங்களுக்கு உண்டாகியுள்ள ஏதோவொரு சாபத்தின் காரணமாகவே இருக்கக்கூடும். அந்த சாபம் தீர வேண்டுமென்றாலும், நீயே உனது கண்களை மெல்ல மெல்லத் திறந்து எங்களை நன்றாகக் பார்த்து அருள வேண்டும்" என்று வேண்டுகிறாள்.
    கண்ணனின் அருட்பார்வை பட்டால் நம் பிறப்பிறப்பு சாபம் தீரும் வீடுபேறு வாய்க்கும்.

    எம்மேல் விழியாவோ, எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து
    - இவ்வாறு மூன்று முறை எங்களைக் காப்பாற்று காப்பற்று காப்பாற்று என்று திடமான உறுதியுடன், நம்பிக்கையுடன்,கண்ணன் திருவடியில் சரண் புகுகின்றாள் ஆண்டாள்.
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள்

    இகவுலகில் பிறந்து உழல்கின்ற நாங்கள்,
    தேகமும் சீவனும் ஒன்றெனக் கொண்டும் ,
    மிகச் சுதந்திரமானவர் யாமெனக் கொண்டும் ,
    பகவனல்லாத ஓர் தலைமையைக் கொண்டும்,
    சோகத்தின் தீர்வு சொந்தமெனக் கொண்டும்,
    பக்தியில் ஆழ்ந்துனைச் சரணம் செய்யாமல்,
    முக்திக்கு வழிகள் வேறெனக் கொண்டும்,
    மோகத்தில் தோய்ந்து சிற்றின்பம் கண்டும்,
    சக்தி படைத்தவர் யாமெனக் கொண்டும்,
    பாகவதர் தமக்கு இழிச்செயல்கள் செய்தும்,
    அகந்தையினால் செயும் குற்றங்கள் எட்டை,
    உகந்து விட்டொழித்துன் திருவடி தன்னில்
    அகத் தூய்மையுடன் சரண் புகுகின்றோம்!
    மோகத்தை ஊட்டுமுன் கிறக்கப் பார்வை
    பகவானே நாங்கள் வேண்டவில்லை-எம்
    அகவிருள் அகற்றும் கதிரினைப் போன்றும்,
    அகங்குளிரச் செயும் நிலவினைப் போன்றும்,
    மிகக்கருணை பொங்கும் இரு விழியாலும்
    அகமகிழ்ந்தே அன்னை பிள்ளைகள் தம்மை,
    நோக்குதல் போன்றே நோக்கிட வேண்டும் !
    இகவுலகில் தொடரும் பிறவிகள் என்னும்,
    மிகக்கொடிய எங்கள் சாபத்தைப் போக்கி,
    பகவானே எம்மைக் கடைத்தேற்ற வேண்டும் !

    அம் கண் மா ஞாலத்து அரசர் - பரமனது விளையாடல் அரங்கேறும் இகவுலகில் பிறந்து, அகந்தையும் மமதையும் கொண்டு மயங்கும் உயிர்கள். ஆடிய ஆட்டமென்ன,பேசிய வார்த்தையென்ன என்று நாம் செய்யும் அனைத்துமே பங்கப்பட்டுக் கடைசியில் கடவுளை அண்டுகிறோமல்லவா ? அதுதான் இங்கு சீவாத்மாக்களை அபிமான பங்கமாய் வந்த அங்கண்மா ஞாலத்து அரசர் என்கிறாள்.

    செல்வம் என்றைக்கும் ஓரிடத்தில் நிலைத்திருக்காது. "உன்னை விட்டு ஓர் நாள் செல்வோம், செல்வோம் !" என்றே சொல்லுவதால் அவை செல்வம். தரித்திரமும் அப்படியே. ஓரிடத்திலேயே "தரித்து இரோம் ! தரித்து இரோம் !" என்றே சொல்லும். ஆயினும் நாடு, படை, காவல், சொந்தம் பந்தம்,சந்தானம், தனம், தானியம், என்று எல்லாமே தம்மிடம் என்றும் நிலைத்து இருக்கும் செல்வம் என்று எண்ணி இறுமாப்பாய் வலம் வந்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போகிறவர்களை இந்த உலகம் பார்க்கத்தானே செய்கின்றது ? எல்லாம் நன்றாக இருக்கும் போதே இறைவன் மீதில் உண்மையான பக்தியோடு, உளத்தூய்மையோடும் இருக்காதவர்கள், தமக்கு ஒரு துன்பம் வந்த பின்பே ஆண்டவனை நாடி ஓடுவதைப் பார்க்கிறோம் அல்லவா ? அப்போதும் "என்னை இப்படிச் செய்து விட்டாயே என்று இறைவனையே குற்றவாளிக் கூண்டில் அல்லவா ஏற்றி நிறுத்துகிறோம் ?

    அபிமானம் - பிறவிப்பிணியில் சிக்கி இகவுலகில் உழலும் உயிர்கள் தாமே பெரியவர் என்று அகந்தை கொண்டு செய்யும் குற்றங்கள்
    1) உயிர் உறையும் உடலே சீவாத்மா என்று கருதி அதுவே பெரிதென மயங்குவது
    2) எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி தாம் எல்லாம் செய்யக் கூடியவர் என்று எண்ணுதல்
    3) பரமாத்மாவையல்லாது பிறரைப் பணிந்துத் தொழல்
    4) தமக்கு ஏற்படும் இக்கட்டிலிருந்து காப்பவர் இறைவன் ஒருவனே என்று அறியாமல் சுற்றம், உற்றார் நட்பு என்று மயங்குதல்
    5) பக்தியுடன் கூடிப் பரமனைச் சரணம் செய்வதே, வீடுபேற்றுக்கு வழி என்று தெளியாமல், மற்ற வழிகளைத் தேடுதல்.
    6) நிலைத்திருக்கக் கூடிய ஆன்ம சம்பந்தமான பேரின்பமாம் இறைவனை நாடாமல், அழிந்து விடக் கூடிய தேக சம்பந்தமான உலகத்தின் சிற்றின்பங்களை நாடி மயங்குதல்
    7) இறைவன் துணையில்லாது நம்மால் எதுவும் செய்ய இயலாது என உணராமல், தாமே தனித்து சக்தி படைத்தவர் என்று மயங்குதல்.
    8) இறைவனின் அடியவர்களுக்கு மதிப்பளிக்காமல், அவர்களைத் துன்பப்படுத்துதல். இவையாவும் மாயையில் அகப்பட்ட அகந்தையின் காரணமாய், உயிர்கள் செய்கின்ற குற்றமாகும் .

    பங்கமாய்- இப்படிப்பட்ட அபிமானங்களென்னும் குற்றங்களில் சிக்கி உழலும் சீவாத்மாவானது, இறையடியார் குழுவினருடைய நட்பினால், அவர்களுடன் ஒன்றாகி இறைப்பணி செய்யும் வாய்ப்பினால், ஆச்சார்யரின் உபதேஸத்தால் , தன்னுடைய சுயரூபத்தை உணர்ந்து, இறைவனைச் சரணம் செய்தல்.

    வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே தலைப்பெய்தோம்
    - இந்தக் குற்றங்களை நீக்கினால் தான் அடியவரால் பரமனை சரணம் செய்ய இயலும். பக்தர்கள் மட்டுமல்ல,தீயவர்களும் ஆண்டவனை எப்போது எண்ணியேயிருப்பார்கள், எப்படி அவனை மட்டம் தட்டுவது என்று . அவனைச் சரணமடைவது நல்லுள்ளம் வாய்த்த அன்பர்களுக்கு எளிது. தீய எண்ணம் மிகுந்தவர்களுக்கு அத்தீயெண்ணங்கள் தொலைந்தால் தான் சரணம் செய்யும் அறிவு வாய்க்கும். இல்லாவிட்டால், மறவருள் தான் பெற நேரிடும். இறைவனே அனைத்திற்கும் ஸ்வாமி என்பதையும் நாமனைவரும் அவன் திருவடிக்குத் தொண்டிழைக்கும் சேவகர்கள் என்றும் உண்மை உணர்ந்த பின்பு, மீண்டும் ஸம்ஸார ஸாகரத்திற்குத் திரும்ப மனம் விழையாது. தனது உண்மை சொரூபத்தைக் கண்டு கொண்ட ஆன்மாவானது வீடுபேற்றையே விரும்பி இறைவனையே சரணம் புகும்.

    கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் செங்கண் சிறுச்சிறிதே
    - இறைவன் தன் அருட்பார்வையினை மெல்ல மெல்ல அடியார்களுக்குத் தருதல்.
    சீவாத்மாக்கள் செய்யும் தவறுகளையெண்ணி இறைவனது பாதி கண்கள் மூடியிருக்குமாம். ஆயினும் அவர்களது அபயக்குரல் கேட்பதால், அவர்களுக்கு அருள் செய்ய எண்ணுவதால் பாதி கண்கள் திறந்திருக்குமாம்.

    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    - இறைவனது தண்டிக்கும் பார்வைக்கு சூரியன் ஒப்பு, அருளும் பார்வைக்கு சந்திரன் ஒப்பு. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்பவன் இறைவன். சீவர்களின் மனதிலுள்ள அகந்தைக் குப்பைகளை, பாவ எண்ணங்களை,தீய குணங்களை அழிக்க அவனது கதிர்ப்பார்வையைப் பாய்ச்சுவான். தன்னைச் சரணமென்று நம்பி வந்த அடியவரை அன்புடன் ஏற்று, அவர்களுக்கு அருளென்னும் குளிர் நிலாப்பார்வையைக் காட்டுவான்.

    எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர்
    - நிலைத்த ஆனந்தமாகிய பரவுலகை நீங்கி இகவுலகில் வந்து பிறக்கும் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவியெடுப்பதே சாபம். இறைவன் அருட்பார்வையே சாப விமோசனம். அதுவே வீடுபேறு வழங்கவல்லது.
     
    periamma likes this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ரொம்ப அழகான பாசுரம்.பவித்ரா, உங்கள் விளக்கம் மிக அருமையான தொகுப்பு.எனக்கு மேற்கொண்டு என்ன எழுதுவது என்று புரிய வில்லை.இருந்தும் எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    'அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கம்' என்றவுடன் நினைவுக்கு வருவது நம்மாழவாரின் திருவாய் மொழிதான்.இந்த பாசுரம் ஆண்டாளின் 22 வது பாசுரத்தின் ஆதார சுருதி என்று சொல்லலாம் .
    " ஒரு நாயகமாய் ஓட உலகுடனாண்டவர் ,
    கரு நாய் கவர்ந்த காவலர் சிதைகிய பானையர் ,
    பெருநாடு காண இம்மையில் பிச்சை தாம் கொள்வர் ,
    திருநாரணன் தாள் கமலம் பெறச் சிந்தித்த துய்மினோ?"
    இதன் விளக்கம்:-
    ஏக சக்ராதிபதி ஒருவன்.சிற்றரசர் கப்பம் கட்டுமளவுக்கு உயர்ந்த சக்கரவர்த்தி.மாற்றரசரிடம் மணி முடியை இழந்தான்.எல்லாம் பறி போனது.ஊர் ஊராகச் சுற்றினான்.கொடும் பசி .பிச்சை எடுக்கலாம் என்றால் பாத்திரம் கூட இல்லை.தெருவில் யாரோ தூக்கி எறிந்த உடைந்த மண் சட்டி கண்ணில் பட்டது.அதை எடுத்துக்கொண்டு உடம்பைப் போர்த்திக்கொண்டு ராப்பிச்சைக்குப் போனான்.கொஞ்சம் சோறு குழம்பு கிடைத்தது.வாய் பறக்கிறது..எங்கேயாவது உட்கார்ந்து சாப்பிடலாம் என்று வீதியில் நடக்கிறான்.இருட்டில் தெருவில் கரு நாய் படுத்திருப்பது கண்ணுக்குத் தெரியவில்லை.காலால் மிதித்து விட்டான்.நாய் காலைக் கவ்வியது மண் பாண்டத்தோடு அன்னம் கீழே விழ,சோற்று வாயில் மண் .
    முன்பு சக்ரவர்த்தியை இருந்த போது சிற்றசர்கள் இவனது திருவடியைச் சேவிப்பர்.இவனது பாதம் முழுதும் சிற்றசர்களின் பட்டு பீதாபாரம், பொன் மணிகளால் மூடப்பட்டு இருக்கும்.சிற்றசர் கண்ணுக்கே அரசன் திருவடி புலப்படாதாம்.அப்படிப்பட்ட திருவடியை இன்று நாற்சந்தியிலுள்ள நாய் கவ்விக் கிடக்கிறது.

    சக்ரவர்த்திக்கே இந்த நிலை என்றால் சாதாரண கோபியரின் நிலை என்ன?நாராயணனை திருவடி பற்றுவது தவிர வேறு வழி இல்லை.
    விஷ்ணுவும் கோமானும் சமமாகக் கருதப் படுவர்.அப்படிப்பட்ட அரசனுக்கே இந்த நிலை என்றால் மற்றவரின் நிலை என்ன/
    செங்கண் சிறுச் சிறிதே _ பவித்ரா, நீங்கள் குறிப்பிட்ட பெரிய வாச்சான் பிள்ளையின் வ்யாக்யானம் மிக அருமை.நொந்து போன உயிரிலே வெள்ளமாக ஊற்றாமல் சிறிது சிறிதாகவூற்ற வேண்டும்.
    ஜப்பானின் சொட்டு நீர்ப் பாசனம் நினைவுக்கு வருகிறது.நெல்லுக்கு குறைவான் நீர் போதும். கரும்புக்கு அதிக நீர் தேவை. இத்தனை காவிரி பிரசனைக்கு நடுவில் தஞ்சை நெல் பிழைப்பது சொட்டு நீரால் தான்.
    நாம் எப்போதுமே கடைக்கண் பார்வைதான் வேண்டுகிறோம். முழு பார்வையையும் தாங்கும் சக்தி நமக்கு இல்லை.அந்த ஒளி வெள்ளத்தை நம்மால் தாங்க இயலாது.கடவுள் திரு உருவங்கள் முன் நம் கண்கள் தானாக மூடுவது இதனாலோ/திருவேங்கடத்தானின் திரு நேத்ரம் முக்கால் வாசி மறைக்கப்பட்டுள்ளதும் இதனால் தானோ?

    எங்கள் மேல் சாபம்
    எங்கள் மேல் பாபம் என்று சொல்லவில்லை.
    பாபம் பிராய சித்ததால் அழியக் கூடும்.சாபம் என்பது அனுபவித்தே கழிக்கப்பட வேண்டும்.அப்படிப்பட்ட சாபம் கூட நாராயணன் திருவடி சேவையால் அழியும் என்ற பொருள்.
    விவாஹத் தடை ,குழந்தை இன்மை போன்ற பித்ரு சாபத்தால் ஏற்படும் இன்னல் களுக்கு இந்த 22 பாசுர பாராயணம் பரிஹாரமாகக் கருதப் படுகிறது.
    பவித்ரா, நரஸிம்ஹ மூர்த்தியை சேவிக்கக் கிளம்பலாம், வாருங்கள்.

    ஜெய்சாலா 42
     
    periamma likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அந்தக் கரு நாய் தனது வயிற்றில் கருவைச் சுமந்திருந்த தாய் நாயாகவும் இருந்ததினால், அந்த அரசன் காலை இன்னும் வெறியோடு கடித்தது என்று பொருள் சொல்லி,அவ்வரசனுடைய பரிதாபகரமான நிலையை நன்றாக விளக்குகிறார்களல்லவா பெரியோர்கள் ?

    முற்றிலும் உண்மை !

    அருமையான தகவல்கள் ! மிக்க நன்றி !

    தாராளமாக !:)
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அகந்தையினால் செயும் குற்றங்கள் எட்டை,
    உகந்து விட்டொழித்துன் திருவடி தன்னில்
    அகத் தூய்மையுடன் சரண் புகுகின்றோம்
    பரிகாரப் பாசுரம் .புதிய தகவல்
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆம் பெரியம்மா, இவை புதிய பயனுள்ள தகவல்களே !
     

Share This Page